‘அச்சமில்லை அச்சமில்லை’ இரண்டாம் பாகம் எடுப்பேன்! – அமீர் நம்பிக்கை!
டீம் ஒர்க் புரொடக்ஷன்ஸ் சார்பாக இயக்குனர் அமீர் தயாரிக்க, முத்து கோபால் இயக்கத்தில், விவுரி குமார் இசையமைப்பில், அமீர், முத்து கோபால், ஹரீஷ், சாந்தினி தமிழரசன் மற்றும் பலர் நடிக்கும் அச்சமில்லை அச்சமில்லை படத்தின் இசை வெளியீடு சென்னையில் நடைபெற்றது. பொதுவாக, திரைப்பட விழாக்களில் திரையுலகத்தைச் சார்ந்தவர்கள்தான் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொள்வது வழக்கம். ஆனால், இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சமூக ஆர்வலர்களை அழைத்து விழாவை நடத்தினார்கள். டிராஃபிக் ராமசாமி, சுப.உதயகுமார், கார்ட்டூனிஸ்ட் பாலா, வளர்மதி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்கள்.
இதில் கார்டூனிஸ்ட் பாலா தன் உரையின் போது, “விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள இயலாத ஓர் அரசாங்கம் இங்கு நடைபெறுகிறது. உங்கள் அம்மணங்களை மறைத்துக்கொள்ள எங்கள் விமர்சனங்களை எடுத்துக்கொள்ள வேண்டும். அதைவிட்டுவிட்டு படம் வரைபவனை கைது செய்யக் கூடாது. நான்கு படங்கள் நடித்துவிட்டு இன்று நாட்டையே ஆளத் துடிக்கிறார்கள். தமிழ்நாட்டில் உங்களுடைய திரைபிம்பத்தை எங்களை ஆட்சிசெய்ய அனுமதிக்கமாட்டோம்” என்றார்.
அடுத்து பேசிய பொதுநல மாணவர்கள் எழுச்சி இயக்கத்தைச் சார்ந்த வளர்மதி, “போராட்டங்கள் எங்களைப்போன்ற ஆட்களால் நடைபெறவில்லை. மக்களை அரசாங்கம்தான் தூண்டுகிறது. ‘இருபது ரூபாய் பஸ் டிக்கெட்டை நாற்பது ரூபாயாக உயர்த்திவிட்டார்கள். எங்களுக்குப் போராடுவதைத் தவிர வேறு வழிதெரியவில்லை’ என்று மதுரை சட்டக் கல்லூரி மாணவர் ஒருவர் சொல்கிறார். இப்படி சாலைக்கு வரும் மக்களை லத்தியால் அடித்து விரட்டுகிறீர்கள். உங்களுக்கெல்லாம் நாங்கள் திருப்பி அடிக்கமாட்டோம் என்கிற தைரியம். நிச்சயமாக இந்தச் சூழல் மாறும்.
தினசரி உழைக்கும் மக்களுக்கான சினிமாவாக இங்கே எத்தனை சினிமாக்கள் வருகின்றன? அவற்றை பூதக் கண்ணாடி போட்டுத்தான் தேடவேண்டும். விவசாயிகள் பிரச்னையை எடுத்துக்கூறும் ‘அச்சமில்லை அச்சமில்லை’ போல எத்தனை சினிமாக்கள் இங்கு உள்ளன. எத்தனை பெண்களுக்கு சினிமாத் துறையில் வாய்ப்பளிக்கிறீர்கள்? அவர்கள் ஒரு கவர்ச்சிப் பொருளாகவே பார்க்கப்படுகிறார்கள். இங்கு சாமன்ய மக்களின் வலியை, வேதனையைப் பேசக்கூடிய படங்களை எடுங்கள்; அதற்கான தீர்வுகளைப் படமாக எடுங்கள். அத்தகைய படங்களை நாங்கள் கடன் வாங்கியாவது பார்த்துவிடுவோம்” என்றார்.
“மக்கள் தங்களுக்கான அடிப்படை உரிமைகளைப் பெற வேண்டும் என்பதற்காக இந்த 84 வயதில் இப்படியான போராட்டங்களை மேற்கொள்கிறேன். இது எனது ஆசான் ராஜாஜி எனக்குக் கற்றுகொடுத்தது. பயமின்மை, தைரியம், தன்னம்பிக்கை இந்த மூன்றும் இருந்தால் ராஜாவாக வாழலாம்” என்று பேச்சைத் தொடங்கிய டிராஃபிக் ராமசாமி தொடர்ந்து பேசியவை அனைத்தும் அதிரடி ரகம்.
“இந்த அரசு அவர்களுடைய அம்மாவுக்கு நினைவு மண்டபம் வேறு கட்டப் போகிறார்களாம். ஒரு குற்றவாளிக்கு அரசியல் சாசனத்துக்கு எதிராக நினைவு மண்டபம் கட்டுகிறார்கள். அதற்கு எதிராக வழக்குப் போட்டுள்ளேன். யாராக இருந்தாலும் என்னிடம் சொல்லுங்கள் அவர்களுக்கு நான் வேலை செய்ய கத்துத்தருகிறேன். நாம் உட்கார்ந்த இடத்தில் இருந்து வேலை செய்ய வைக்க வேண்டும். கவர்னரே ஊர் ஊராகப் போய் பெருக்குகிறார். இரண்டு பெண்களுடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்திட்டு இருக்கார். அவருக்கு அதுவா வேலை? உட்கார்ந்த இடத்தில் இருந்து வேலை வாங்கணும் ஆளுநர்.
“தமிழக அரசியல் நிலைமை மாறப் போகிற நாள் வெகு விரைவில் உள்ளது. அதற்கு மக்கள் அனைவரும் முன்வந்து போராட வேண்டும். உங்கள் பின்னால் என்னைப்போன்ற ஆட்கள் இருப்பார்கள். இன்று அரசியல்வாதிகளால் ட்ராஃபிக் ராமசாமி என்ற பெயரிலேயே ஒரு படம் வர இருக்கிறது. சினிமாவில் உங்க வேலையை நல்லவிதமாகச் செய்யுங்கள். ஜெயலலிதா ஆணவத்தால் அழிந்தார். மக்களும் நல்லவர் யார் என்று பார்த்து தேர்ந்தெடுக்க வேண்டும்” என்று பரபரவென பேசினார் டிராஃபிக் ராமசாமி.
சுப. உதயகுமார் பேசுகையில், “ஒகி புயலால் 2000 பேர் காணாமல் போனார்கள். புயலுக்கு எந்த முன்னெச்சரிக்கையும் தரவில்லை. இன்று அவர்களைக் காப்பாற்ற முடியவில்லை, ஆட்சியர் ஒரு வாரம் கழித்து வருகிறார், முதல்வர் இரண்டு வாரம் கழித்து வந்தார், பிரதமர் மூன்று வாரம் கழித்து வருகிறார், மத்தியக்குழு நான்கு வாரம் கழித்து வருகிறது. மக்களைக் காப்பாற்றுவதுதானே அரசாங்கத்தின் வேலை. இது யாருக்கான அரசு? யாருக்கோ லாபம் தரும் திட்டங்களை வெறும் தரகு வேலை செய்யும் ஒரு அமைப்பாகத்தான் மத்திய மாநில அரசுகள் வேலை செய்கின்றன.
தமிழகத்தில் இனி சினிமா அரசியல் வேலைக்கு ஆகாது. பெருந்தலைவர் காமராஜர் ஆட்சியிலே போட்ட சத்துணவிலே முட்டை போட்டதுதான் புரட்சித் தலைவர் ஆட்சி. இலவச ஆடு, மாடு கொடுக்கிறோம் என்பதுதான் புரட்சி தலைவி ஆட்சி. அதேபாணியில் வருகிற சினிமா அரசியலை தமிழக மக்கள் ஏற்கக் கூடாது. ரஜினி, கமல்ஹாசன் யார் வந்தாலும் நாங்கள் எதிர்ப்போம். தமிழக மக்களை இந்திய ஏகாதிபத்யத்தின் அடிமைகளாக மாற்றும் வேலையைத்தான் இந்த நடிகர்கள் செய்ய இருக்கிறார்கள். மக்களிடம் விழிப்பு உணர்வு ஏற்படுத்துவதில் கலைக்கு மிக முக்கிய பங்கு இருக்கிறது. பொழுதுபோக்குக்காக இருக்கும் சினிமாவிலிருந்து வருபவர்கள் கோட்டையைப் பிடிக்க வேண்டும் என்று எண்ணக் கூடாது என்பதுதான் எங்கள் கருத்து. திரைப்படங்களை மக்கள் விழிப்பு உணர்வுக்காக பயன்படுத்த வேண்டும்” என்றார்.
நிகழ்ச்சியில் பேசிய ‘அச்சமில்லை அச்சமில்லை’ படத்தின் தயாரிப்பாளர் அமீர் நல்ல கதைகளில் நடிக்க நடிகர்கள் முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மேலும் “இது போன்ற ஒரு கதையை ஒரு நாயகனிடம் நடித்தால் எந்த நடிகரும் இது மாதிரியான கதைகளில் நடிக்கத் தயாராக இல்லை. விஜய், அஜித் ஆகியோர் 100 கோடி வியாபாரத்தைத் தொட்டுவிட்டதால் அவர்கள் இது போன்ற படங்களில் நடிப்பதில்லை. அவர்களுக்கு அடுத்த இடங்களில் இருப்பவர்களுக்கு விஜய், அஜித் போல ஆக வேண்டும் என்ற ஆசையில் இம்மாதிரி படங்களில் நடிப்பதில்லை.
புதிதாக வருபவர்களும் ஒரு படம் இரண்டு படங்களில் நடித்த பின் அவர்களும் இது போன்ற படங்களில் நடிக்க மறுத்து, பெரிய படங்களில் நடிக்கப் போய்விடுவார்கள். அது அவர்களது தவறு இல்லை, வளர்ச்சி. இருந்தாலும் அவர்கள் இது போன்ற படங்களில் நடித்தால், புதிய கருத்துக்களும், புதிய படங்களும் அதிகம் வர வாய்ப்பிருக்கும். இப்படத்தை எடுப்பதற்காக இயக்குனர் முத்து கோபாலின் அப்பா, அவரிடமிருந்த இரண்டு ஏக்கர் நிலத்தைக் கொடுத்து படத்தைத் தயாரிக்க வைத்தார். அதன் பின் 70 சதவீதம் முடிந்த பிறகே இந்தப் படத்தை நான் தயாரிக்க ஆரம்பித்தேன்.
இந்தப் படம் வெற்றியடைந்தால் ‘அச்சமில்லை அச்சமில்லை’ இரண்டாம் பாகம் எடுப்பேன். தமிழ் ரசிகர்கள் மீது நம்பிக்கை இருக்கிறது. நல்ல படம் எடுக்கும் முதல் பட இயக்குனர்களுக்கு ரசிகர்கள் நிச்சயம் வெற்றி கொடுப்பார்கள் என்று நம்புகிறேன்,” என்றார்.