ஆணவம் மடியும்.. ஆசைகள் துளிர்க்கும்..-‘லிட்டில் விங்ஸ்’ பிரஸ்மீட் நியூஸ் & விமர்சனம்!

ஆணவம் மடியும்.. ஆசைகள் துளிர்க்கும்..-‘லிட்டில் விங்ஸ்’ பிரஸ்மீட் நியூஸ் & விமர்சனம்!

71-வது தேசிய விருதை வென்று ஒட்டுமொத்த இந்தியத் திரையுலகையுமே திரும்பிப் பார்க்க வைத்துள்ள ‘லிட்டில் விங்ஸ்’ (Little Wings) குறும்படம், வரும் பிப்ரவரி 27-ஆம் தேதி மாலை 5 மணி முதல் ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ யூடியூப் தளத்தில் வெளியாகிறது. இதையொட்டி சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் படக்குழுவினர் பகிர்ந்துகொண்ட சுவாரசியமான தகவல்களின் தொகுப்பு இதோ:

கொரோனா தந்த கரு: இயக்குநர் நவீன் பகிர்வு

இயக்குநர் நவீன் பேசுகையில், “இந்தக் கதை கொரோனா காலத்தில் உருவானது. மரணங்கள் மலிந்து கிடந்த அந்தச் சமயத்தில், மனிதர்களின் ஆசைகளும் அவர்களோடவே மரித்துப் போவதை உணர்ந்தேன். அந்தப் பாதிப்பில் பிறந்ததுதான் இந்தச் சேவல் தொடர்பான கதை. என் ஊரில் கணவனால் வதைக்கப்படும் பெண்களுக்கு, அவனது மரணம் ஒரு விடுதலையைத் தரும். இந்த இரண்டு புள்ளிகளை இணைத்துதான் திரைக்கதை அமைத்தேன்,” என்றார். மேலும், எழுத்தாளர் கந்தர்வனின் எழுத்துக்கள் தனக்குத் தூண்டுகோலாக இருந்ததையும், மறைந்த நடிகர் காளிதாஸ் மற்றும் ஒளிப்பதிவாளர் மருது ஆகியோரின் பங்களிப்பையும் நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்தார்.

30 லட்சத்தில் ஒரு குறும்படம்!

பொதுவாகக் குறும்படங்கள் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்படும் நிலையில், ‘லிட்டில் விங்ஸ்’ சுமார் 30 லட்சம் ரூபாய் பட்ஜெட்டில், ஒரு சினிமாவுக்கு இணையான தரத்துடன் (Live Sound தொழில்நுட்பத்தில்) உருவாக்கப்பட்டுள்ளது. இதன் தயாரிப்பாளர் திலானி ரவீந்திரன் (கனடா) மற்றும் இணை தயாரிப்பாளர் ராஜூமுருகன் ஆகியோரின் துணிச்சலை எடிட்டர் பிலோமின் ராஜ் வெகுவாகப் பாராட்டினார்.

முக்கியப் புள்ளிகளின் கருத்துக்கள்:

  • இயக்குநர் ராஜூமுருகன்: “நவீன் ஒரு சிறந்த வாசிப்பாளர். இந்தப் படம் பசி, உறவுச் சிக்கல் மற்றும் கலாச்சாரம் எனப் பல பரிமாணங்களைப் பேசுகிறது. ‘ஜோக்கர்’ படத்திற்குப் பிறகு அதே போன்ற ஒரு ஆத்மார்த்தமான திருப்தியை இந்தப் படம் தருகிறது.”

  • தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு: “உணவுக்காக நடக்கும் சண்டைகள் நம் ஊர்களில் சகஜம். இந்தப் படம் மிக ஆழமான கருத்துக்களைச் சொல்கிறது. புதிய திறமையாளர்களை அடையாளம் காணவும், அவர்களுக்கு மேடை அமைத்துக் கொடுக்கவுமே ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பாக இக்குறும்படத்தை வெளியிடுகிறோம்.”

படக்குழுவினர்:

இந்தச் சந்திப்பில் நடிகை மணிமேகலை, நடிகர் ராம்ஜி, இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி, கலரிஸ்ட் ரங்கா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

விமர்சனம்:

ஆணாதிக்கத்தின் பிடியில் சிக்கியிருக்கும் ஒரு பெண்ணின் மௌனப் போராட்டத்தை, ‘லிட்டில் விங்ஸ்’ குறும்படம் மிக வலிமையாகப் பதிவு செய்திருக்கிறது. படுத்த படுக்கையாக இருக்கும் கணவனைப் பராமரிக்கும் மணிமேகலைக்கு, அவள் வளர்க்கும் ஒரு சேவல் தான் ஒரே பிடிமானம்; ஆனால், அந்தச் சேவலையும் சமைத்துச் சாப்பிடத் துடிக்கும் கணவனின் அதிகார மனோபாவம், வறுமையையும் தாண்டி ஒரு பெண் சந்திக்கும் உளவியல் ரீதியான ஒடுக்குமுறையை அப்பட்டமாகத் தோல் உரித்துக் காட்டுகிறது.

இயக்குநர் நவீன், வசனங்களை விட மௌனத்திற்கும் முகபாவனைகளுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து காட்சிகளைச் செதுக்கியுள்ளார். திலானி ரவீந்திரன் மற்றும் ராஜூமுருகன் தயாரிப்பில், 30 லட்சம் பட்ஜெட்டில் நேரடி ஒலிப்பதிவு (Live Sound) எனத் தொழில்நுட்ப ரீதியாகவும் மிரட்டியிருக்கும் இப்படம், 71-வது தேசிய விருதை வென்றதில் ஆச்சரியமே இல்லை. வரும் பிப்ரவரி 27-ஆம் தேதி ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் யூடியூப் சேனலில் வெளியாகவிருக்கும் இக்கதை, ஒவ்வொரு பெண்ணின் மனவலிமைக்கான ஒரு சாட்சியம்.

error: Content is protected !!