உலகக் கொசு நாள்!
கண்ணுக்குத் தெரியாத கொரோனாவுக்குக் கூட மருந்து கண்டுபிடித்து விட்டார்கள்…ஆனால் கடித்து துாக்கத்தை மட்டுமின்றி உடல் நலத்தையும் கெடுக்கும் கொசுவை கூண்டோடு ஒழிக்க மருந்து கண்டுபிடிக்க மாட்டாங்களா? என்று ஏங்காத ஆட்களே இல்லை. எத்தனை கொசு விரட்டிகள் கண்டுபிடித்தாலும் கொசுவை ஒழிப்பதில் ஆராய்ச்சியாளர்களுக்கு இன்னும் தோல்வியே கிடைக்கிறது. இதை சுட்டிக்காட்டவே உலக கொசு தினம் ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 20 அன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நாள், ஒரு சிறிய பூச்சி மனித உயிர்களுக்கு ஏற்படுத்தும் பெரிய ஆபத்துகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், கொசுக்களால் பரவும் நோய்களைத் தடுக்கவும் ஒரு வாய்ப்பை வழங்குகிறது.

இந்த நாளின் பின்னணி:
1897-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20-ஆம் தேதி, பிரிட்டிஷ் மருத்துவரான சர் ரொனால்ட் ராஸ் (Sir Ronald Ross) ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டுபிடிப்பை வெளியிட்டார். மலேரியா நோய் பரவுவதற்குப் பெண் அனோபிலஸ் கொசுக்களே காரணம் என்பதை அவர் கண்டறிந்தார். இந்த கண்டுபிடிப்பு, உலகளாவிய சுகாதாரத் துறையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியது. இதற்காக அவருக்கு 1902-ஆம் ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசும் வழங்கப்பட்டது.
சர் ரொனால்ட் ராஸ் அவர்களின் இந்த மகத்தான கண்டுபிடிப்பை நினைவுகூரும் வகையில், லண்டன் ஸ்கூல் ஆஃப் ஹைஜீன் அண்ட் ட்ராபிகல் மெடிசின் (London School of Hygiene & Tropical Medicine) நிறுவனம், ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 20-ஆம் தேதியை உலக கொசு தினமாக அனுசரித்து வருகிறது.
கொசு என்ற பெயர் வந்தது எப்படி?
கொசு என்று தமிழில் அழைக்கப்பட்டாலும் கொசுகு என்ற ஒரு பெயரும் அதற்கு உண்டு. இதற்கு சிறியது என்று அர்த்தம் என்கிறார்கள் பூச்சியியல் துறையினர் அதாவது . “நாம் கொசுறு என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறோமே அதுபோன்றுதான் இதுவும். இவை அனைத்துமே சிறியது என்பதைத்தான் குறிக்கிறது. மசகம் என்றொரு பெயரும் கொசுவுக்கு உண்டு. கொசு கருமை நிறத்தில் இருப்பதை வைத்து இந்தப் பெயர் வந்திருக்கலாம்” என்கிறார்கள். ஆங்கிலத்தில் கொசுவை குறிக்கும் சொல் ஸ்பானிய வார்த்தையாகும். மொஸ்கிட்டோ என்றால் ஸ்பானிய மொழியில் சிறிய பூச்சி என்று அர்த்தம்.
“பார்ப்பதற்கு சிறியதாகத் தெரியும் கொசுவின் பின்புலம் பலமானது. 400 முதல் 450 மில்லியன் ஆண்டுகளாக அவை பூமியில் வாழ்ந்து வருகின்றன. தற்போது வரை 3000 முதல் 3500 வகையான கொசுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சமீபத்தில்கூட புனேவில் புதிய கொசு வகை (Culex katezari)கண்டுபிடிக்கப்பட்டது. இவற்றில் 200 வகைகள் மட்டுமே மனிதர்களின் ரத்தத்தை குடிக்கின்றன.”

கொசுக்கள் பரவும் வழிகள்:
தேங்கிய நீர்நிலைகள், வடியாத மழைநீர், திறந்தவெளி சாக்கடைகள், மூடப்படாத, நீர் இருக்கும் பாத்திரங்கள் மற்றும் தெருக்குப்பைத் தொட்டிகள் மூலம் பரவுகிறது.
கொசுக்களால் பரவும் முக்கிய நோய்கள்:
- மலேரியா: அனோபிலஸ் கொசுக்களால் பரவும் இந்த நோய், உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்களைப் பாதிக்கிறது.
- டெங்கு: ஏடிஸ் எஜிப்டி (Aedes aegypti) கொசுக்களால் பரவும் இந்த நோய், கடுமையான காய்ச்சல், உடல் வலி மற்றும் உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடும்.
- சிகிக்குன்யா: டெங்குவைப் பரப்பும் அதே வகை கொசுவால் பரவும் நோய்.
- யானைக்கால் நோய் (Lymphatic Filariasis): கியூலக்ஸ் (Culex) வகை கொசுக்களால் ஏற்படும் ஒரு நாள்பட்ட நோய்.
- ஜிகா வைரஸ் மற்றும் மஞ்சள் காய்ச்சல்.
கொசுவிடம் இருந்து தற்காத்து கொள்வது எப்படி?
கொசு, தண்ணீர் அதிகம் தேங்கும் இடத்தில் தான் இருக்கும். வீட்டைச் சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொண்டால் கொசுக்கள் வராது. வீட்டிற்குள் கொசுக்கள் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். வேப்ப இலையை காய வைத்து அதனை எரித்தால் வேப்ப இலையில் உள்ள கசப்பு தன்மைக்கு கொசுக்கள் வீட்டிற்குள் வராது. தண்ணீர் திறந்து வைக்கக்கூடாது, திறந்த வெளியில் வைத்தால் கொசுக்கள் அதிகம் வருவதற்கு வாய்ப்புண்டு. வீட்டைச் சுற்றி தோட்டங்கள் இருந்தால் மரம், செடி, இலைகளை சுத்தமாக, குப்பைகள் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அவ்வப்போது சுற்றி இருக்கும் இடங்களை சுத்தமாக வைத்துக் கொண்டால் கொசுக்கள் அண்டாது.
இந்த நாளில், பல்வேறு அரசு மற்றும் தனியார் அமைப்புகள், பொதுமக்களிடையே கொசுக்களால் ஏற்படும் ஆபத்துகள் பற்றியும், அவற்றை எப்படித் தடுப்பது என்பது பற்றியும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துகின்றன. வீடுகளையும், சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்திருத்தல், நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளுதல், கொசுவலைகளைப் பயன்படுத்துதல் போன்ற எளிய நடவடிக்கைகள் மூலம் கொசுக்களின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்தலாம் என வலியுறுத்தப்படுகிறது.


