இரட்டை வேடமிடும் சமூகம்: நாய் கடிக்கும் நகரமும், கண்மூடி நிற்கும் அறமும்
நகரங்கள் இரத்தத்தால் நனைந்து கொண்டிருக்கின்றன. சென்னை குமரன் நகரில் பிட்புல் நாய் கடித்து கருணாகரன் என்பவர் உயிரிழந்த சம்பவம், தெருநாய்கள் தொல்லை குறித்த விவாதத்தை மீண்டும் கிளப்பியுள்ளது. இந்த சோகமான நிகழ்வு, வெறும் ஒரு துயரச் செய்தி மட்டுமல்ல; அது, நம் சமூகத்தில் நிலவும் இரட்டை நிலைப்பாட்டையும், நியாயமற்ற உணர்ச்சிகரமான அணுகுமுறையையும் அம்பலப்படுத்துகிறது.

தெரு நாய்கள் குறித்துப் பேசும்போது மட்டும், “அது வாயில்லா ஜீவன்”, “விலங்குக்கும் கருணை காட்ட வேண்டும்”, “இந்த பூமி மனிதர்களுக்கு மட்டும் சொந்தமானது அல்ல” என்று ஏகப்பட்ட எமோஷனல் வசனங்கள் அடுக்கப்படுகின்றன. ஆனால், இதே மனித நேயவாதிகள் வீட்டில் கொசு வந்தால், அதை ஒழிக்க கொசுவர்த்தி சுருளை வைக்கிறார்கள். பாம்பு, தேள் போன்ற விஷ ஜந்துக்கள் வீட்டிற்குள் வந்தால், அவற்றை அடித்துக் கொல்கிறார்கள். அப்போது, இந்த பூமி கொசு வாழ்வதற்கும், பாம்பு வாழ்வதற்கும் இல்லையா என்ற கேள்வி எழுகிறது.
மனிதர்களுக்கு எந்தத் தீங்கும் செய்யாத ஆடு, மாடு, கோழிகள் தினமும் லட்சக்கணக்கில் இறைச்சிக்காகக் கொல்லப்படுகின்றன. இவை யாவும் யாருக்காகப் படைக்கப்பட்டன? விலங்குகளின் உரிமைகளுக்காகவும், அவற்றின் இருப்புக்காகவும் குரல் கொடுக்கும் இந்த ‘நவீன அறவாளிகள்’, இறைச்சிக் கடைகளின் முன் சிந்தும் இரத்தம் குறித்தோ, துடிக்கத் துடிக்க கொல்லப்படும் உயிர்கள் குறித்தோ ஏன் ஒரு வார்த்தை கூட பேசுவதில்லை? இவை பூமியில் வாழ வேண்டாமா? நம் நாவின் ருசிக்காகத்தான் இந்த உயிர்கள் படைக்கப்பட்டுள்ளனவா?
இந்த இரட்டை வேடம் தான் இங்கு மிகப்பெரிய சிக்கலாக உருவெடுக்கிறது. தெருநாய்களால் பொது மக்கள், வயதானோர், குழந்தைகள் என பலரும் காயமடைந்து, தங்கள் உயிரை இழக்கும்போது வராத கவலையும், கோபமும், தெரு நாய்களைக் கட்டுப்படுத்த அரசு சட்டம் இயற்றும்போது மட்டும் இவர்களுக்கு வருகிறது.

சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு, அரசு அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டங்கள், புதிய விதிகள் என அனைத்தும் வெறும் காகிதத்தில்தான் இருக்கின்றன. சட்டங்கள் இயற்றப்பட்டாலும், அவை நடைமுறைப்படுத்தப்படுகிறதா என கண்காணிக்க எந்த ஒரு அமைப்பும் இல்லை. இந்த அலட்சியம், பொதுமக்களின் உயிரை பலி வாங்கும் வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது.
தமிழகம போன்ற மாநில்ங்களில்ல் தினமும் 400க்கும் மேற்பட்டோர் நாய் கடிக்கு ஆளாகிறார்கள் என்ற புள்ளிவிவரமும், கடந்த ஆண்டில் மட்டும் ஐந்து லட்சத்துக்கும் அதிகமானோர் நாய் கடியால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற உண்மையும், நம் அரசின் செயலற்ற தன்மையைப் பறைசாற்றுகின்றன.
நாய் தொல்லைக்கு எதிராகக் குரல் கொடுக்கும்போது, “விலங்கு வெறுப்பாளர்கள்” என்று முத்திரை குத்தப்படுகிறோம். ஆனால், உண்மையில் நாய்களை ஒழிப்பதற்கு முன்னால், மக்களின் உயிருக்கும், பாதுகாப்புக்கும் முன்னுரிமை அளிக்காமல், நாய்களுக்காக மட்டுமே குரல் கொடுக்கும் இந்த ‘வெள்ளை காலர்’ நபர்கள்தான் முதலில் ஒழிக்கப்பட வேண்டும்.
ஒரு ஆரோக்கியமான சமூகம் என்பது, மனிதர்களின் பாதுகாப்பையும், விலங்குகளின் உரிமைகளையும் சமமாகப் பார்ப்பது. ஆனால், இங்கு மனித உயிர்களைவிட விலங்குகளின் இருப்பு முக்கியமானது என சில குரல்கள் எழுவது தான் பெரும் அவலம். இந்த இரட்டை வேடத்தால், வீதிகளில் சிந்தும் இரத்தம் யாருடையது என்ற கேள்விக்கு இன்றுவரை பதில் இல்லை.
நிலவளம் ரெங்கராஜன்


