‘பன் பட்டர் ஜாம்’ -விமர்சனம்!
கல்லூரி வாழ்க்கை, காதல், நட்பு, பெற்றோரின் எதிர்பார்ப்புகள் என இன்றைய இளைஞர்களின் வாழ்க்கையை “பன் பட்டர் ஜாம்” என்ற தலைப்பில் ஒரு துள்ளலான படமாகக் கொடுக்க முயற்சித்திருக்கிறது இயக்குநர் ராகவ் மிர்தாத் எழுதிய மற்றும் இயக்கியிருக்கும் இந்த திரைப்படம். தற்போதைய தலைமுறை இளைஞர்கள் காதல், நட்பு, பெஸ்டி (Bestie), காதல் திருமணம் மற்றும் பெற்றோர்களால் நிச்சயிக்கப்படும் திருமணம் போன்ற உறவுகளை எப்படிப் பார்க்கிறார்கள், அதனால் அவர்களின் வாழ்க்கை பாதை எப்படி மாறுகிறது என்பதைப் பேசும் படம் இது.
கதைக்களம்: முக்கோணக் காதல், குழப்பமான நட்பு
கல்லூரி மாணவன் ராஜு, தன் சக மாணவி பவ்யா ட்ரிகாவை காதலிக்கிறான். ஆனால், ராஜுவின் அம்மா சரண்யா பொன்வண்ணன், பக்கத்து வீட்டில் வசிக்கும் ஆதியாவுடன் ராஜுவுக்குத் திருமணம் செய்து வைக்க ஆசைப்படுகிறார். இவர்களுக்கு இடையே ஆதியா, விஜே பப்புவை காதலிக்கிறார். இந்தக் காதல் குழப்பங்களுக்கு மத்தியில், ராஜுவின் உயிர் நண்பன் மைக்கேல் தன் காதலில் ஏற்பட்ட பிரச்சனையால் ராஜுவிடமிருந்து விலகிச் செல்கிறான். இந்தக் களேபரங்களுக்கு மத்தியில் ராஜுவின் காதல் ஜெயித்ததா என்பதே படத்தின் மையக் கரு.
நடிகர்களின் பங்களிப்பு: பிரகாசமான சில முகங்கள்
நாயகன் ராஜு எதார்த்தமான நடிப்பால் ஈர்க்கிறார். காமெடிக் காட்சிகளில் ஸ்கோர் செய்கிறார். இருப்பினும், படத்தின் ஆரம்பத்தில் ஹீரோவாகத் தென்படுபவர், திரைக்கதை திருப்பங்களில் ஒரு கதாபாத்திரமாகவே மாறி, கதாநாயகன் என்ற அந்தஸ்தை இழந்துவிடுகிறார். கதையின் ஓட்டம் அவ்வாறே பயணிப்பதால், ராஜுவின் கதாபாத்திரம் காணாமல் போய்விடுகிறது.
நாயகியான பவ்யா ட்ரிகா, தன் அழகாலும், நடன அசைவுகளாலும் கவனம் ஈர்க்கிறார்; நடிப்பிலும் அசத்தியிருக்கிறார். பவ்யாவுக்கு இணையாக நடிப்பில் ஸ்கோர் செய்யும் ஆதியா, தனது துறுதுறு நடிப்பு மற்றும் உடல்மொழி மூலம் திரைக்கதை ஓட்டத்திற்குப் பலம் சேர்க்கிறார். ஆதியாவின் காதலனாக வரும் விஜே பப்பு, திரையில் தோன்றும்போதெல்லாம் சிரிப்புச் சத்தம் காதை பிளக்கிறது. நாயகனின் நண்பனாக வரும் மைக்கேலின் நடிப்பிலும் குறையில்லை.
சரண்யா பொன்வண்ணன், தேவர்தர்ஷினி, சார்லி போன்ற அனுபவம் வாய்ந்த நடிகர்களின் பங்களிப்பு திரைக்கதைக்கு பலம் சேர்க்கிறது. ஆனால், சில இடங்களில் அவர்கள் வழக்கமாகச் செய்வதை சற்று “ஓவராக” செய்து பார்வையாளர்களைச் சலிப்படைய வைக்கிறார்கள். கெளரவ வேடத்தில் வரும் விக்ராந்த், வரும் காட்சிகள் மாஸ் ஆக இருக்கின்றன.
தொழில்நுட்பம்: துள்ளலான இசை, வண்ணமயமான ஒளிப்பதிவு
நிவாஸ் கே.பிரசன்னா இசையில் பாடல்கள் துள்ளல் ரகம். பின்னணி இசை, முதன்மை கதாபாத்திரங்களின் இளமைக்கு ஏற்ப பயணித்து பார்வையாளர்களைப் பரவசமடையச் செய்கிறது. பாபு குமார்.ஐ.இ.வின் ஒளிப்பதிவு, படம் முழுவதையும் கலர்ஃபுல்லாகக் காட்சிப்படுத்தியிருக்கிறது.
இயக்கம்: தடுமாற்றங்களும், திணிக்கப்பட்ட காட்சிகளும்
எழுதி இயக்கியிருக்கும் ராகவ் மிர்தாத், இன்றைய இளைஞர்களின் உறவுச் சிக்கல்களைப் பேச முயற்சி செய்திருக்கிறார். ஆனால், இரட்டை அர்த்த வசனங்கள் மற்றும் காட்சிகள் மூலம் இது 16 வயதுக்கு மேற்பட்டவர்கள் பார்க்கும் படம் என்பதைத் தெளிவுபடுத்த முயன்றது ஏன் என்ற கேள்வி எழுகிறது. இளைஞர்களைக் கவர்வதற்கு இப்படிப்பட்ட விஷயங்கள் தேவையா? ஒரு சிலர் ரசித்தாலும், பெரும்பாலான இளைஞர்கள் இதை வெறுப்பார்கள் என்பதை இயக்குநர் உணரத் தவறியது ஒரு குறைபாடே. “ஜெயித்தாக வேண்டும்” என்ற ஒரே நோக்கத்தில், இளைஞர்களுக்குப் பிடிக்கும் என்ற கண்ணோட்டத்தில் சில ‘குப்பைக் காட்சிகள்’ திணிக்கப்பட்டிருப்பது, நல்ல கதையைச் சிதைத்திருக்கிறது.
“கருத்து சொல்கிறேன், அறிவுரை கூறுகிறேன்” என்ற பெயரில் அதர பழசான விஷயங்களைப் பேசி, சில இடங்களில் இயக்குநர் “மொக்கை” போட்டிருந்தாலும், அங்கங்கே வரும் நகைச்சுவைக் காட்சிகள் பார்வையாளர்களைக் காப்பாற்றுகின்றன. ஆனால், இந்த நிலை அதிக நேரம் நீடிக்காமல், “சிறந்த நண்பனைத் திருமணம் செய்து கொள்ளலாமா?” என்ற கேள்வி, பல வருடங்களுக்கு முந்தைய தமிழ் சினிமாவுக்கு நம்மை அழைத்துச் செல்கிறது. இருப்பினும், எதிர்பாராத கிளைமாக்ஸ் வித்தியாசமாகவும், ரசிக்கவும் வைக்கிறது.
மொத்தத்தில் நல்ல கதையாகவும், நகைச்சுவை, காதல் உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் நிறைவாகக் காட்டக்கூடிய களமாகவும் அமைந்தும், இயக்குநரின் தடுமாற்றத்தால் கொண்டாடித் தீர்க்க வேண்டிய படம், இறுதியில் “என்ன கொடுமை சரவணன்!” என்று புலம்ப வைத்துவிடுகிறது. மொத்தத்தில், ‘பன் பட்டர் ஜாம்’ இனிப்பானதுதான், ஆனால் சில பல பீஸ்களால் குமட்டல் வந்து விடுகிறது
மார்க் 2.25/5


