திடீர் தலைவர் அர்ஜுனமூர்த்தி கட்சி இந்த தேர்தலில் போட்டியில்லையாம்!

திடீர் தலைவர் அர்ஜுனமூர்த்தி கட்சி இந்த தேர்தலில் போட்டியில்லையாம்!

அண்ணாத்தே நாயகன் ரஜினி தொடங்க திட்டமிட்டிருந்த ஒரு கட்சியின் தலைமை ஒருங் கிணைப்பாளராக அறிவிக்கப்பட்டதால், பாஜக-வில் இருந்து கைவிடப் பட்ட பிறகு தனியாக கட்சி தொடங்கிய அர்ஜுன மூர்த்தி என்பவர் எதிர்வரும் தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தனியாக போட்டியிடப்போவதாக அறிவித்த நிலையில், தற்போது அடேங்கப்பா.. இதெல்லாம் இப்போதைக்கு நடக்கற காரியமில்லை என்று சொல்லி போட்டியிடும் முடிவை வாபஸ் வாங்கி கொண்டிருக்கிறார்.

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஒன்றைத் துவங்கப்போவதாக அறிவித்தபோது, ரா. அர்ஜுனமூர்த்தியை தலைமை ஒருங்கிணைப்பாளராக அறிவித்தார். அர்ஜுனமூர்த்தி அதற்கு முன்பாக பாரதிய ஜனதா கட்சியின் அறிவுசார் பிரிவின் தலைவராக இருந்தார். ஆனால், அடுத்த சில நாட்களிலேயே தான் கட்சி எதையும் தொடங்கப்போவதில்லை என அறிவித்தார் ரஜினிகாந்த்.

இதையடுத்து அர்ஜுனமூர்த்தி சொந்தமாக ஒரு கட்சியைத் தொடங்கப்போவதாக அறிவித்தார். அதன்படி, பிப்ரவரி 27ஆம் தேதியன்று இந்திய மக்கள் முன்னேற்ற கட்சி என்ற பெயரில் ஒரு கட்சியையும் அவர் தொடங்கினார். அந்தக் கட்சிக்கு ரோபோ சின்னமும் ஒதுக்கப்பட்டது. அதன் சார்பில் தேர்தல் அறிக்கையும் வெளியிடப்பட்டது.

இந்நிலையில் தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கும் அர்ஜுனமூர்த்தி, “கால அவகாசம் போதாமையால் நேரத்திற்கு எதிரான ஒரு பந்தயத்தில் இருந்தோம். இருந்தபோதும் தேர்தல் அறிக்கையை வெளியிட்டபோது, பொதுமக்களும் ஊடகங்களும் அதனை வெகுவாக வரவேற்றன. ஆனால், அடுத்த சில நாட்களிலேயே எங்கள் கட்சி அறிக்கையில் குறிப்பிட்டுள்ள பல்வேறு நலன் மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களை மற்ற முன்னணி அரசியல் கட்சிகள் தமது தேர்தல் அறிக்கையில் உள்ளடக்கி வெளியிட்டன. ஆனால், காலத்திற்கு எதிரான ஒரு பந்தயத்தில் நாம் களமிறக்கப்பட்டுள்ளோம்.

அனைத்துத் தொகுதிகளுக்கும் அலை மோதும் விண்ணப்பதாரர்களிடமிருந்து வேட்பாளர்களைத் தரமறிந்து தேர்வுசெய்தல், தேவையான மற்ற வளங்களைத் தேர்வுசெய்வது, மாநிலம் முழுவதும் விரிவான களப்பிரச்சாரம் செய்வது ஆகியவற்றை இந்தக் குறுகிய காலத்தில் முழுமையான தரத்தில் செய்வது இயலவில்லை. இந்தச் சூழலில் ஏப்ரல் ஆறாம் தேதி நடக்கவிருக்கும் தேர்தலில் கட்சியின் சார்பில் வேட்பாளர்களை நிறுத்த வேண்டாம் என இந்திய மக்கள் முன்னேற்ற கட்சி முடிவு செய்துள்ளது.

நாங்கள் தொடர்ந்து எங்கள் கொள்கையின் அடிப்படையில் எங்கள் களபலத்தை வளர்த்துக்கொள்வோம். தமிழ்நாட்டு அரசியலில் ஒரு மாற்று சக்தியாக இருப்பதற்கான எங்கள் பணியை வலுப்படுத்துவோம்” என்று அர்ஜுனமூர்த்தி தெரிவித்துள்ளார்.

Related Posts