32°C

அன்பே டயானா – விமர்சனம்!

admin Published: July 16, 2026 4 நிமிட வாசிப்பு Running News
எழுத்து:

காதல் என்பது வெறும் இரு மனங்களுக்கு moஇடையே ஏற்படும் ஈர்ப்பு மட்டுமல்ல; அது சாதி, மதம், மொழி, குடும்பக் கட்டுப்பாடுகள் மற்றும் சமூக எல்லைகளைக் கடந்து நிற்கும் ஆகச்சிறந்த உன்னதமான மனித உறவாகும். மனிதர்கள் தங்களுக்குள் செயற்கையாக வகுத்துக் கொண்ட மதக் கோட்பாடுகளுக்கும், குடும்ப கௌரவப் பின்னணிகளுக்கும் அப்பாற்பட்டு, சக மனிதனின் ஆன்மாவை நேசிக்கும் உன்னதப் புள்ளியில்தான் உண்மையான காதல் பிறக்கிறது. அது இரு வேறு உலகங்களில் பிறந்து வளர்ந்த மனிதர்களை, பரஸ்பர நம்பிக்கை மற்றும் எல்லையற்ற அன்பின் மூலம் ஒரே நேர்க்கோட்டில் இணைக்கும் வாழ்வியல் பாலமாக விளங்குகிறது. குடும்பப் பின்னணியோ அல்லது மத அடையாளங்களோ அன்பின் ஆழத்தைத் தீர்மானிப்பதில்லை என்பதை உணர்த்த முயலும் சினிமாவே ‘அன்பே டயானா’.

கதைக் களம் :

சென்னை, பெரம்பூர் பகுதியில் வசிக்கும் நாயகன் பாரி இளவழகன், அதே பகுதியில் வசிக்கும் ஆங்கிலோ இந்திய பெண்ணான நாயகி ரம்யா ரங்கநாதனை கல்லூரி காலம் முதலே காதலித்து வருகிறார். பாரியின் காதலை ஏற்க மறுக்கும் ரம்யா அவருடன் நட்பாக பழகி வருகிறார்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

ஒருதலைக் காதலோடு பல வருடங்களாக காத்துக் கொண்டிருக்கும் பாரிக்கு ஒருகட்டத்தில் ரம்யா சம்மதம் சொல்கிறார். ஆனால், ரம்யாவின் காதலை ஏற்பதில் திடீரென்று தயக்கம் காட்டும் பாரி, அவரிடம் இருந்து விலகிச்செல்ல முயற்சிக்கிறார். அது ஏன்?, அவரது காதல் என்னவானது? என்பதை நகைச்சுவையாக சொல்வதே ‘அன்பே டயானா’ படக் கதை.

பாரி இளவழகன் – ரம்யா ரங்கநாதன் நடிப்புத் திறன்:

கதையின் நாயகனாகப் பொறுப்பேற்றிருக்கும் பாரி இளவழகன், எவ்வித பந்தாவும் இல்லாத எதார்த்தமான பக்கத்து வீட்டு இளைஞன் தோற்றத்தில் நம்மை எளிதில் ஈர்த்துவிடுகிறார். பல வருடங்களாகத் தவமிருந்த காதல் கைகூடி வரும் வேளையில் ஏற்படும் மனக்குழப்பங்கள், கண்டிப்பான தாய்க்கு அஞ்சி காதலைச் சொல்ல முடியாமல் தவிக்கும் தவிப்பு எனத் தமக்கான உணர்ச்சிகளை மிக எளிய முறையில், அதே நேரம் நேர்த்தியாகக் கையாண்டு கவனம் பெறுகிறார்.

மறுபுறம், ஆங்கிலோ-இந்தியப் பெண்ணாக வலம் வரும் ரம்யா ரங்கநாதனின் நடிப்பு படத்திற்குப் பெரும் பலம் சேர்த்துள்ளது. ஆங்கிலத் தொனியிலான சென்னைத் தமிழை அநாயாசமாகப் பேசி அசத்தியிருக்கும் இவர், தன்னை விட்டு விலகத் துடிக்கும் காதலனை மிரட்டும் காட்சிகளிலும், அவனது தந்தையிடம் தைரியமாகப் பேசும் அதிரடித் தருணங்களிலும் தியேட்டரில் சிரிப்பலைகளை அள்ளித் தருகிறார். இவர்களின் இந்த இயல்பான கூட்டணியே படத்தைக் கலகலப்பாக நகர்த்திச் செல்கிறது.

கலகலப்பூட்டும் குடும்பக் கூட்டணிகள்

நாயகனின் தந்தையாக நடித்திருக்கும் சேத்தன், ‘இவ்வளவு நாளாக எங்கிருந்தார்?’ என்று கேட்கும் அளவுக்கு அசத்தலாக நடித்திருக்கிறார். காலையில் மனைவிக்கு பயந்த கணவர், மாலையில் அனைவருக்கும் பயம் காட்டும் குடும்ப தலைவர் என்ற சாதாரண கதாபாத்திரத்தை தன் சிறப்பான நடிப்பின் மூலம் பார்வையாளர்களை கொண்டாட வைத்திருக்கிறார்.

நாயகனின் அம்மாவாக நடித்திருக்கும் ரோஜா, தோற்றம், பேச்சு, நடிப்பு என அனைத்திலும் கம்பீரத்தை வெளிப்படுத்தி கவர்கிறார். கண்டிப்பான குடும்ப தலைவியாக இருந்தாலும், தன் மனதுக்குள் இருக்கும் எதிர்பார்ப்பை வெளிப்படுத்தும் காட்சியிலும், தன் தவறை உணர்ந்து மனம் மாறும் காட்சியிலும் தன் அனுபவம் வாய்ந்த நடிப்பால் அசத்தியிருக்கிறார்.

நாயகனின் நண்பராக நடித்திருக்கும் பரிதாபங்கள் கோபி, பெங்களூர் தமிழர் வேடத்தில் படம் முழுவதும் சிரிக்க வைக்கிறார். மாங்கபாபு கதாபாத்திரத்தில் சில காட்சிகள் வந்தாலும் செல் முருகன், தன் பங்கிற்கு நன்றாகவே சிரிக்க வைத்திருக்கிறார். மேலும், நாயகனின் மாமா பெண் வேடத்தில் நடித்திருக்கும் நிகிலா சங்கர், நாயகனின் சகோதரியாக நடித்திருக்கும் இஸ்மத் பானு, சகோதரனாக நடித்திருக்கும் சுதர்சன் காந்தி, நாயகியின் பெற்றோர்களாக நடித்திருக்கும் நடிகர், நடிகை என அனைவரும் கதாபாத்திரத்திற்குப் பொருத்தமான தேர்வாகவும், திரைக்கதைக்கு பலமாகவும் பயணித்திருக்கிறார்கள்.

தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பு

கேமராமேன் ஷெல்லி கேலிஸ்ட், பெரம்பூர் பகுதியை அழகியலோடு காட்சிப்படுத்தியிருக்கிறார். பார்த்து பழகிய இடங்களாக இருந்தாலும், தன் கேமரா மூலம் அப்பகுதியின் அழகியலை அதிகரிக்கச் செய்திருக்கும் ஷெல்லியின் பருந்து கோணக் காட்சிகள் பிரமிக்க வைக்கிறது.

பரத் சங்கரின் இசையில் பாடல்கள் அனைத்தும் இதமாக பயணிக்கிறது. பின்னணி இசை காட்சிகளில் இருக்கும் இயல்பு தன்மைக்கு பலம் சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது. கதாபாத்திரங்களும், அவர்களது வசனங்களும் திரைக்கதையில் முக்கிய பங்கு வகிப்பதை உணர்ந்து காட்சிகளைத் தொகுத்திருக்கும் படத்தொகுப்பாளர் பார்த்தா.எம்.ஏ, படத்தை தொய்வின்றி நகர்த்தியிருக்கிறார்.

கதை எழுதி இயக்கியதோடு கதையின் நாயகனாகவும் நடித்திருக்கும் பரிதி இளவழகன், சாதாரண காதல் கதை என்றாலும், இயல்பான திரைக்கதை மூலம் அன்லிமிடெட் பொழுதுபோக்கை வழங்கியிருக்கிறார். வடசென்னையை வழக்கமாக காட்டப்படும் வன்முறை பின்னணியில் காட்டாமல், கலகலப்பான வசனவெடிகளால் ரசிகர்களைக் கவர்ந்து விடுகிறது ‘அன்பே டயானா’.

மார்க்: 3.25/5