படைப்பாற்றலின் சதுரங்கம்:2026 உலக சதுரங்க தின சிறப்புப் பார்வை!
விளையாட்டுகளின் அரசனாகக் கருதப்படும் சதுரங்க விளையாட்டின் முக்கியத்துவத்தையும், அதன் பெருமையையும் உலகிற்கு பறைசாற்றும் வகையில் ஆண்டுதோறும் ஜூலை 20-ஆம் தேதி உலக சதுரங்க தினம் (International Chess Day) கொண்டாடப்படுகிறது. மனித சிந்தனையின் எல்லையற்ற கற்பனைத் திறனைக் கொண்டாடும் ஒரு பிரம்மாண்ட திருவிழாவாக இந்த நாள் உருவெடுத்துள்ளது.
இந்தியாவில் உதித்த ‘சதுரங்கம்’ முதல் லோதல் மர்மம் வரை
உலகின் மிகவும் பழமையான மற்றும் அதிகமாக விளையாடப்படும் விளையாட்டு என்ற பெருமை செஸ்ஸிற்கு உண்டு. உத்திகளுடன் விளையாட வேண்டிய இந்த விளையாட்டு, பாரதத்தில் குப்தர்கள் ஆட்சி காலமான ஆறாம் நூற்றாண்டில்தான் ‘சதுரங்கம்’ என்ற பெயரில் முதன் முதலில் தோன்றியதாக நீண்டகாலமாகக் கூறப்பட்டு வருகிறது. ஆனால், கடந்த மே 12, 2019 அன்று குஜராத்தின் லோதலில் இருந்து கண்டெடுக்கப்பட்ட ஒரு சதுரங்கப் பலகை, இந்த வரலாற்றை இன்னும் பின்னோக்கி இழுத்துச் சென்றுள்ளது. சிந்து சமவெளி நாகரிகத்தைச் சேர்ந்த அந்தப் பலகை, கிமு 2300-க்கு முந்தையது எனக் கூறப்படுகிறது. இதன் மூலம் செஸ் விளையாட்டின் ஆயுள் 4000 ஆண்டுகளுக்கும் மேல் நீள்கிறது.

இந்தியாவில் 500 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தீவிரமாக விளையாடப்பட்டு வந்த ‘சத்ரங்’, மெதுவாக வளர்ந்து 9-ஆம் நூற்றாண்டில் ரஷ்யாவில் நுழைந்தது. பின்னர் 15-ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் பரவி, பல்வேறு நவீன மாற்றங்களுக்கு உள்ளாகி உலகெங்கும் காலூன்றியது. முதன் முதலில் செஸ் எப்படி விளையாட வேண்டும் என்பதற்கான விதிகளை ‘Repetition of Love and the Art of Playing Chess’ என்ற புத்தகமாக எழுதிய பெருமை ஸ்பெயின் நாட்டின் லூயிஸ் ராமிரேஸ் என்ற எழுத்தாளரையே சேரும்.
ஜூலை 20 உலக சதுரங்க நாள் ஆனது எப்படி?
1924-ஆம் ஆண்டு ஜூலை 20-ஆம் தேதி பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் ஒலிம்பிக் போட்டி தொடங்கிய அதே நாளில்தான், சர்வதேச சதுரங்கக் கூட்டமைப்பும் (FIDE) உருவாக்கப்பட்டது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தினம் உருவான 42 ஆண்டுகள் கழித்து, 1966-ஆம் ஆண்டில் ஜூலை 20-ஐ சர்வதேசச் சதுரங்க நாளாக FIDE அமைப்பு அறிவித்தது. தொடர்ந்து, 2019-ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையும் (UN) இதற்கான தனித் தீர்மானத்தை நிறைவேற்றி, இந்நாளை உலக சதுரங்க நாளாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்தது. பொதுவாக விளையாட்டு நாள்கள் பல நாடுகளில் இருந்தாலும், ஒரு தனிப்பட்ட விளையாட்டுக்காக உலகளாவிய தினம் கடைப்பிடிக்கப்படுவது செஸ்ஸிற்கு மட்டுமே கிடைத்த பெருமையாகும்.
2026-ன் மையப்பொருள்: படைப்பாற்றல் மிக்க சதுரங்கம்
இந்த ஆண்டிற்கான உலக சதுரங்க தினத்தின் தீமாக “Creative Chess” (படைப்பாற்றல் மிக்க சதுரங்கம்) அறிவிக்கப்பட்டுள்ளது. சதுரங்கம் என்பது வெறும் கணக்கீடுகளும், யுக்திகளும் மட்டுமே சார்ந்த விளையாட்டு அல்ல; அது ஒரு அசாத்தியமான கலை மற்றும் கற்பனைத் திறன் என்பதை உலகிற்கு உணர்த்துவதே இதன் நோக்கமாகும்.
களம் மாறும் ஆட்டம்: கிரியேட்டிவ் செஸ் சேலஞ்ச்
இந்த ஆண்டின் தீமை முன்னெடுத்துச் செல்லும் வகையில், FIDE அமைப்பு ஒரு சுவாரசியமான உலகளாவிய அழைப்பை விடுத்துள்ளது. அதுதான் ‘Creative Chess Challenge’. எப்போதும் போல ஏசி அறைகளிலோ அல்லது வீட்டின் அமைதியான மூலைகளிலோ விளையாடுவதற்குப் பதிலாக, இந்த முறை சதுரங்கத்தை முற்றிலும் அசாதாரணமான மற்றும் கற்பனைக்கு எட்டாத இடங்களில் விளையாட செஸ் ஆர்வலர்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
பனி படர்ந்த மலை உச்சி, ஆழ்கடல் நீருக்கடியில், உலகப் புகழ்பெற்ற வரலாற்றுச் சின்னங்களின் முன்பகுதி அல்லது இயற்கையின் எழில் கொஞ்சும் குறியீட்டு இடங்கள் என எங்கு வேண்டுமானாலும் செஸ் போர்டை விரித்து விளையாடலாம். அவ்வாறு விளையாடுவதைப் புகைப்படம் அல்லது வீடியோ எடுத்து, #InternationalChessDay என்ற ஹேஷ்டேக்குடன் FIDE அமைப்பை டேக் செய்து சமூக வலைத்தளங்களில் பகிருமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டுகளிலும் இத்தகைய முயற்சிகள் ஆங்காங்கே நடந்திருந்தாலும், 2026-ல் இதுவே உலகளாவிய மைய நிகழ்வாக மாற்றப்பட்டுள்ளது.
செஸ் விளையாட்டின் சில சுவாரசியமான துளிகள்:
-
முடிவில்லா சாத்தியங்கள்: சதுரங்க ஆட்டத்தின் முதல் 4 நகர்வுகளுக்குப் பிறகு, விளையாடுவதற்கு மொத்தம் 31,897,956,400 (3100 கோடிக்கும் அதிகமான) சாத்தியமான வழிகள் உள்ளன.
-
கண்டுபிடிப்பின் பின்னணியில் கணிதம்: சதுரங்கத்தைக் கண்டுபிடித்த அறிஞர், அதற்குப் பரிசாக மன்னரிடம் கேட்டது ஒரு எளிய கணக்கு: சதுரங்கப் பலகையின் முதல் கட்டத்தில் 1 நெல்மணி, அடுத்த கட்டத்தில் 2, அதற்கு அடுத்த கட்டத்தில் 4 என இருமடங்காக அடுக்கக் கோரினார். 64-வது கட்டத்தை அடையும் போது அந்த நெல்மணிகளின் எண்ணிக்கை ஒட்டுமொத்த உலகமே பல ஆண்டுகள் விளைவிக்கும் தானியத்தை விட அதிகமாக இருந்தது!
-
விண்வெளியில் சதுரங்கம்: 1970 ஜூன் 9 அன்று சோவியத் விண்வெளி வீரர்கள் விண்வெளியில் இருந்தபடி பூமியில் இருந்த கட்டுப்பாட்டு அறையுடன் செஸ் விளையாடினர். விண்வெளியில் விளையாடப்பட்ட முதல் சதுரங்க ஆட்டம் இதுவே ஆகும்.
ஒரு மனிதனின் திட்டமிடல் திறன், பொறுமை, மற்றும் இக்கட்டான சூழலில் முடிவெடுக்கும் ஆளுமைத் திறன் ஆகியவற்றை வளர்ப்பதில் சதுரங்கம் முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்த உலக சதுரங்க தினத்தில், வழக்கமான பாணிகளை உடைத்து, புதிய சிந்தனைகளுடனும், படைப்பாற்றலுடனும் சதுரங்கப் பலகையை நோக்கி காய் நகர்த்துவோம்.a


