‘பாயும் ஒளி நீ எனக்கு’ – விமர்சனம்!
பாரதியாரின் கண்ணம்மா — என் காதலி கவிதை தொகுப்பில் இடம் பெற்ற பாயுமொளி நீ எனக்கு, பார்க்கும்விழி நானுனக்கு;- என்ற பாடலின்
முதல் வரியை டைட்டிலாகக் கொண்டு கண் பார்வை குறைபாடுள்ள ஒரு ஹீரோவை வைத்து கமர்ஷியல் படமொன்றை கொடுக்க முயன்றிருக்கிறார்கள்.. கையில் கிடைத்த கதையை திரைக்கதை ஆக்குவதில் அக்கறைக் காட்டாததால் எடுபடாமல் போய் விட்டது.

கதை என்னவென்றால் குழந்தை பருவத்தில் ஏற்பட்ட விபத்தால் கண்பார்வையில் குறைபாடு கொண்டவர் அரவிந்த் என்ற கேரக்டரில் விக்ரம் பிரபு. அதாவது மிக அதிக வெளிச்சம் இருக்கும் போதுதான் அரவிந்த்திற்கு கண் தெரியும். வெளிச்சம் குறைவான நேரத்தில் குறிப்பாக இரவு நேரத்தில் கண் பார்வை குறைவாக இருக்கும். ஆனாலும் அவரை சித்தப்பா ஆனந்த் எடுத்து தைரியம் சொல்லி வளர்க்கிறார். அந்த வளர்ப்பு அப்பாவை சில காரணங்களுக்காக ஒரு கோஷ்டி கொன்று விடுகிறது, இதை அடுத்து தனது வளர்ப்பு அப்பா கொல்லப் பட்டதற்கு காரணம் தேடி துப்பறியும் வேலையில் ஈடுபடுகிறார். இதனால் அவரையும் கொல்ல ரவுடிகள் முயல்கின்றனர். அவர்கள் யார்? எதற்காக கொலை செய்ய முயல்கிறார்கள் என்பதற்கு விறுவிறுப்பாக பதில் சொல்ல முயல்கிறது பாயும் ஒளி நீ எனக்கு.
விக்ரம் பிரபு முழு படத்தையும் தாங்கி பிடிக்கிறார். பார்வை குறைபாடு உள்ளவராக மிக நன்றாக நடித்துள்ளார். அப்பாவை காப்பாற்ற முடியாமல் போகும் போது ஆற்றாமை, காதலில் பொறுமை, அதை விட அதிரடி ஆக்ஷனில் வித்தியாசம் என ஒரு மாறுபட்ட நடிப்பை தந்துள்ளார். வாணி போஜன் வழக்கம் போல் ஒரு காதலியாக வருகிறார்.. போகிறார். வில்லன் தனஞ்செயா கொஞ்சம் மிரட்டுகிறார் கொஞ்சம் நடிக்கிறார்.
கேமராமேன் ஸ்ரீதர் பார்வை குறை உள்ளவர் பார்வையில் இருளையும் ஒளியையும் பிரித்து பல காட்சிகளை படம் பிடித்துள்ளது வித்தியாசமாக இருக்கிறது. மணிசர்மாவின் மகன் மஹதி ஸ்வர சாகரின் பின்னணி இசை எடுபடவில்லை என்றாலும் பாடல்கள் பரவாயில்லை ..
கொஞ்சம் வித்தியாசமான ஸ்டோரி லைனைப் பிடித்த டைரக்டர் அடுத்த சீனின் செட் பிராபர்ட்டியைக் கூட ரசிகன் யூகிக்கக் கூடிய அளவிலான ஸ்கீரின் பிளே அமைத்து டேமேஜ் ஆக்கி விட்டார்
மார்க் 2.5/5


