செய்தியைக் கேட்க / Listen to News
மலையாளத் திரையுலகில் தேசிய விருது பெற்று, மிகப்பெரிய வணிக ரீதியான வெற்றியைப் பதிவு செய்த ‘தொண்டிமுதலும் த்ரிக்சாக்ஷியும்’ திரைப்படத்தின் எழுத்தாளர் சஞ்சீவ் பழவூர், முதன்முறையாக இயக்குநராகக் களம் இறங்கும் திரைப்படம் ‘என்ன விலை’. கலமயா பிலிம்ஸ் சார்பில் ஜித்தேஷ்.வி தயாரித்துள்ள இத்திரைப்படத்தில், நடிகர் கருணாஸ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். முக்கிய வேடத்தில் நிமிஷா சஜயன் நடிக்க, சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார்.
அனைத்துப் பணிகளும் நிறைவடைந்து ரிலீசுக்குத் தயாராக இருக்கும் நிலையில், முன்னணி ஓடிடி நிறுவனங்கள் படத்தின் டிஜிட்டல் உரிமையைப் பெரும் தொகைக்கு வாங்கியுள்ளன. சமீபத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், படக்குழுவினர் பகிர்ந்துகொண்ட சுவாரஸ்யமான தகவல்களின் விரிவான தொகுப்பு:
தேசிய விருதை நோக்கி கருணாஸின் புதிய பயணம்
‘போகுமிடம் வெகுதூரம் இல்லை’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தனது திரைப்பயணத்தில் மிக முக்கியமான மைல்கல்லாக ‘என்ன விலை’ இருக்கும் என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார் நடிகர் கருணாஸ். “காமெடியனாகப் பல படங்கள் நடித்துவிட்டாலும், ஒரு நடிகனாக ஒட்டுமொத்தப் படத்தையும் தாங்கிப் பிடிக்க வேண்டும் என்ற என் நீண்ட நாள் ஆசை இதில் நிறைவேறியுள்ளது. இயக்குநர் சஞ்சீவ் பழவூர் என் மீது நம்பிக்கை வைத்து இந்த வாய்ப்பைத் தந்துள்ளார்.
ஒரு எளிய கருவை மையமாக வைத்து, இதுவரை உலகளவில் எந்தவொரு சினிமாவிலும் எழுப்பப்படாத ஒரு புதிய கேள்வியை இந்தப் படம் எழுப்புகிறது. அது இந்திய சினிமாவுக்கே முற்றிலும் புதிய அனுபவமாக இருக்கும். திரையுலகைச் சேர்ந்த மற்றும் சாராத சில முக்கியப் புள்ளிகள் இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு, எனக்கு மாநில அரசு விருதும், தேசிய விருது கிடைக்க அதிக வாய்ப்புள்ளதாகவும் பாராட்டியுள்ளனர். இயக்குநர் மணிவண்ணன் சாரின் இடத்தை நிரப்ப வேண்டும் என்பதும், சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற வேண்டும் என்பதும் என் நீண்ட நாள் கனவு. அது இந்தப் படத்தின் மூலம் சாத்தியப்படலாம்” என்று நம்பிக்கை தெரிவித்தார். மேலும் ‘கட்டா குஸ்தி 2’ படத்தின் காமெடி வேடத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தாலும், இதுபோன்ற அழுத்தமான கதாபாத்திரங்கள் வழியாகவே தன் அடுத்தகட்ட பயணத்தை முன்னெடுக்க விரும்புவதாகவும் கூறினார்.

ராமேஸ்வரத்து மீனவர்களின் வாழ்வியலும் விஸ்வரூபக் கதையும்
இயக்குநர் சஞ்சீவ் பழவூர் கேரள திரையுலகைச் சேர்ந்தவராக இருந்தாலும், தமிழ் மொழி மற்றும் மக்கள் மீது கொண்ட பற்றுதலால் தனது முதல் படத்தை தமிழில் இயக்க முடிவு செய்ததாகக் குறிப்பிட்டார். படத்தின் கதைக்களம் குறித்துப் பேசுகையில், “இது ராமேஸ்வரத்தில் வாழும் ஒரு சாதாரண மீனவனின் வாழ்க்கையில் நடக்கும் அசாத்தியமான சம்பவம். தன் குடும்பத்திற்காக அல்லும் பகலும் உழைக்கும் அந்த எளிய மனிதனின் வாழ்வில் நிகழும் ஒரு சிறிய விஷயம், ஒட்டுமொத்த நாட்டையே உலுக்கும் வகையில் எப்படி விஸ்வரூபம் எடுக்கிறது என்பதுதான் திரைக்கதை. இந்தக் கதையை எழுதி முடித்தவுடனேயே இதில் கருணாஸ் சார் தான் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். நான் எதிர்பார்த்ததை விடப் பல மடங்கு சிறப்பான உழைப்பை அவர் கொடுத்துள்ளார்.
இதற்காக ராமேஸ்வரம் கடற்கரைப் பகுதி மக்களுடன் பல நாட்கள் தங்கி, அவர்களின் வாழ்வியலையும் மொழியையும் உள்வாங்கி ஸ்கிரிப்ட்டை உருவாக்கினேன். சமீபகாலமாக தமிழில் ‘வாழை’ போன்ற அழுத்தமான வாழ்வியல் கதைகளுக்குக் கிடைத்த மாபெரும் வரவேற்பு, எங்களின் ‘என்ன விலை’ திரைப்படமும் திரையரங்குகளில் மிகப்பெரிய வணிக வெற்றியைப் பெறும் என்ற நம்பிக்கையை அதிகரித்துள்ளது” என்றார்.
முதல்முறை வழக்கறிஞராக நிமிஷா சஜயன்
படத்தில் அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகை நிமிஷா சஜயன், “எனது முதல் படத்திற்குப் பேனா பிடித்த எழுத்தாளர் சஞ்சீவ் சார் இயக்குநராக அறிமுகமாகும் படம் என்பதால் கதையைக் கூட முழுமையாக யோசிக்காமல் உடனே ஒப்புக்கொண்டேன். இதில் முதன்முறையாக ஒரு வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். நீதிமன்றக் காட்சிகளில் அதிக வசனங்கள் பேச வேண்டியிருந்ததால், மிகுந்த கவனத்துடன் நடித்து, படத்திற்காக நானே சொந்தமாகக் குரல் (Dubbing) கொடுத்துள்ளேன். எனக்கும் கருணாஸ் சாருக்கும் படத்தில் காட்சிகள் அதிகம் இல்லை என்றாலும், இருவரும் இணையும் அந்த ஒரே ஒரு இடம் கதையின் மிக அழுத்தமான திருப்புமுனையாகவும் உணர்வுப்பூர்வமாகவும் அமையும்” என்றார்.
வியாபார வெற்றியைத் தாண்டிய தியேட்டர் வெளியீடு
தயாரிப்பாளர் ஜித்தேஷ்.வி பேசுகையில், “ஆரம்பத்தில் எனக்குப் படம் தயாரிக்கும் எண்ணமே இல்லை. என் நண்பர் மூலம் தான் சஞ்சீவ் இந்த கதையைச் சொல்ல வந்தார். சரி சும்மா கேட்டுப் பார்க்கலாம் என்று நினைத்துத்தான் கேட்டேன். ஆனால், கதையைக் கேட்ட மாத்திரத்தில், இது இவ்வளவு சிறப்பாக இருக்கிறதே இதை எப்படியாவது நாம் தயாரிக்க வேண்டும் என்ற எண்ணம் உறுதியானது. அதன் பிறகு சில நண்பர்களுடன் இணைந்து படத்தை முறைப்படி தொடங்கினோம்.
ஏற்கனவே படத்திற்கான ஓடிடி (OTT) வியாபாரம் மிக வெற்றிகரமாக முடிந்துவிட்டாலும், இந்தத் தரமான படைப்பை மக்கள் திரையரங்குகளில் பார்க்க வேண்டும் என்று விரும்புகிறோம். அதற்காக, பிரபல விநியோக நிறுவனமான ரோமியோ பிக்சர்ஸ் மூலம் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியிடத் திட்டமிட்டுள்ளோம்” என்று கூறினார்.
விஜயலட்சுமி அகத்தியன், பூர்ணிமா பாக்யராஜ், ஒய்.ஜி.மகேந்திரன், மொட்ட ராஜேந்திரன், நிழல்கள் ரவி, பிரவீனா, மோகன் ராம், சேத்தன் குமார், கவிதாலயா கிருஷ்ணன், கமலேஷ், கோலி சோடா பாண்டி, ஜெ.எஸ்.கவி, சுவாமிநாதன், தீபா சங்கர், கவி நக்கலைட்ஸ் உள்ளிட்ட பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ள இத்திரைப்படம், தமிழ் சினிமாவுக்கு ஒரு புதிய மைல்கல்லாக அமையும் என்று ஒட்டுமொத்தப் படக்குழுவும் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

