உலக இயற்கை வளப் பாதுகாப்பு நாளின்று!

உலக இயற்கை வளப் பாதுகாப்பு நாளின்று!

யற்கை, இது நமக்குக் கிடைத்த விலைமதிப்பற்ற வரம்; அள்ள அள்ளக் குறையாத அட்சயபாத்திரம். மனிதனைப் போல சுயநலம் அற்ற இயற்கை, எதிலும் பொதுநலத்தையே கருதுகிறது. நமக்குத் தேவையான தூய காற்று, நீர், உணவு, உடை, உறைவிடம் என அத்தனை மூலப்பொருட்களையும் அள்ளி வழங்கி, நம்மை வாழவைக்கும் அன்னை அது. ஆனால், இப்படிப்பட்ட இயற்கையை நாம் பாதுகாக்கிறோமா? துரதிர்ஷ்டவசமாக, இல்லை என்ற பதில்தான் உண்மையாக இருக்கிறது.இன்று, மனிதர்களின் பேராசையால் இயற்கை வளங்கள் அழிக்கப்பட்டு, பிற உயிரினங்கள் யாவும் பாதிப்படைந்து வருகின்றன. நீர், நிலம், ஆகாயம், வாயு என நான்கு பூதங்களும் மாசடைந்துவிட்டன. சீக்கிரமே, வாழ முடியாத இடமாக பூமி ஆகிவிடுமோ என்ற நிலை உருவாகி வருகிறது. வனங்கள் அழிந்து, நதிகள் வறண்டு, மலைகள் மறைந்து, கடல் நீர் உயர்ந்துபோன நிலையில், இனி எத்தனை தலைமுறைகள் இந்த பூமியைப் பார்க்குமோ என்ற கவலை எல்லோருக்கும் இருந்துகொண்டே இருக்கிறது. உயிர்களின்  வளர்ச்சிக்குத் தேவையான எல்லாவற்றையும் இயற்கை தருகிறது. காடுகள், நுண்ணியிரிகள், ஆறுகள், ஏரிகள், கடற்பகுதிகள், மலைகள், மண் வளம், மேகங்கள்,  ஏன் ஒவ்வொரு மழைத்துளியும்கூட இயற்கையின் கொடைதான்.  இதில், ஒன்றை இழந்துகூட மனிதர்கள் வாழவே முடியாது. வாழ அவசியமான எல்லாவற்றையும் அழித்துவிட்டு யாரோடு, எதனோடு வாழப்போகின்றோம் என்ற பெரிய கேள்விக்குறியை அனைவருக்கும் ஏற்படுத்தவே உலக இயற்கை வளம் பாதுகாப்பு நாள் (World Nature Conservation Day) ஒவ்வோர் ஆண்டும் சூலை 28 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.

நவீனமயமாதலின் விலையும் இயற்கையின் அழுகையும்

இந்த பூமி, இங்கு வாழும் மனிதர்களுக்கு மட்டும் சொந்தமானது அல்ல. இங்கு வாழும் அனைத்து உயிர்களுக்கும், தாவரங்களுக்கும் பொதுவானது. ஆனால், நாம் “நவீனமயமாதல்” என்ற பெயரில் மரங்கள், காடுகள், நீர்நிலைகள், மலைகள், கடல் வளம் என அனைத்தையும் பேராசையுடன் சூறையாடி வருகிறோம். இதன் விளைவாகத்தான் சுனாமி, நிலநடுக்கம், கடல் நீர்மட்டம் உயர்வு, வரலாறு காணாத வறட்சி மற்றும் வெள்ளப்பெருக்கு போன்ற பல்வேறு சீர்கேடுகளை நாம் சந்தித்து வருகிறோம்.

காடுகள் தொடர்ச்சியாக அழிக்கப்படுவதால், புவி வெப்பமயமாதல் எனும் பேராபத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும், வாழ்விடங்களை இழந்த வன விலங்குகள் காடுகளை விட்டு வெளியேறத் தொடங்கி, மனிதனுக்கும் விலங்குகளுக்கும் இடையேயான மோதல்கள் அதிகரித்து வருகின்றன. தொடர்ச்சியான நீர்நிலைகளின் மாசுபாட்டால், உலகில் 0.5% நீர் மட்டுமே குடிநீருக்கு உகந்தது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இன்று நாம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் மக்காமல் மண்ணின் வளத்தை கேள்விக்குறியாக்குகின்றன. நீர், நிலம், காற்று, ஆகாயம் என அனைத்தும் மாசுக்களால் நிறைந்திருக்கின்றன.

சுற்றுச்சூழல் மாசுபடுதலின் காரணங்களும் ஆக்கப்பூர்வமான கல்வியின் அவசியமும்

இயற்கை அழிந்து, சுற்றுச்சூழல் நாளுக்கு நாள் பாதிப்படைந்து வருவதால் பாதிக்கப்படுவது நம்மைச் சார்ந்தவர்களும், எதிர்காலச் சந்ததியினருமே. நேற்றைய இயற்கை அழிவிலிருந்து உலகினை மீட்டெடுக்கவும், இன்றைய இயற்கை அழிவிலிருந்து உலகைப் பாதுகாக்கவும், நாளைய அல்லது எதிர்கால உலகில், இயற்கை வளங்களினால் மனித சமூகத்துக்குக் கிடைக்கும் நன்மைகளில் பற்றாக்குறை ஏற்படாத வண்ணம் சமாளிக்கவும், ஆக்கப்பூர்வமான சுற்றுச்சூழல் கல்வி இன்று மிகவும் தேவைப்படுகிறது.

சுற்றுச்சூழல் மாசுபடுவதற்கான காரணங்களை ஆராய்ந்தால், சில முக்கிய அம்சங்கள் வெளிப்படுகின்றன: மக்கள் தொகைப் பெருக்கம், நவீன அறிவியல் வளர்ச்சியினால் ஏற்படும் குறுகிய கால வேளாண்மை, தொழிற்சாலைகள் மற்றும் நகரங்களின் உருவாக்கம், போக்குவரத்தினால் ஏற்படும் மாறுதல்கள் போன்றவை சுற்றுச்சூழலின் முக்கிய அங்கங்களாகிய நீர், நிலம், காற்று ஆகிய இயற்கை வளங்களை வெகுவாகப் பாதித்துள்ளன. இந்தப் பாதிப்புக்குப் பெயர்தான் ‘சுற்றுச்சூழல் மாசு’ என்கிறோம். இன்றைக்கு உலக நாடுகள் அனைத்தும் சுற்றுச்சூழல் மாசால் பாதிக்கப்பட்டுள்ளன. இயற்கை சீராக இருந்தால், வளங்கள் வீணாக்கப்படாமல் இருந்தால், பூமி செழிப்பாய் இருக்கும் என்பது யாராலும் மறுக்கப்பட முடியாத உண்மை.

இயற்கையைப் பாதுகாப்பது நம் கடமை

தூய்மையான இயற்கையும் அதன் வளங்களும் நமக்கு மட்டும் உரித்தானவை அல்ல. நம் முன்னோர்கள் நமக்கு அவற்றை அளித்தார்கள். அதை பாதுகாத்து நமது அடுத்த சந்ததியினருக்கு அளிக்க வேண்டியது நமது கடமையாகும். இதை விட பெரிய பரிசை நாம் நம் எதிர்கால சந்ததியினருக்கு விட்டுச் செல்ல முடியாது என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்.

ஐம்பூதங்கள் எனப்படும் நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் போன்றவை, உலகின் உயிர்கள் நிலைத்தும், நீடித்தும் வாழ்வதற்குத் தேவையான அனைத்தையும் உருவாக்கித் தருகின்றன. 19 ஆம் நூற்றாண்டிலும், இதற்குப் பிறகு நடந்த உலகப் போர்கள், தொழிற்புரட்சி, பொருளாதாரத்திலும் இதன் வளர்ச்சியிலும் ஏற்பட்ட பின்னடைவுகள் போன்ற நிகழ்வுகள், உலக நாடுகளை மிகவும் பாதிப்படையச் செய்தன. இதனால் அவர்கள் அனைவரும் காடுகள், கனிம வளங்கள், நீர், நிலம், காற்று என்று இயற்கை வளங்கள் ஒன்றையும் விடாமல் சுரண்டினர். இதன் பாதிப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக நம்மை நெருக்கடிக்குள்ளாக்கி உள்ளன. தற்போது அமில மழை, பாலைவனமாதல், உலக வெப்பநிலை மாறுபாடு, ஓசோன் படலம் பாதிப்பு, கதிரியக்கம், உயிர்களின் அழிவு போன்றவை மனிதர்களுக்குப் பெரும் சோதனையாகிவிட்டன.

உயிர்கள் படைக்கப்பட்டபோதே, அவற்றின் வாழ்வுக்காக இயற்கை வளங்களும் சேர்த்தே படைக்கப்பட்டுள்ளன. இயற்கை வளங்களோடே அத்தனை உயிரினங்களின் வாழ்க்கையும் சிறப்பாக நடைபெற்று வந்தது. மனிதர்கள் சிந்திக்கத் தொடங்கினார்கள். இயற்கை வளங்களைப் பயன்படுத்தத் தொடங்கினார்கள். காலம் வேகமாக மாறியது. தனிமனித உடைமைப் போக்குகள் உருவாகின. அறிவியலின் ஆதிக்கம் பெருகியது. இதன் விளைவாக, மனிதருக்கு மட்டுமே பூமி என்ற நிலை உருவானது. அதுவும் மாறி, அறிவியல் வளர்ச்சியடைந்த நாடுகளுக்கு மட்டுமே இயற்கை வளம் யாவும் சொந்தம் என்ற நிலை உருவாகியுள்ளது.

இயற்கையைப் போற்றுவோம், எதிர்காலத்தைப் பாதுகாப்போம்

இயற்கை அழிந்தும், சுற்றுச்சூழல் நாளுக்கு நாள் பாதிப்படைந்து வருவதால் நேரடியாகப் பாதிக்கப்படுவது நம்மைச் சார்ந்தவர்களும், நமது எதிர்காலச் சந்ததியினருமே. இந்த சவால்களை எதிர்கொள்ளவும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், 1948 ஆம் ஆண்டு உலகளாவிய இயற்கை பாதுகாப்பு அவை (International Union for Conservation of Nature – IUCN) உருவாக்கப்பட்டது.

இந்த அமைப்பு, இயற்கை வளங்களைப் பாதுகாப்பதற்கான விழிப்புணர்வையும், நடவடிக்கைகளையும் உலகெங்கிலும் எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, இயற்கையின் முக்கியத்துவத்தையும், அதன் பாதுகாப்பின் அவசியத்தையும் வலியுறுத்தும் வகையில், ஒவ்வோர் ஆண்டும் ஜூலை 28 ஆம் நாள் உலக இயற்கை வளம் பாதுகாப்பு நாள் கொண்டாடப்படுகிறது.

இந்த நாளில், நாம் இயற்கையின் மீதான நமது பொறுப்பை மீண்டும் ஒருமுறை உணர்வோம். மரங்களை நடுவோம், நீர்நிலைகளைப் பாதுகாப்போம், பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைப்போம், மின்சாரத்தைச் சேமிப்போம், இயற்கையோடு இயைந்த வாழ்வை மேற்கொள்வோம். ஏனெனில், இயற்கையைப் பாதுகாப்பது என்பது நம்மைப் பாதுகாப்பதற்கு சமம். இயற்கையைப் போற்றி வாழ்வோம், எதிர்காலச் சந்ததியினருக்கு செழிப்பான உலகைப் பரிசளிப்போம்!

நிலவளம் ரெங்கராஜன்

Related Posts

error: Content is protected !!