சிபிஎஸ்இ-யில் மும்மொழிக் கொள்கை-ஆங்கிலம் இனி ‘வெளிநாட்டு மொழி’!
இந்தியக் கல்வித் துறையில் ஒரு மைல்கல்லாகக் கருதப்படும் தேசியக் கல்விக் கொள்கை (NEP) 2020 மற்றும் பள்ளிக் கல்விக்கான தேசியப் பாடத்திட்டக் கட்டமைப்பு (NCFSE) 2023 ஆகியவற்றின் பரிந்துரைகள், வரும் 2026-27 கல்வியாண்டு முதல் சிபிஎஸ்இ பள்ளிகளில் முழுமையாக அமலுக்கு வரவுள்ளன. குறிப்பாக, 6-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்படும் புதிய மொழிப் பாடம் குறித்த அறிவிப்பு பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆங்கிலத்தின் புதிய அந்தஸ்து
இதுவரை சிபிஎஸ்இ பள்ளிகளில் ஆங்கிலம் ஒரு கட்டாய முதன்மைப் பாடமாகவே இருந்து வந்தது. ஆனால், புதிய விதிமுறைகளின்படி, மாணவர்கள் படிக்கும் மூன்று மொழிகளில் குறைந்தது இரண்டு மொழிகள் இந்திய மொழிகளாக இருக்க வேண்டும். இதன் விளைவாக, ஆங்கிலம் ஒரு ‘வெளிநாட்டு மொழி’ (Foreign Language) என்ற வரிசைக்குள் கொண்டு வரப்படுகிறது. அதாவது, ஒரு மாணவர் பிரஞ்சு அல்லது ஜெர்மன் மொழியைத் தேர்ந்தெடுப்பதற்குப் பதிலாக ஆங்கிலத்தை மூன்றாவது மொழியாகத் தேர்ந்தெடுக்கலாம். ஆனால், இதனுடன் இரண்டு இந்திய மொழிகளைப் படிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:
-
6-ஆம் வகுப்பு முதல் தொடக்கம்: 2026-27 கல்வியாண்டில் 6-ஆம் வகுப்பு சேரும் மாணவர்களுக்கு இந்த மும்மொழிக் கொள்கை கட்டாயமாகும்.
-
10-ஆம் வகுப்பு வரை நீட்டிப்பு: இந்த மூன்று மொழிகளும் 10-ஆம் வகுப்பு வரை தொடரும். 2031-ல் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள், மூன்று மொழிப் பாடங்களுக்கும் தேர்வு எழுத வேண்டியிருக்கும்.
-
பிராந்திய மொழிகளுக்கு முன்னுரிமை: தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், குஜராத்தி, பெங்காலி உள்ளிட்ட 9 இந்திய மொழிகளுக்கான புதிய பாடப்புத்தகங்களை சிபிஎஸ்இ தயார் செய்து வருகிறது.
-
தொடர்புத் திறன் மேம்பாடு: மூன்றாவது மொழியை (R3) மாணவர்கள் எளிதாகக் கற்கும் வகையில், ஆரம்பக் கட்டத்தில் அடிப்படைத் தொடர்புத் திறன்களுக்கு (Communication Skills) அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும்.
ஏன் இந்த மாற்றம்?
இந்தியாவின் பன்முகத்தன்மையையும், கலாச்சார வேர்களையும் மாணவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்பதே இதன் நோக்கம். மல்டி-லிங்குவலிசம் (Multilingualism) எனப்படும் பன்மொழி அறிவு, குழந்தைகளின் மூளை வளர்ச்சியைத் தூண்டுவதோடு, புதிய சிந்தனைத் திறனையும் வளர்க்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. ஆங்கிலத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்துவதோடு, தாய்மொழி மற்றும் பிற இந்திய மொழிகளில் புலமை பெறுவது மாணவர்களின் எதிர்காலத்திற்கு வலுசேர்க்கும் என அரசு கருதுகிறது.
சவால்களும் எதிர்பார்ப்புகளும்
இந்த மாற்றம் மிகப்பெரியது என்பதால், பள்ளிகள் புதிய மொழி ஆசிரியர்களை நியமிப்பதிலும், கால அட்டவணையை மாற்றி அமைப்பதிலும் சவால்களைச் சந்திக்கலாம். இருப்பினும், இந்திய மொழிகளுக்குக் கிடைக்கும் இந்த அங்கீகாரம் வரவேற்கத்தக்கது.
இனி உங்கள் வீட்டுப் பிள்ளைகள் பள்ளியில் “How are you?” என்று கேட்பதோடு நிறுத்திவிடாமல், “நலமா?” என்றும், மற்றுமொரு இந்திய மொழியில் நலம் விசாரிக்கவும் பழகிவிடுவார்கள் என்பது உறுதி!
வாத்தீ அகஸ்தீஸ்வரன்


