ஆன்லைன் மோசடிகளுக்கு ‘செக்’: ஆர்.பி.ஐ-யின் புதிய ‘கில் சுவிட்ச்’ அதிரடி!

ஆன்லைன் மோசடிகளுக்கு ‘செக்’: ஆர்.பி.ஐ-யின் புதிய ‘கில் சுவிட்ச்’ அதிரடி!

ன்றைய டிஜிட்டல் யுகத்தில் போன் மூலமே பணப் பரிமாற்றம் செய்வது எளிதாகிவிட்டாலும், அதற்கேற்றார் போல ஆன்லைன் மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. கடந்த 2025-ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 28 லட்சம் மோசடி வழக்குகள் பதிவாகியுள்ளன. இதன் மூலம் மக்கள் இழந்த பணம் சுமார் ₹22,931 கோடி! இந்த இமாலயத் திருட்டைத் தடுக்க இந்திய ரிசர்வ் வங்கி (RBI) இப்போது ஒரு சக்திவாய்ந்த ஆயுதத்தைக் கையில் எடுத்துள்ளது. அதுதான் ‘கில் சுவிட்ச்’ (Kill Switch).

என்ன இந்த ‘கில் சுவிட்ச்’?

பெயருக்கு ஏற்றார் போல, உங்கள் வங்கிக் கணக்கில் ஏதேனும் அசம்பாவிதம் நடப்பதாக உணர்ந்தால், உடனடியாக அனைத்து டிஜிட்டல் பரிமாற்றங்களையும் நீங்களே முடக்கிவிடும் வசதிதான் இது.

தற்போது டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளில் இருக்கும் ‘ஆன்/ஆஃப்’ வசதியைப் போலவே, இனி யுபிஐ (UPI), நெட் பேங்கிங் என அனைத்து டிஜிட்டல் சேவைகளுக்கும் இந்த ‘ஒற்றைப் பொத்தான்’ (Single Button) வசதியைக் கொண்டு வர ஆர்.பி.ஐ திட்டமிட்டுள்ளது.

இது எப்படிச் செயல்படும்?

ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள ‘டிஜிட்டல் பரிமாற்ற மோசடிகளைத் தடுப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள்’ குறித்த விவாத அறிக்கையில் பின்வரும் அம்சங்கள் முன்மொழியப்பட்டுள்ளன:

  • உடனடி முடக்கம்: உங்கள் அனுமதி இல்லாமல் பணம் எடுக்கப்படுவதாக மொபைலில் மெசேஜ் வந்தால், அடுத்த நொடியே இந்த ‘கில் சுவிட்ச்’ மூலம் உங்கள் கணக்கை லாக் செய்யலாம்.

  • அனைத்து சேவைகளுக்கும் பொதுவானது: கார்டுகள் மட்டுமின்றி, இணைய வங்கி மற்றும் மொபைல் பேங்கிங் என அனைத்து டிஜிட்டல் வழிகளையும் ஒரே நேரத்தில் நிறுத்த முடியும்.

  • கட்டுப்பாடு உங்கள் கையில்: உள்நாட்டுப் பரிமாற்றம் அல்லது சர்வதேசப் பரிமாற்றம் எப்போது நடக்க வேண்டும், அதற்கான பண வரம்பு (Limit) எவ்வளவு இருக்க வேண்டும் என்பதை நீங்களே தீர்மானிக்கலாம்.

ஏன் இது அவசியம்?

தேசிய சைபர் கிரைம் ரிப்போர்ட்டிங் போர்ட்டல் (NCRP) அளித்துள்ள தகவல்கள் அதிர்ச்சியளிக்கின்றன. நிமிடம் தோறும் நடக்கும் ஆன்லைன் திருட்டுகளைத் தடுக்க, வங்கிக்கு போன் செய்து அல்லது நேரில் சென்று கணக்கை முடக்குவதற்குள் திருடன் பணத்தை எடுத்து முடித்துவிடுகிறான். ஆனால், ‘கில் சுவிட்ச்’ வசதி இருந்தால், பாதிக்கப்பட்டவர் உடனடியாகத் தற்காப்பு நடவடிக்கையை எடுக்க முடியும்.

நிபுணர்களின் பார்வை

தற்போது கார்டுகளில் உள்ள ‘ஆன்/ஆஃப்’ வசதி ஏற்கனவே பல மோசடிகளைத் தடுத்துள்ளது. அதே நுட்பத்தை அனைத்து டிஜிட்டல் தளங்களுக்கும் விரிவுபடுத்துவது நுகர்வோரின் பாதுகாப்பை இன்னும் பலப்படுத்தும். இது வங்கிகள் மீதான மக்களின் நம்பிக்கையை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கியக் குறிப்புகள்:

  1. விழிப்புணர்வு: மோசடி மெசேஜ்கள் வந்தால் பதற்றப்படாமல் ‘கில் சுவிட்ச்’ பயன்படுத்தப் பழக வேண்டும்.

  2. எளிமை: தொழில்நுட்ப அறிவு இல்லாதவர்களும் பயன்படுத்தும் வகையில் இது மிக எளிதாக வடிவமைக்கப்படும்.

  3. பாதுகாப்பு: உங்கள் பணத்திற்கு நீங்களே ‘பாதுகாவலனாக’ இருக்க இந்த அம்சம் உதவும்.

தச்சை குமார்

Related Posts