டிடி ரிட்டர்ன்ஸ் விமர்சனம்!

டிடி ரிட்டர்ன்ஸ் விமர்சனம்!

காமெடி ஆக்டராக படு பிசியாக கோலிவுட்டில் வலம் வந்த நடிகர் சந்தானம் தற்பொழுது ஹீரோவாக மட்டுமே நடிக்க முடிவு செய்து பல படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். அந்த வகையில் இயக்குனர் எஸ். பிரேம் டைரக்‌ஷனில் நடித்து வந்துள்ள படம் தான் டிடி ரிட்டன்ஸ். சமீப காலமாக சந்தானம் நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட குளு குளு, ஏஜென்ட் கண்ணாயிரம், ஆகிய இரண்டு படங்களும் தோல்வியை சந்தித்தது. இதனால், மீண்டும் ஒரு மிகப்பெரிய வெற்றிக்காக தனக்கு ஏற்கனவே இரண்டு முறை வெற்றியை கொடுத்த ‘தில்லுக்கு துட்டு’ பார்முலாவை மீண்டும் கையில் எடுத்துள்ளார். ஆம்.. இந்த படம் சந்தானம் கொடுத்த வெற்றி படங்களில் ஒன்றான “ தில்லுக்கு துட்டு” படத்தின் மூன்றாம் பாகமாக்கும்..!

அதாவது சில பல ஆண்டுகளுக்கு முன்னால் புதுச்சேரியில் வாழ்ந்த ஒரு குடும்பம் சூதாட்டத்தில் ஈடுபடுகிறது. அப்படி ஆடும் சூதாட்டத்தில் தோற்பவர்களை கொல்வதை வழக்கமாக வைத்திருக்கும் அந்த குடும்பத்தை ஊர் மக்கள் எரித்துக் கொன்று விடுகிறார்கள். அப்படி செத்தவர்கள் பேயாகி ஒரு பங்களாவில் வாழ்கிறது. இச்சூழலில் தற்போது நிகழ் காலத்தில் சாராயக் கடைகள் மூலம் மிகப்பெரும் தொழிலதிபராக இருக்கும் பெப்சி விஜயனின் பணத்தைத் திருடன் பிபின் கும்பல் கொள்ளையடித்து விடுகிறது. இவர்களிடம் இருந்து மொட்டை ராஜேந்திரனின் திருட்டுக் கும்பல் அந்தப் பணத்தைக் கொள்ளையடித்து விடுகிறது. பிறகு இவர்களிடம் இருக்கும் பணம் சந்தானம் டீமிடம் கைமாறுகிறது. சந்தானம் டீம் அந்தப் பணத்தை ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் இருக்கும் காட்டுப் பேய் பங்களாவுக்குள் ஒளித்து வைத்து விடுகிறார்கள். இந்த விஷயத்தைத் தெரிந்து கொண்ட பெப்சி விஜயன் சந்தானத்தின் காதலியைப் பிணைக் கைதியாகப் பிடித்துக் கொண்டு இவர்களிடம் தன் பணத்தை திரும்பக் கேட்டு மிரட்டுகிறார். அந்த பணத்தை திரும்பக் கொண்டு வர சந்தானம் டீம், திருடன் பிபின் டீம் மற்றும் மொட்டை ராஜேந்திரன் டீம் ஆகியோர் அந்தப் பேய் பங்களாவிற்குள் செல்கின்றனர். போன இடத்தில் பங்களாவிற்குள் இருக்கும் பேய் இவர்களை வைத்து ஒரு கேம் விளையாடுகிறது. அந்த கேமில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்களுக்கே அந்தப் பணம் எனக்கூறி விடுகிறது. இதையடுத்து அந்த கேமில் யார் வெற்றி பெற்றார்கள்? சந்தானம் தன் காதலி சுரபியை மீட்டாரா, இல்லையா? என்பதே டிடி ரிட்டன்ஸ் படத்தின் கதை.

தொடங்கிய முதல் 20 நிமிடங்களில் ஏகப்பட்ட கேரக்டர்களை அறிமுகம் செய்கிறார்கள். அதைப் பார்த்தப் போது அச்சச்சோ. இந்த படமும் நோகடிக்குமோ என நினைத்தால் நம்மை கவர்ந்து சிரிக்க வைத்துவிட்டார் டைரக்டர் பிரேம் ஆனந்த். சந்தானம் தனது ஹீரோ பந்தாவை மறந்து வழக்கமான பாணியான காமெடியை இப்படத்தில் பயன்படுத்தி இருக்கிறார். இவரைத் தவிர முனீஸ் காந்த்,ரெடின் கிங்சிலி, பிபின், பெப்சி விஜயன்,மாறன் என அனைவருக்கும் போதிய வாய்ப்பை வழங்கி இருப்பதாலேயே இப்படம் ஸ்பெஷலாகி விட்டது . நாயகியான சுரபிக்கு இவர்களுக்கு மத்தியில் நடிக்க பெரிய அளவு கேரக்டர் இல்லை. வில்லன் பிரதீப் ராவத்தின் வித்தியாசமான பேய் கதாபாத்திரம் சில இடங்களில் திகிலையும் பல இடங்களில் காமெடியையும் கொடுத்து நம்மை ரசிக்க வைக்கிறது.

கேமராமேன் தீப் குமார் ஒரு பேய் பங்களாவுக்குள் இருக்கும் பேய் சம்பந்தப்பட்ட காட்சிகளையும், கேம் சம்பந்தப்பட்ட காட்சிகளும் மிகச்சிறப்பாகக் காட்சிப்படுத்தி இருக்கிறார் . வழக்கமான பேய் சம்பந்தப்பட்ட காட்சிகளைக் கூட நேர்த்தியாகப் படம் பிடித்து புதிய கோணத்தில் கொடுத்திருக்கிறார் . இசையமைப்பாளர் ரோஹித் ஆபரஹமின் பாடல்கள் படத்திற்கு தேவை இல்லை என்பது போல தோன்றினாலும் பின்னணி இசை படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது.

சந்தானத்தின் மார்கெட்டுக்கு கேரண்டிக் கொடுத்த தில்லுக்கு துட்டு 1,2 படங்களை இயக்கி வெற்றி கண்ட டைரக்டகர் ராம் பாலாவின் அசிஸ்டென்டான பிரேம் ஆனந்த் இப்படத்தை வழங்கி இருக்கிறார். தன்னுடைய குரு கையாண்ட அதே பாணியை தான் இவரும் கையில் எடுத்திருக்கிறார். பேய் படங்களுக்கென்றே உரித்தான திகில் காட்சிகளை குறைத்து காமெடி காட்சிகளை அதிகம் வைத்து வழக்கம் போல் ஏகப்பட்ட லாஜிக் மீறல்கள் இருந்தாலும் ரசிகர்களை காமெடி கடலில் மூழ்கடிக்க செய்திருக்கிறார்.

மொத்தத்தில் டிடி ரிட்டர்ன்ஸ் – சந்தானம் வந்துட்டார்!

மார்க் 3/5

Related Posts