அரசியல் ஆதாயத்துக்காக ஆந்திரா பிளவு!- அமராவதி அடிக்கலின் போது மோடி பேச்சு
ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலம் தெலுங்கானா, ஆந்திரா என இரு மாநிலமாக பிரிக்கப் பட்டு. தலைநகர் ஐதராபாத் தெலுங்கானா மாநிலத்துக்கு ஒதுக்கப்பட்டது. இதையடுத்து ஆந்திராவுக்கு புதிய தலைநகரை உருவாக்கு வது என்றும் அதுவரை ஐதராபாத் தில் தற்காலிகமாக செயல் படுவது என்று முடிவு செய்யப் பட்டது.ஆந்திரா பிரிவினைக்குப் பின் நடந்த சட்டசபை தேர் தலில் தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு வெற்றி பெற்று முதல்அமைச்சர் ஆனார். அவர் ஆந்திராவுக்கு புதிய தலைநகர் விஜய வாடாவுக்கும் குண்டூருக்கு இடையே அமராவதியில் உருவாக்கப்படும் என்று அறிவித்தார்.

புதிய தலைநகர் கட்டு மானப் பணி சிங்கப்பூர் நிறு வனத்திடம் ஒப்படைக்கப் பட்டது. சிங்கப்பூர் போன்ற நவீன நகரமாக அமரா வதியை உருவாக்க திட்ட மிடப்பட்டுள்ளது.புதிய தலைநகருக்காக குண் டூருக்கும், விஜய வாடாவுக்கும் இடையில் ஆயிரக்கணக்கான ஏக்கர் அரசு நிலங்களும், தனியார் நிலங்களும் கையகப்படுத்தப் பட்டன. புதிய தலைநகர் வாஸ்துப்படி கட் டப்படும் என்றும், இதற் கான அடிக்கல் நாட்டு விழா நடைபெறும் நாள், நேரம் போன்றவை ஜோதிடர்களி டம் ஆலோசனை பெறப்பட்டது. அதன்படி விஜயதசமி நாளான இன்று மதியம் 12.36 மணியில் இருந்து 12.43 மணிக்குள் அடிக்கல் நாட்டு விழா நடத்த முடிவு செய்யப்பட்டது.
இதில் சிறப்பு விருந்தினராக பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். கணபதி ஹோமம் மற்றும் ஹோம பூஜைகள் நடைபெற்ற பின்னர், மதிய வேளையில் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதற்காக ஆந்திரா உட்பட நாடு முழுவதிலும் இருந்து புனித நீர், மண் ஆகியவை சேகரித்து கொண்டுவரப்பட்டது.
இந்த விழாவில், ஜப்பான் அமைச்சர் யோசுகே டகாகி, சிங்கப்பூர் அமைச்சர் ஈஸ்வரன், மற்றும் பல மத்திய, மாநில அமைச்சர்கள், பல மாநில முதல்வர்கள், ஆளுநர்கள், நீதிபதிகள், பல வெளிநாட்டு தூதரக அதிகாரிகள், பல துறைகளைச் சேர்ந்த பிரமுகர்கள் மற்றும் வெளிநாடுவாழ் இந்தியர்களும் கலந்துகொண்டனர்.
மேலும் தெலங்கானா போராட்டம் தீவிரமானதிலிருந்து தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ் ஆந்திரா பகுதிக்கு செல்லவில்லை. இந்நிலையில், அமராவதி அடிக்கல் நாட்டு விழாவுக்கு வருமாறு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, நேரில் சென்று சந்திரசேகர ராவுக்கு அழைப்பு விடுத்தார். இதையடுத்து அவர் இவ்விழாவில் கலந்து கொண்டார். இதன்மூலம் 14 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் ஆந்திராவில் அடி எடுத்து வைத்தார்.
விழாவின் போது விஜயதசமி திருநாளுக்காக தெலுங்கில் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொண்டு தொடங்கிய பிரதமர் மோடி உரையில்,”அமராவதி உண்மையிலே மக்கள் தலைநகராகும். விஜயதசமி திருநாளன்று, வரலாற்றில் அதன் பண்பாட்டுக்கு பெருமை சேர்க்கும் அமராவதியை புதிய தலைநகராக்கும் புதிய முயற்சியை ஆந்திர அரசு எடுத்துள்ளது. உலகின் சிறந்த நடைமுறைகள், உலகின் சிறந்த மனங்கள் ஆகியவற்றை ஒருங்கிணைத்து சந்திரபாபு நாயுடு இப்பணியை எடுத்துக் கொண்ட வேகம் மற்றும் முயற்சிக்கு முதலில் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். சுதந்திரத்துக்குப் பிறகு குறைந்த அளவிலேயே புதிய தலைநகரங்கள் உருவாகியுள்ளன. ஆனால் நகரமயமாதல் பற்றிய தடை உணர்வை முதலில் களைய வேண்டும். நகரமயமாதல் குறித்து நாம் முன்னோக்கி சிந்திக்க வேண்டும். அதன் பிரச்சினைகளை ஆராயாமல் அதனை ஒரு வாய்ப்பாக பார்க்க வேண்டும்.
நாம் நவீன நகரங்களை கட்டமைக்க முன்னேறிச் செல்ல வேண்டும், இதனால்தான் 100 ஸ்மார்ட் நகரங்கள் திட்டத்தை நாம் தொடங்கியுள்ளோம். நாட்டின் பொருளாதார வளர்ச்சி, வருவாய் பெருக்கத்துக்கு நகரங்களின் வளர்ச்சியே மையம்.ஸ்மார்ட் நகரங்கள் நவீன தொழில்நுட்பங்களைக் கொண்டதாகவும், நவீன போக்குவரத்து வசதிகளை உடையதாகவும் இருக்க வேண்டும், இதில் விரயம் கூடாது.
இந்நிலையில், புதிய நகரங்களின் தனித்த அடையாளமாக அமராவதி இருக்க வேண்டும். இதன்மூலம் வேலை வாய்ப்பு மற்றும் வருவாய் பெருக்கத்துக்கான புதிய தொழில் நுட்பங்கள் அகியவற்றை நடைமுறைப்படுத்த முடியும்.2001 பூஜ் பூகம்பம் புதிய நகரங்களையும், புதிய வாழ்விடங்களையும் உருவாக்கும் முயற்சிகளுக்கான வாய்ப்பை வழங்கியது. வளர்ச்சி மற்றும் மேம்பாடு நோக்கிய முன்னேற்றத்துக்கு அரசியல் விருப்புறுதியை வழங்கியதிலும் பூஜ் பூகம்பம் புதிய முயற்சிகளுக்கான சிந்தனையை வழங்கியது. கச் மாவட்டம் இந்தச் சிந்தனையின் வாழும் உதாரணம்.
சிலர் தங்களது அரசியல் ஆதாயத்துக்காக அவசரம் அவசரமாக ஆந்திர மாநிலத்தை பிளவுறச் செய்தனர். இரு புறமும் உயிரை இழந்தவர்களின் வலியை நான் அறிவேன். இந்த வலியை கொண்டு வந்ததில் கடந்த அரசின் கைவண்ணம் உள்ளது. ஆந்திராவானாலும் தெலுங்கானாவானாலும் ஆன்மா என்னவோ தெலுங்குதான். உலகில் எந்த மூலையில் பணியாற்றிக் கொண்டிருந்தாலும் அந்த ஆந்திர மாநில மக்கள் ஆந்திரப் பிரதேசத்துக்கு வர முடியும். வருங்காலங்களில் ஆந்திரம் பொருளாதாரப் புரட்சியின் முன்னோடியாக திகழப்போகிறது. இளைஞர்கள் வழிநடத்தும் பொருளாதாரப் புரட்சியாக இது இருக்கும். 80 கோடி இளைஞர்களைக் கொண்ட நாடு உலகின் உச்சத்தை எட்ட முடியும். ஆந்திரம் மற்றும் தெலுங்கானா இத்தகைய பொருளாதாரப் புரட்சியில் ஒருவரை யொருவர் அனுசரித்துச் செல்ல வேண்டும், இதனால் இருதரப்பினருக்கும் பயனுண்டு.
அடல் பிஹாரி வாஜ்பாய் 3 புதிய மாநிலங்கள் உருவாவதையும் அதன் முன்னேற்றத்தில் பிரச்சினைகள் எதுவும் ஏற்படாது என்றும் நினைத்தார். தெலுங்கானா, ஆந்திரம் ஆகிய மாநிலங்களும் அவ்வகையில் பயணிக்கும் என்று நான் விரும்புகிறேன்.கடந்த காலத்தில் மத்திய அரசு மாநிலத்துக்கு உதவவில்லை. ஆனால், ஆந்திர மாநிலம் மனித வள தலைநகரமாக உருவெடுப்பதை எங்கள் அரசு உறுதி செய்யும். ஆந்திரத்தில் மனிதவள முன்னேற்றத்து க்காக தேசிய அளவிலான 11 நிறுவனங்களை எங்கள் அரசு அமைத்துள்ளது.
நீங்கள் உங்கள் கிராமங்களிலிருந்து மண்ணையும் நீரையும் கொண்டு வந்து மக்கள் தலைநகரமாக உருவாக்க உங்களாலான முயற்சிகளை மேற்கொண்டுள்ளீர்கள். நான் நாடாளுமன்றம் மற்றும் யமுனாவிலிருந்து மண்ணையும் தண்ணீரையும் சந்திரபாபு நாயுடுவிடம் கையளித்தபோது அவர் இது உணர்ச்சிகரமான தருணம் என்றார். அதாவது நாட்டின் தலைநகரமே அமராவதியை வந்து சேர்ந்தது போன்ற ஒரு விஷயமாகும் இது.
இந்தக் குறியீடு, டெல்லி எப்போதும் ஆந்திர மாநிலத்துடன் இணைந்திருக்கும் என்பதை உணர்த்துவதாகும். மாநிலத்தை பிரித்தவர்கள், எதிர்ப்புணர்வு என்ற விதையைத் தூவி மாநிலத்தின் இளைஞர்களிடத்தில் தவறான செய்தியைப் பரப்பியுள்ளனர். ஆந்திரப் பிரதேச மறு உருவாக்க சட்டத்தை அதன் கடைசி எழுத்து வரை அமல்படுத்துவோம்.மோடியும், சந்திரபாபு நாயுடுவும் ஆந்திர மாநில வளர்ச்சிக்காக என்ன செய்ய வேண்டும் என்று பேசினோமோ அது அப்படியே நடைமுறைப்படுத்தப்படும்” என்றார் மோடி.


