அகிலன் விமர்சனம்

நம் போன்ற நகர வாழ்க்கைவாசிகளுக்கு கடல்வழி வாணிபம் குறித்து சொன்னால் ஆச்சரியத்தில் வாயை பிளக்க மட்டுமே தெரியும் .. ஆனால். இன்றைக்கு சர்வதேச பொருளாதாரத்தின் முதுகெலும்பு என்று சொல்லுமளவிற்கு கடல் வாணிகம் உருவெடுத்துள்ளது. சுமார் 90% உலக வர்த்தகம் சர்வதேச துறைமுகங்கள் வாயிலாகவே நடைபெறுகிறது. சர்வதேச அளவில் 90,000க்கும் மேற்பட்ட வணிகக் கப்பல்கள் பலவகை வணிகச் சரக்குகளை சுமந்து கொண்டு வர்த்தகத் துணைவனாகப் பயணிக்கிறது..ஆனால் இந்த கடல்வழி வாணிபத்தில் 60 சதவீதத்துக்கும் மேல் சட்டத்துக்கு புறம்பான வாணிபம் என்பதுதான் உண்மை…! அப்படி நடக்கும் வாணிபத்தில் ஈடுபடுவோரில் பலரும் குற்ற பின்னணியை சேர்ந்தவர்களே.. இப்படியான சூழலில் இந்த கடல் வணிகத்தின் போக்கையும், பின்னணியையும் விலாவாரியாக சொல்ல முயன்றிருப்பதே அகிலன்..!
அதாவது கப்பல் கன்டெய்னர்களில் கள்ளத்தனமாக பல்வேறு தவறான சாமான்களை மறைத்து, உலகின் பல்வேறு நாடுகளுக்குக் கடத்தும் தாதா கபூர் .இவருக்கு கீழ் வேலை செய்பவர் பரந்தாமன்.இந்த பரந்தாமனின் அடியாள்தான் நாயகன் அகிலன் (ஜெயம் ரவி).பரந்தாமனுக்காக ஏகப்பட்ட கொலை ,கொள்ளை மற்றும் கடத்தல் என பலவற்றையும் செய்து வருகிறார்.ஜெயம் ரவி . இதன் மூலம் .விரைவில் தானே கடல் ராஜா ஆக வேண்டுமென்றும் ஆசைப்படுகிறார். அப்படியான சூழலில் ஒரு கட்டத்தில் கபூரை நேரில் சந்திக்க்க நேருகிறது. அப்போது கிடைக்கும் ஒரு மிகப்பெரிய அசைன்மென்ட்டை செய்து முடிக்க களம் இறங்குகிறார் ஜெயம் ரவி.. இதற்கு தடையாக துறைமுகத்தின் போலீஸ் ஆபீசரும் டிஐஏ அதிகாரியுமான சிராக் ஜானி வருகிறார். அவரை மீறி ஜெயம் ரவி கபூர் கொடுத்த அசைன்மென்ட்டை வெற்றிகரமாக முடித்தாரா? இல்லையா? ஜெயம் ரவி இது போன்ற கடத்தல் செயல்களில் ஈடுபடுவதற்கான காரணம் என்ன? அவர் கிங் ஆப் இந்தியன் ஓஷன் ஆக மாறினாரா? என்பதே அகிலன் படத்தின் கதை.
கமிட் ஆன ரோலுக்கு பக்காவாக செட் ஆகி விடும் ஜெயம் ரவி இப்படத்தில் வட சென்னையை சேர்ந்த அகிலன் என்ற கேரக்டராகவே மாறி விட்டார். து உடல் அமைப்பும் வசன உச்சரிப்பும் அகிலன் என்ற கதாபாத்திரத்திற்கு உயிரூட்டி இருக்கிறது. பல இடங்களில் முரடனாக கூடவே புத்திசாலியாக மட்டுமின்றி நல்ல மனசு கொண்டவராக, அதே சமயம் இவை எதுவும் வெளியே தெரியாதவராக, காட்சிக்கு காட்சி மிகவும் அசால்டாக நடித்து அவ்வப்போது கைத்தட்டல் பெற்று விடுகிறார் ஜெயம் ரவி.
வழக்கமான நாயகியாக வரும் ப்ரியா பவானி சங்கர் வழக்கமான நடிப்பை வெளிக்காட்ட வாய்ப்பில்லாமல் வருகிறார் செல்கிறார். இன்னொரு நாயகியாக நடித்திருக்கும் டானியா ரவிச்சந்தர் சிறிது நேரமே வந்தாலும் மனதில் பதிகிறார். இன்டெலிஜென்ட் ஆஃபீஸ்ராக வரும் சிராக் ஜானியின் மிரட்டலான நடிப்பு படத்திற்கு பக்க பலமாக அமைந்திருக்கிறது. இவரது மிடுக்கான தோற்றமும், கம்பீரமான வசன உச்சரிப்பும் ஜெயம் ரவிக்கு ஈடு கொடுத்து நன்றாக நடித்துள்ளார். இனி வரும் காலங்களில் இவரை அதிகமாக போலீஸ் கதாபாத்திரங்களில் பார்க்க வாய்ப்பு இருக்கிறது. படத்தில் சிறிய வில்லனாக வரும் ஹரிஷ் பெரோடி வழக்கமான வில்லத்தனம் காட்டி சென்றுள்ளார். பிரிய வில்லன் கபூர் ஆக வரும் இந்தி நடிகர் தருண் அரோரா தன் பங்களிப்பை நிறைவாக செய்துள்ளார். யூனியன் தலைவர் ஜனநாதன் ஆக வரும் மதுசூதனன் சில காட்சிகளை வந்தாலும் மனதில் பதியும்படி நடித்துவிட்டு கவனம் பெற்றுள்ளார். படத்தில் ஜெயம் ரவி நண்பர்களாகவும் அடியாட்களாகவும் நடித்துள்ள நடிகர்கள் சிறப்பான பங்களிப்பு செய்து படத்தை இன்னொரு தளத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர்.
ஒரு பிளாட்பாரம் எனப்படும் ஹார்பருக்குள் கப்பல்களுக்கு இடையே மொத்த படத்தையும் படமாக்கி, பிரமிப்பை வரவழைத்ததற்கும், ஆக்ஷன் காட்சிகளுக்கும், கேமராமேன் விவேக் ஆனந்த் சந்தோஷம் உட்பட மொத்த டெக்னிக்கல் குழுவுக்கு தனி பாராட்டு விழாவே நடத்தலாம்…! வழக்கம் போல் பின்னணி இசை என்ற பெயரில் காதை கிழித்து அனுப்புகிறார் இசையமைப்பாளர் சம் சி எஸ். படத்தில் ஒரே ஒரு பாடல் தான் என்றாலும் வரிகள் கவனம் பெற்றாலும் மனதில் பதியவில்லை.
தன் முதல் படத்தில் இதே ஜெயம் ரவி துணையுடன் பூலோகம் என்ற டைட்டிலில் குத்து சண்டை மற்றும் அதை சுற்றி நடக்கும் அரசியலை அதிரடியாகவும், தெள்ள தெளிவாகவும் காட்டிய டைரக்டர் கல்யாண கிருஷ்ணன் இந்த அகிலன் படத்தில் துறைமுகங்களில் நடக்கும் ஊழல்களையும், சரக்கு கப்பல்களால் நமக்கு ஏற்படும் விலைவாசி உயர்வுக்கான காரணங்களையும், விளக்கிச் சொல்லி அதில் இருக்கும் அரசியலை காலம் சென்ற இயக்குநர் ஜனநாதன் ஸ்டைலில் விளக்க முயன்றுள்ளார். ஒரு இடத்தில் கூட காமெடி இல்லை, ஆனாலும் அது பெரிய குறையாக தெரியவில்லை. பக்கா ஆக்ஷன்-கமர்ஷியல் படத்திற்கு என்னென்ன வேண்டுமோ அவையனைத்தும் இப்படத்தில் இருக்கிறது.
மொத்தத்தில் அகிலன் – கவர்கிறான்
மார்க் 3.25/ 5