பிராணவாயுவைக் கொடுக்கும் கடலுக்கே மூச்சு முட்டுதாம்! – ரிசர்ச் ரிசல்ட்
நவீனமயமாகிக் கொண்டு போவதாக சொல்லிக் கொள்ளும் நம் பூமி தொடர்ந்து வெப்பமயமாதல் மற்றும் பருவ நிலையில் கணிக்க இயலாத மாற்றம் இவைகளால் விளையும் பாதிப்புகள் பற்றி பல உயர் மட்டங்களில் பேச்சு(வார்த்தை) அடிபடுவதை நாம் கேட்டுக் கொண்டுதான் இருக்கி|றோம், ஆனால் அந்த பிரச்னைக்கு ஒரு சரவணா ஸ்டோர் விளம்பரத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவம் கூட நாம் கொடுப்பதில்லை. நம்மை வாழ வைத்துக் கொண்டு இருக்கும் இந்த உலகம் நம் கண் முன்னே அழிவதை நாம் சின்னத்திரை தொடர் காட்சிகளைப் போல பார்த்துக்கொண்டு மட்டுமே இருக்கிறோம்.

உதாரணத்திற்கு கடலில் கரைந்துள்ள பிராணவாயு அளவைக் கொண்டுதான் கடலின் ஆரோக்கியம் நிர்ணையிக்கப்படுகிறது, ஆனால் 1980-களிலிருந்தே கடல்களில் பிராணவாயு அளவு கடுமையாக குறைந்து வருகிறது என்று அமெரிக்க ஆய்வு ஒன்று எச்சரித்துள்ளது. இந்த ஆய்வுக்காக 50 ஆண்டுகால கடல் தரவுகளை ஆய்வாளர்கள் ஆராய்ந்து நீண்ட கால போக்குகள் மற்றும் மாதிரிகளை உருவாக்க முயற்சி மேற்கொண்டுள்ளனர். அதாவது நம்மால் மாற்றப்பட்ட இந்த சீதோஷ்ண நிலையினால், புவியில் உள்ள அனைத்து பனிப் பகுதிகளும் உருகி, கடலில் கலப்பதால், கடற்பரப்பின் வெப்ப நிலை உயர்ந்து, கடலின் அடிப்பகுதியில் உள்ள மீத்தேன் வாயு நாம் சுவாசிக்கும் ஆக்சிசன்னுடன் கலந்து நச்சுக் காற்றாக மாறிவிடும். இந்த பேராபத்து இன்னும் 4-5 ஆண்டுகளில் நிகழத் தொடங்கும். கடந்த பத்தாயிரம் ஆண்டுகளில் இப்புவியின் வெப்பநிலை உயர்வு 1.8 degree F (1 degree C). இதில் கடந்த நூறு ஆண்டுகளில் மட்டும் 1.1 degree F (0.6 degree C).
இத்தனைக்கும் இயற்கை சீற்றங்கள் கடந்த இருபது ஆண்டுகளில் மட்டும், இரண்டு மடங்காக உயர்ந்திருக்கிறது. கார்பன்-டை- ஆக்சைடும், மீத்தேன் வாயுவும் புவி தட்பவெப்ப மாற்றத்திற்கு மிக முக்கிய காரணிகள். அதிலும் மீத்தேன் வாயு, கார்பன்-டை- ஆக்சைடை விட 25 மடங்கு சக்தி வாய்ந்தது. கார்பன்-டை-ஆக்சைடு போன்ற வாயுக்கள் ஒரு குறிப்பிட்ட அளவில் இருக்கும்போது, சூரிய வெப்பத்தை பூமிக்கு கொண்டுவந்து சேர்த்து பல உயிரனங்களும், தாவரங்களும் வாழ உதவியது. ஆனால், இன்று அதிக அளவில் நம்மால் வெளியேற்றப்படுவாதால், அது நமக்கே ஆபத்தை உருவாக்கி விட்டது.
ஆம்.. கடல் வெப்பநிலை அதிகரிக்கத் தொடங்கியதால் 1980-களிலிருந்தே பிராணவாயு அளவு குறையத் தொடங்கியுள்ளது என்கிறது ஜியோபிசிக்கல் ரிசர்ச் லெட்டர்ஸ் என்ற இதழில் வெளியான இந்த ஆய்வு. “கடல்களில் உள்ள பிராணவாயுவில் இயக்க மூலக்கூறுகள் உள்ளன, அதன் திரட்சி இயற்கையாக பருவநிலை மாறும்போது மாறுகிறது. ஆனால் எங்கள் ஆய்வில் முக்கியமான தரவு என்னவெனில் இயற்கை மாற்றங்களுக்கு ஏற்ப கடல் பிராணவாயு அளவு குறைவதை விட மிக அதிகமான விகிதத்தில் குறைந்து வருகிறது என்பதே” என்று அட்லாண்டாவைச் சேர்ந்த ஜார்ஜியா தொழில்நுட்ப கழகத்தின் அசோசியேட் புரொபசர் டகா இடோ என்பவர் கூறுகிறார்.
கடல்நீர் பிராண வாயு அளவு குறைவதால் உலகம் முழுதும் கடல் வாழ் உயிரினங்களுக்கு எதிர்கால ஆபத்து அதிகமாகியுள்ளன. அதுவும் சமீபத்தில் பிராணவாயு குறைவு நிகழ்வினால் நிறைய மீன்கள், நண்டுகள் இறந்து போவதும் இடம்பெயர்வதும் அதிகரித்து வருகின்றன.
குளிர்ந்த கடல் நீர் தக்க வைக்கும் பிராண வாயுவை விட வெப்பமாகும் கடல் நீர் குறைவாகவே பிராணவாயுவை தக்க வைக்கும்.
இதிலும் கூட 20 ஆண்டுகளாக கடல் நீர் வெப்பமடையும் விகிதத்திற்கு இணையாக இல்லாமல் மேலதிகமாக பிராண வாயு அளவு குறைந்து வருகிறது. துருவங்களில் பனி உருகி வருவது மிக வேகமாக நடந்து வருவதால் கடல்களில் புதிய நீர் சேகரமாகிறது, இதனால் கடல்நீர் அதிகமாக வெப்பமடைகிறது. இது பிராணவாயுவை அழித்து வருகிறது, என்று இந்த ஆய்வு எச்சரிக்கிறது.
அது சரி.. நமக்குத் தெரியாத எச்சரிக்கையா? என்று கேட்டால் ஸாரி.. நோ ஆர்கியுமெண்ட்!


