இன்றளவும் விஸ்ரூபம் எடுத்த பிரகதீஸ்வரர் கோவில் உருவான கதை தெரியுமா?
தஞ்சை பெரிய கோவில் கட்ட முடிவெடுத்து வரைபடங்கள் தயார் செய்து , காஞ்சியிலிருந்து அனுப்புகிறார்கள். தஞ்சைகருகில் தேவரடியார்கள் வந்த வண்டி காவிரியாற்றில் குடை சாய்ந்து விடுகிறது. ஆனாலும் வரைபடங்களுக்கு எந்த பாதிப்பும் வராமல் அவற்றை காப்பாற்றுகிறார்கள். கோவில் கட்ட குஞ்சரமல்லர் நேர்த்தியான நிலத்தை தேர்ந்தெடுக்கிறார். நிலத்தை அளந்து எல்லைகளைத் தீர்மானிக்கிறார்கள். கோவில் கட்டத் தேவையான பாறைகளை நார்த்தா மலையிலிருந்து வெட்டிஎடுக்கிறார்கள். கோவில் கட்ட குஞ்சரமல்லரின் சீடர்களான குணவனும், இலத்தி சடையனும் அரும்பணிபுரிகிறார்கள்.ராஜ ராஜ சோழரால் தோற்கடிக்கப்பட்ட சேர நாட்டு முன் குடுமி அந்தணர்கள் போரால் அவரை வெல்ல முடியாது என்பதால் பைசாசங்களை அனுப்புகிறார்கள். அதிலிருந்து கருவூர்த்தேவர் சோழ ராஜரையும் தஞ்சையையும் காக்கிறார்.

திருவொற்றியூரில் இருந்து வடக்குப்பக்க எல்லையை காவல் காத்து வரும் இளவரசர் ராஜேந்திரர் போர்க் கைதிகளை, அவர்களின் விருப்பத்துடன் கோவில் பணிக்குத் தஞ்சைக்கு அனுப்புகிறார். சிற்பிகள் கோவிலுக்கு சிலை வடிக்க மாதிரிக்காக எல்லா ஊர்களிலிருந்தும் தளிச்சேரிப் பெண்கள் வருவிக்கபடுகிறார்கள். நடு நாட்டு பிராமணர்கள் மற்றும் தொண்டை நாட்டு பிராமணர்கள் தஞ்சைக்கு வருகிறார்கள். அதனை தஞ்சை பிராமணர்கள் விரும்பவில்லை மற்றும் அவர்களுக்கு எந்த உதவியும் செய்யாமல் விரட்டுகிறார்கள்.போர்க்கருவிகள் செய்யும் கருமார்கள் தாங்களும் சமுதாயத்தில் முதல் குடிகள் போல் நடத்தப்படவேண்டும் என்று அரசரிடம் முறையிடுகிறார்கள். அதற்க்கு அரசர் பொருத்திருக்குமாறு சொல்கிறார். அதனால் [எப்போதும் போர் பற்றியே சிந்திக்கும்] இளவரசர் ராஜேந்திரர் அரசர் மீது சிறு கோவம் கொள்கிறார்.
எல்லா தரப்பினரும் கோவில் கட்ட தாமாக முன்வந்து உதவுகிறார்கள். நார்த்தாமலையில் பறைகளை கணக்கிட கணக்கர்கள் தேவைபடுகிறார்கள். வைணவதாசன் அறிவுரை செய்தும் தஞ்சை அந்தணர்கள் கணக்கெழுத மறுக்கிறார்கள். அருண்மொழி பட்டன் நடுநாட்டு அந்தணர்களை கணக்கெழுத பணிக்கிறான். குஞ்சரமல்லர் சவுக்கு கட்டையில் சாரம் கட்டி கற்களை மேலே எடுத்துப் போகலாம் என்கிறார். குணவன் அதற்கு மாற்றாக மண்ணால் சுற்றுப்பாதை அமைத்து கற்களை மேலே கொண்டு செல்லலாம் என்று சொல்லி அதற்கு மாதிரி செய்து காண்பிக்கிறான்.கோவில் கட்ட போதுமான நிதி இல்லாமல் பற்றாக்குறை ஏற்படுகிறது மற்றும் மேலை சாளுக்கியம் சோழ நாட்டின் மேல் படை எடுக்க முயற்சிக்கிறது. இதனை தடுக்கும் பொருட்டு, ராஜராஜர் தலைமையில் படையெடுப்பு எற்படுகிறது. மேலைச் சாளுக்கியத்தை வென்று பெரும் பொருளோடு திரும்புகிறது சோழப் படை. கோவில் பணி நிறைவடையும் தருவாயில், லிங்கத்தை ஸ்தாபிப்பதில் பிரச்சனை உண்டாகிறது. கரூர்தேவர் முன்னின்று லிங்கத்தை ஸ்தாபிக்கிறார்.
கோவிலின் முதல் தளத்தில் 108 வகையான நாட்டிய காரணங்களை பஞ்சவன் மாதேவியாரை மாதிரியாகக்கொண்டு சிலை வடிக்கிறார்கள். 81 கரணங்கள் முடிந்த நிலையில் பாண்டிய ஆபத்துதவிகள் சிலர் ராஜராஜரைக் கொல்ல முயற்சிகிறார்கள், அந்த விஷ வாள் தாக்குதலை ராஜராஜரின் மனைவி பஞ்சவன் மாதேவி குறுக்கே புகுந்து வாங்கிக்கொள்கிறார். அதிலிருந்து மீண்டு தன உடல் பொலிவைத்தொலைத்து தஞ்சை காவல் தெய்வம் நிசும்ப சூதனியைப்போல் கோர உருவை அடைகிறார். எனவே அந்த சிலை அமைப்பு முற்றுப்பெறாமல் நிறுத்திவைக்கப்படுகிறது.
உச்சியில் கல் ஏற்றுவதற்காக அமைக்கப்பட்ட சுற்று மணற்குன்று மெல்ல அகற்றப்பட்டு, கோவில் கும்பாபிஷேகம் சிறப்புற நடைபெறுகிறது.கோவிலைப் பராமரிக்க நிலங்களை நிவந்தங்களாக ராஜராஜர் அளிக்கிறார். மற்றும் கோவில் கட்ட உதவியவர்கள் எல்லோர் பெயரையும், கோவில் சுவற்றில் வடிக்க உத்தரவிடுகிறார். கோவிலில் நடனமாடிய தலைக் கோலிகள் எல்லோர் பெயரையும் அவர்களின் ஊர்களையும் கோவில் சுவற்றில் வடிக்க சொல்கிறார்.சில காலம் கழித்து ராஜேந்திரருக்கு முடி சூட்டிவிட்டு ,உடையார்குடிக்கு குடிபெயர்கிறார் ராஜராஜர். மேலும் சில காலம் கழித்து ஒரு நாள் அமைதியாக அவர் உடலில் இருந்து ஒளிவடிவமாக உயிர் பிரிந்து தஞ்சை கோவில் கோபுரத்திற்கு செல்கிறது.

அப்பேர்ப்பட்ட இந்த அந்த கோவில் கட்டுமானத்தில் சுடு செங்கல் இல்லை.மரம் இல்லை, சொறிகல் என்ற பூராங்கல் இல்லை, மொத்தமும் கருங்கல். நீலம் ஓடிய சிவப்பு படர்ந்த கருங்கல். உயர்ந்த கிரானைட். இரண்டு கோபுரங்கள் தாண்டி, விமானம் முழுவதும் கண்களில் ஏந்திய அந்தக் கோவிலின் நீளமும், அகலமும், உயரமும் பார்க்கும் போது, வெறும் வண்டல் மண் நிறைந்த அந்தப் பகுதிக்கு இத்தனை கற்கள் எங்கிருந்து வந்தன, எதில் இறக்கினர், எப்படி இழுத்து வந்தனர், எத்தனை பேர், எத்தனை நாள், எவர் திட்டம், என்ன கணக்கு.இந்தக் கருங்கற்களை செதுக்க என்ன உளி, என்ன வகை இரும்பு, எது நெம்பி தூக்கியது, கயிறு உண்டா,கப்பிகள் எத்தனை, இரும்பு உண்டெனில், பழுக்கக் காய்ச்சி உரமேற்றும் உத்தி( Heat Treatment) தெரிந்திருக்க வேண்டுமே. இரும்பை சூடாக்கி எதில் முக்கினர், தண்ணீரிலா, எண்ணெயிலா, நெருப்பில் கனிந்த இரும்பை எண்ணெயில் முக்கும் கலை(Oil quenching) ஆயிரம் வருடங்களுக்கு முன்பே உண்டா…?
எத்தனை பேருக்கு எவ்வளவு சாப்பாடு. அரிசி, காய்கறி எங்கிருந்து, சமையல் பாத்திரம் எத்தனை. படுத்துறங்க எங்கு வசதி, மறைவு வசதிகளுக்கு நீர்த்துறை எது, மனிதருக்கு உதவியாய், யானைகள், மாடுகள், குதிரைகள், கழுதைகள் உண்டெனில், அதற்கு உணவும், அவற்றைப் பழக்கி உபயோகப்படுத்துவோரும் எத்தனைப் பேர்.அத்தனைப் பேரும் ஆண்கள்தானா, கோவில் கட்டுவதில் பெண்களுக்கு பங்குண்டா. தரை பெருக்கி, மண் சுமந்து, பளு தூக்குவோருக்கு மோர் கொடுத்து விசிறி விட்டு, இரவு ஆட்டம் ஆடி, நாடகம் போட்டு, பாட்டு பாடி, அவர்களும் தங்கள் பங்கை வழங்கியிருப்பரோ.
இத்தனை நடவடிக்கையில், உழைப்பாளிகளுக்கு காயம் படாதிருந்திருக்குமா, ஆமெனில், என்ன வைத்தியம், எத்தனை பேருக்கு, எவ்வளவு வைத்தியர். இத்தனை செலவுக்கும், கணக்கு வழக்கென்ன, பணப்பரிமாற்றம் எப்படி, பொன்னா, வெள்ளியா, செப்புகாசா. ஒரு காசுக்கு எத்தனை வாழைப்பழம். என்னவித பொருளாதாரம். உணவுக்கு எண்ணெய், நெய், பால், பருப்பு, மாமிசம், உப்பு, துணிமணி, வாசனை அணிகலன்கள் இருந்திருக்குமா?பாதுகாப்பு வீரர்கள் உண்டா, வேலை ஆட்களுக்குள் பிரச்சனையெனில், பஞ்சாயத்து உண்டா, என்ன வகை சட்டம்.எவர் நீதிபதி. இவை அத்தனையும், ஒரு தனி மனிதன்,ஒரு அரசன் நிர்வகித்தானா, அவன் பெயர் தான் அருண்மொழி என்ற ராஜராஜனா?

யோசிக்க யோசிக்க, மனம் மிகப் பெரியதாய் விரிவடைகிறது. இது கோவிலா, வழிபாட்டுத் தலமா. வெறும் சைவ சமயத்துக்குண்டான கற்றளியா. இல்லை. இது ஒரு ஆற்றங்கரை நாகரீகத்தின் வரலாற்றுப் பதிவு. திராவிடம் என்று வடமொழியில் அழைக்கப்பட்ட தமிழ் மக்களின் அறிவுத் திறமைக்கு, கற்களால் கட்டப்பட்டத் திரை. காலம் அழிக்க முடியாத சான்றிதழ். காவிரிக்கரை மனிதர்களின் சூட்சம குணத்தின் வெளிப்பாடு. விதவிதமான கலைகளின் மனித நுட்பத்தின் மனத் திண்மையின் ஒருமித்த சின்னம்.
முப்பத்தாறு அடி உயர ஒற்றைக்கல், இருவர் கட்டிப் பிடிக்க முடியாத அகலம். இதுபோல பல கற்கள், முன்பக்க கோபுரங்களிலும் தாங்கு பகுதியாக இருக்கிறது. திருச்சிக்கு சற்று தெற்கே உள்ள கீரனூர் தாண்டி இருக்கிற நார்த்தாமலையிருந்து வந்திருக்கிறது. கிட்டதட்ட அறுபது கிலோ மீட்டர். எப்படி கொண்டு வந்தனர். இவ்வளவு பெரிய கற்பாறைகளை. பல்சகடப் பெரு வண்டிகள்.பல சக்கரங்கள் பொருத்தப்பட்ட வண்டிகள், மாடுகள் இழுத்தும், யானைகள் நெட்டித் தள்ளியும் வந்திருக்கின்றன.அந்த வழியில் ஒரு ஆறு கூட இல்லை. மலை தாண்ட வேண்டாம். மணல் பகுதி இல்லை. சரியான, சமமான பாதை. வழியெல்லாம் மரங்கள். அந்த நார்த்தாமலையில், ஆயிரம் வருடத்துக் கோவிலும் இருக்கிறது. வெட்டிய இடத்திலேயே வேண்டிக் கொள்ள கோவில் கட்டியிருக்கின்றனர்.
எப்படி மேலே போயிற்று, இத்தனை உயரம், விமானம்?கட்ட கட்ட, வண்டிப்பாதையை கெட்டியான மண்ணால் அமைத்திருக்கின்றனர். இரண்டு யானைகள் எதிரும்,
புதிருமாய் போவதற்கான அகலத்தில் கற்பலகைகள், மனிதர்களாலும், மிருகங்களாலும் மேலே அந்த சுழல் பாதையில் அனுப்பப்பட்டன. உச்சிக்கவசம் வரை வண்டிப்பாதை நீண்டது. அதாவது, கலசம் பொருந்தும்போது விமானம் வெறும் களிமண் குன்றாய் இருந்திருக்கும்.
பிறகு…?

மெல்ல மெல்ல மண் அகற்றப்பட்டிருக்கும். ஆயிரக்கணக்கானவர்கள் தினமும் மண் அகற்றி,தொலைதூரம் போய் குவித்திருக்கின்றனர். குவிக்கப்பட்ட இடம் இப்போது இருக்கிறது. “சாரப்பள்ளம் என்ற இடத்திலிருந்து சாரம் அமைத்து” என்று சொல்கின்றனரே..வாய்ப்பே இல்லை. அத்தனை உயரம் சாரம், கற்பாறைகளைத் தாங்கும் கனத்தோடு கட்டப்பட்டிருக்காது. சாத்தியமே கிடையாது. நொறுங்கி விழுந்திருக்கும்.அப்படியானால் சாரப்பள்ளம்.?சாரம் போட, அதாவது மண் பாதை போட மண் தோண்டப்பட்ட இடம் பள்ளமாயிற்று. சாரம் போட தோண்டப்பட்ட போது உண்டான பள்ளம் சாரப்பள்ளம். இத்தனை மனிதர்கள் எப்படி? உழைப்பாளிகள் எங்கிருந்து? வேறெதற்கு போர்?
பாண்டிய தேசம், சேர தேசம், இலங்கை, கீழைச் சாளுக்கியம், மேலைச் சாளுக்கியம் என்று பரவி, எல்லா இடத்திலிருந்தும், மனிதர்களும், மிருகங்களும், பொன்னும், மணியும், மற்ற உலோகங்களும், அதற்குண்டான கைவினைஞர்களும் இங்கே குவிக்கப்பட்டிருக்கின்றனர். கோவில் கட்ட போரா; போர் செய்து ஜெயித்ததால் கோவிலா; இரண்டும் தான். சோழர்கள் போர் செய்யப் போகவில்லை.எனில், பாண்டியர்கள், மேலைச் சாளுக்கியர்கள் போர்
துவக்கி ஜெயித்திருப்பர்,(வெகு காலம் கழித்து ஜெயித்தனர்).எனவே, எதிரியை அடக்கியது போலவும் ஆயிற்று, இறைபணி செய்தது போலவும் ஆயிற்று. இது சோழ தேசத்து அரசியல் சாணக்கியம்.
கல் செதுக்க விதவிதமான சிற்பிகள், மேல் பகுதி நீக்க சிலர், தூண், வெறும் பலகை, அடுக்குப்பாறை செய்ய சிலர், அளவு பார்த்து அடுக்க சிலர், கருவறைக் கடவுள் சிலைகள் செய்ய சிலர் என்று பலவகையினர் உண்டு.உளிகள், நல்ல எக்கு இரும்பால் ஆனவை. பெரிய கல்தொட்டியில் எண்ணெய் ஊற்றி, பழுக்க காய்ச்சிய உளிகளை சட்டென்று எண்ணெயில் இறக்க, இரும்பு இறுகும்.கல் செதுக்கும் கோவிலுக்குள், இப்படிப்பட்ட கல்தொட்டி இன்னும் இருக்கிறது. கயிறு, கம்பிகள் சிறிதளவே பயன்பட்டன. உயரப் பலகைகள் போட மண் உபயோகப்பட்டது.
எல்லா ஊரிலிருந்தும், தஞ்சைக்கு உணவு தானியங்கள் வந்திருக்க வேண்டும். ஆடுகள் அனுப்பப்பட்டிருக்க வேண்டும். ஆடுகள் வளர்ப்பது ஒரு கலையாக, கடமையாக இருந்திருக்கிறது. ‘சாவா மூவா பேராடுகள்’ என்றவாக்கியம் வழக்கத்தில் இருந்திருக்கிறது. தொன்னூற்றாறு ஆடுகள் இருப்பினும், அந்த ஆட்டுக் கூட்டம் குறையாது.குட்டி போட்டு வளரும். வளர்க்கப்பட வேண்டும்.
நல்ல மருத்துவமனைகள் கட்டப்பட்டிருக்கின்றன.விதவிதமான மருந்துப் பெயர்கல் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. அறுவை சிகிச்சை தெரிந்தவர்கள் இருந்து இருக்கின்றனர். மருத்துவமனை சார்ந்த தொழிலாளர்கள் உண்டு.மருந்துக்கிடங்கு உண்டு. மூலிகை தேடி சேகரிப்போர் உண்டு. நீர் உற்றுபவர் உண்டு.கணக்கு வழக்குகள், ஓலைச் சுவடிகளில் பதிவு பெற்றிருக்கின்றன, துல்லியமான கணக்கு வைக்கப்பட்டிருக்கிறது. தானங்கள் கல்வெட்டாய்,குன்றிமணி தங்கம் கூட பிசகாமல் செதுக்கப்பட்டிருக்கின்றன. இதைச் சொல்ல ஒரு ஆள். செதுக்க ஒரு ஆள். நேர் பார்க்க ஒரு ஆள். வீரர்களுக்குள் சண்டை நடந்ததெனில், பஞ்சாயத்து நடந்ததற்க்கான கல்வெட்டுகள் உண்டு.மாமன்னர் ராஜராஜன் கண்ட விற்போர் உண்டு. ஒண்டிக்கு ஒண்டி சண்டை செய்ய விட்டிருக்கின்றனர்.(Duel). இதில் ஒருவன் தப்பாட்டம் ஆடி இருவருமே இறந்தால்,இருவரின் மனக்கேதமும் தீர்க்க, கோவில் விளக்கெரிக்க வேண்டி, யார் மனஸ்தாபத்திற்குக் காரணமோ, அவர்களுக்கு அபராதம் விதித்திருக்கின்றனர். 96 ஆடுகள் அபராதம். அதாவது, சாவா மூவா பேராடுகள். தஞ்சையிலுள்ள இரு கோவிலில் இக்கல்வெட்டு இருக்கிறது.
கோவில் கட்டியாகி விட்டது. நிர்வகிக்க யார்? யார்?அவருக்கென்று வீடு ஓதுக்கி, வீட்டு இலக்கம் சொல்லி,பெயர் எழுதி கல்வெட்டாய் வெட்டியிருக்கிறது.‘இடது சிறகு மூன்றாம் வீடு, நக்கன் பரமிக்கு பங்கு ஒன்றும்,இடது சிறகு நான்காம் வீட்டு எச்சுமண்டைக்கு பங்கு ஒன்றும் ‘என்று பல நூறு பெயர்கள் செதுக்கப் பட்டிருக்கின்றன. வீணை வாசிக்கும் ஆதிச்சன் இறந்தமையால், அவன் மகனுக்குப் பங்கு அரையும் என்று சம்பளம் குறைக்கப்பட்டு இருக்கிறது. கோவில் பணியில் உள்ள எல்லா தொழிலாளர்களும் பெயரும், தொழிலும் எழுதப்பட்டிருக்கின்றன. அது மட்டுமல்ல, கோவிலுக்கு யார் தானம் தந்தனரோ, அவர்கள் தந்தது சிறு தொகையானாலும், பெரிய தொகையானாலும், தங்க ஆபரணமானாலும், கல்லில் வெட்டப்பட்டிருக்கிறது. முதல் தானம் ராஜராஜனுடையது.
‘நாங்கொடுத்தனவும், நம் அக்கன் கொடுத்தனவும், நம் பெண்டுகள் கொடுத்தனவும்’ என்று கல்வெட்டு துவங்குகிறது. தான் மட்டும் இக்கோவிலைக் கட்டியதாய் ஒரு சிறு நினைப்பு கூட அந்த மாமனிதனுக்கு இல்லை. கோவில் கட்டிய இந்த மனிதர்கள் எப்படி இருப்பர்.கொஞ்சம் தெரிய வருகிறது.
விமானத்தினுள்ளே உயிர் ஓவியங்கள் உள்ளன. சட்டை அணிந்த தளபதிகள், பூணூல் அணிந்த அந்தணர்கள்,இடுப்பில் பாவாடையும், மேல் போர்வையும் அணிந்த அரசிகள், இடது பக்க பெரிய கொண்டையோடு மாமன்னர் ராஜராஜன், அலங்காரமான,மிக அழகான கறுப்பு, இச்வப்பு, மாநிறம் கொண்ட தேவரடியர்கள் என்று அழைக்கப்பட்ட நடனமாதர்கள், சிதம்பரம் கோவில் நடராஜர், விதவிதமான முகங்கள், ஒன்று போல் ஒன்று இல்லை, உயிர் ததும்பும் முகபாவங்கள். தட்டை ஓவியங்கள். ஆனால், தெளிவாகத் தெரியும் ஒரு உலோகம்.மாமன்னர் ராஜராஜனைக் கோவில் கட்டத் தூண்டியது எது.போரா, கலைஞர்கள் செய்திறனா. இல்லை பெரிய புராணம் என்ற திருத்தொண்டர் புராணம் முக்கிய தூண்டுதல்.கோபுர வாசலில் உள்ள சுவர்களில் சிறிய சிறிய சிற்பங்கள் தெரிகின்றன.
கண்ணப்பநாயனார். பூசலார், கண்டேஸ்வரர், மன்மத தகனம் என்று முக்கால் அடி உயர பதுமைகளைச் செதுக்கி வித்தை காட்டியிருக்கின்றனர். அடுத்த விநாடி குழந்தை பிறக்கும் என்ற தாயின் உருவம், மன்னர் முகங்கள், புராண காட்சிகள் எல்லாம், கோவில் கோபுரங்களில் உண்டு.இது என்ன வித கோவில். விமானம் உயரம். மிக உயரம். கோபுரங்கள் சிறியவை. இது ஆகமவிதியா. புதிய சிற்ப சாஸ்திரமா. உள்ளே நுழைந்ததும் நந்தியை மனதால் அகற்றிவிடுங்கள். எதிரே உள்ள விமானம் தான் சிவலிங்கம். வான்ம ஒரு சிவலிங்கம். விமானத்திற்குள் உள்ள வெளி ஒரு சிவலிங்கம். வெளிக்கு நடுவே கருவறையில் கருங்கல் சிவலிங்கம். எல்லாம் சிவமயம்.
இந்த விமானத்திற்கு மாமன்னர் ராஜராஜன் வைத்த பெயர், ‘தென்திசை மேரு’ உள்ளே கடவுள் பெயர் பிரகதீஸ்வரர்.தமிழில் பெரு உடையார். வடக்கே உள்ள கைலாயத்தின் மீது காதல், கைலாயம் போகவில்லை. கைலாயத்தை இங்கே கொண்டு வந்து விட்ட உடையார் பெரிய உடையார்.இது போதுமா கடவுளைச் சொல்ல, ரொம்ப பெரிசு ஐயா கடவுள். கருவறைக்கு அருகே உள்ள துவாரபாலகர் காட்டுகிறார். பதினேழு அடி உயரம். அவர் காலுக்கு அருகில் கதை, கதையைச் சுற்றி மலைப் பாம்பு, மலைப்பாம்பு வாயில் பெரிய யானை. அதாவது, யானையை விழுங்கும் பாம்பு. பாம்பு சுற்றிய கதை. கதையில் கால் வைத்த துவாரபாலகர். அவர் கை ‘விஸ்மயம்’ என்ற முத்திரை காட்டுகிறது. உள்ளே இருப்பதை விவரிக்க முடியாது என்று கை விரிக்கிறது.
விவரிக்கவே முடியாத சக்திக்கு, கடவுளுக்கு, தன்னாலான அடையாளம் காட்டியிருக்கிறார் மாமன்னர் ராஜராஜன். அதுவே பிரகதீஸ்வரம்.
அதுவும் விஸ்வரூபம். இன்றளவும்.
பாலகுமாரன்


