எகிறி கொண்டே போகிறது உலக வெப்பநிலை!
இயற்கை காலநிலை சுழற்சியான எல் நினோ காரணத்தால் 2017ம் ஆண்டு வெப்பம் மிகுந்த 3 ஆண்டுகளில் ஒன்றாக கணக்கிடப்பட்டுள்ளது. அதிக வெப்பமிக்க 3 ஆண்டுகளில் ஒன்றாகக் கடந்த 2017ம் ஆண்டு இருந்ததாக உலக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. எல் நினோ என்பது புவி வெப்பமாதலின் காரணமாக ஏற்படக்கூடிய ஒர் ஒழுங்கற்ற காலநிலை மாற்றம் ஆகும். இந்த எல் நினோ தாக்கம் இல்லையென்றபோதிலும், 2017ம் ஆண்டு அதிக வெப்பம் மிகுந்த ஆண்டுகளில் ஒன்றாகவே இருந்திருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தொழிற்புரட்சிக்கு முந்தைய காலத்தின் வெப்பநிலையை அடிப்படையாக வைத்து உலகின் சராசரி வெப்பநிலை கணக்கிடப்படு கிறது. அந்த வகையில் 2017ம் ஆண்டில் சராசரியைவிட ஒரு டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகமாகப் பதிவாகியுள்ளது. இதன் மூலம் அதிக வெப்பமிக்க 3 ஆண்டுகளில் ஒன்றாக 2017ம் ஆண்டு இடம்பிடித்துள்ளது. 2016ம் ஆண்டுதான் உலகிலேயே மிக வெப்பமான ஆண்டாகும். இதையடுத்து அதிக வெப்பமிக்க ஆண்டுகளாக 2015, 2017ஆகிய ஆண்டுகள் உள்ளன. 19ஆம் நூற்றாண்டில் இருந்து கணக்கிடப்பட்ட அதிக வெப்பமிக்க 18 ஆண்டுகளில் 2000வது ஆண்டுக்குப் பிறகு மட்டும் அதிக வெப்பமிக்க 17ஆண்டுகள் உள்ளது.
இந்த எல்நினோ தாக்கத்தால் 2017ம் ஆண்டில் அமெரிக்காவில் சூறாவளி, ஆஸ்திரேலியாவில் அனல் காற்று வீசியது, ஆசியாவில் பேரழிவு தந்த வெள்ளம் ஆகியவை ஏற்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. உலகம் முழுவதிலும் உள்ள ஆராய்ச்சியாளர்கள் வெப்பமயமாதலின் எல்லையாக நிர்ணயிக்கப்பட்ட 1.5 டிகிரி செல்சியஸை மிக விரைவாக நெருங்கிக்கொண்டிருக்கிறது என்றும், இது மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் எச்சரித்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த 1900 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரை மட்டும் 0.9 டிகிரி செல்சியஸ் உலக வெப்பநிலை அதிகரித்துள்ளது. பின்னர், 2016 ஆம் ஆண்டு வரை நடத்தப்பட்ட ஆய்வில் உலக வெப்பநிலை 0.43 டிகிரி செல்சியஸ் கூடுதலாக உயர்ந்துள்ளதும் தெரியவந்துள்ளது.
”வெப்பநிலை உயர்ந்துள்ளதையும், அதன் காரணத்தையும் நாங்கள்தான் முதலில் வெளியிட்டுள்ளோம். பூமி மிக வேகமாக வெப்பமயமாகிக் கொண்டிருக்கிறது. இதன் வேகம் மிகவும் பிரம்மிக்கவைக்கிறது” என்று அரிசோனா பல்கலைக்கழக பேராசிரியர் ஜியாண்ஜன் யின் தெரிவித்தார். இந்த ஆய்வு ஜியோபிசிக்கல் ரிசர்ச் லெட்டர்ஸ் ஜர்னலில் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் 1850 – 2016 ஆண்டுகளின் வெப்பநிலை, 1955 -2016 ஆண்டுகளின் கடல் வெப்பம், 1948 – 2016 ஆண்டுகளின் கடல் மட்டம் அளவு ஆகியவை ஆய்வு செய்யப்பட்டன. இதன் முடிவில், உலக வெப்பநிலை கடந்த 2014 – 2016 ஆண்டுகளில் மட்டும் 0.24 டிகிரி செல்சியஸ் உயர்ந்துள்ளதும் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.