“எல்லோரும் ஓர் நிறை…எல்லோரும் ஓர் விலை!”-இன்று சர்வதேச மனித உரிமைகள் தினம்:

“எல்லோரும் ஓர் நிறை…எல்லோரும் ஓர் விலை!”-இன்று சர்வதேச மனித உரிமைகள் தினம்:

ண்டுதோறும் டிசம்பர் 10-ம் தேதி, “சர்வதேச மனித உரிமைகள் நாள்” (Human Rights Day) கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு உலக மனித உரிமைகள் பிரகடனத்தின் 76-வது ஆண்டாகும். சாதி, மதம், இனம், நிறம், பாலினம், வயது அல்லது சமூகப் பின்னணி என எதையும் பொருட்படுத்தாமல், நம் ஒவ்வொருவருக்கும் சொந்தமான உலகளாவிய உரிமைகளைப் பற்றிச் சிந்திக்க வேண்டிய மிக முக்கியமான தருணம் இது.

வரலாற்றுப் பின்னணி

இரண்டாம் உலகப் போரின் கோரங்களுக்குப் பிறகு, மனித குலத்தின் மீதான நம்பிக்கையை மீட்டெடுக்கும் வகையில், 1948-ம் ஆண்டு டிசம்பர் 10 அன்று பாரிஸில் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை கூடியது. அப்போது, அமெரிக்க அதிபரின் மனைவி எலினா ரூஸ்வெல்ட் தலைமையிலான குழு, 30 பிரிவுகளின் கீழ் மனித உரிமைகளை அடையாளம் கண்டு ‘உலக மனித உரிமைகள் பிரகடனத்தை’ சமர்ப்பித்தது. 58 நாடுகளின் அங்கீகாரத்துடன் இது ஏற்கப்பட்டது. இந்த நாளையே 1950 முதல் நாம் மனித உரிமைகள் நாளாகக் கொண்டாடி வருகிறோம்.

உலகிலேயே 500-க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட ஆவணம் என்ற பெருமையும் இந்த மனித உரிமைப் பிரகடனத்திற்கு உண்டு.

பிரகடனம் சொல்லும் முக்கிய உரிமைகள் மனித உரிமைகள் பிரகடனத்தின் 30 சட்டப்பிரிவுகளும் ஒவ்வொரு தனிமனிதனின் சுதந்திரத்தை வலியுறுத்துகின்றன. அவற்றில் சில முக்கியமானவை:

  • பிரிவு 1: அனைத்து மனிதர்களும் சுதந்திரமாகவும், கண்ணியத்திலும் உரிமைகளிலும் சமமாகவும் பிறந்தவர்கள்.

  • பிரிவு 3: ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்வதற்கும், சுதந்திரம் பெறுவதற்கும், அவரவர் வாழ்வின் பாதுகாப்பிற்கும் உரிமை உண்டு.

  • பிரிவு 5: எந்த ஒரு நபரும் மனிதாபிமானமற்ற அல்லது இழிவான தண்டனைக்கு உட்படுத்தப்படக்கூடாது.

  • பிரிவு 9: எந்த நபரையும் தன்னிச்சையாகக் கைது செய்யவோ, நாடு கடத்தவோ கூடாது.

  • பிரிவு 17.2: தனி மனிதனின் சொத்து தன்னிச்சையாகப் பறிக்கப்படக் கூடாது.

நிதர்சனமும் சவால்களும் சட்டம் இவ்வளவு தெளிவாக இருந்தும், நடைமுறையில் மனித உரிமைகள் முழுமையாகப் பேணப்படுகிறதா என்பது கேள்விக்குறியே.

சமீபத்தில் உத்தரப் பிரதேசத்தில் புல்டோசர்கள் கொண்டு வீடுகள் இடிக்கப்பட்டதும், அதைக் கண்டித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததும் நாம் அறிந்ததே. அதேபோல, தமிழகத்தின் சில கிராமங்களில் இன்றும் இரட்டைக் குவளை முறை இருப்பதும், மாணவர்களுக்குப் பொருட்கள் தராமல் புறக்கணிப்பதும் தீண்டாமையின் மிச்சங்களாகச் செய்திகளில் வருகின்றன.

நாடு, மொழி, ஜாதி, இனம், பொருளாதாரம் எனக் காரணம் காட்டி ஒருவரின் உரிமைகள் பறிக்கப்படக்கூடாது. குடிநீர், கல்வி, மருத்துவம், சுகாதாரம் ஆகிய அடிப்படைத் தேவைகள் மறுக்கப்படுவதும் மனித உரிமை மீறலே.

மொத்தத்தில் மனித உரிமை என்பது யாராலும் நமக்குத் தூக்கி வழங்கப்பட்டதல்ல; அது நாம் பிறக்கும்போதே நம்முடன் பிறந்தது. ஒரு குடிமகனின் உரிமையைப் பறிக்க அரசுக்குக் கூட அதிகாரம் இல்லை.

“மற்றவர்களிடம் இருந்து நாம் என்ன மரியாதையை, உரிமையை எதிர்பார்க்கிறோமோ, அதையே அவர்களுக்கும் நாம் தர வேண்டும்.” சக மனிதனைச் சமமாக மதித்து, மனிதநேயத்துடன் வாழ உறுதி ஏற்பதே இந்த நாளின் உண்மையான நோக்கமாகும்.

நிலவளம் ரெங்கராஜன்

Related Posts