ரியானா பர்னவி – சவுதி அரேபியாவின் முதல் பெண் விண்வெளிப் பயண வீரர்!

ரியானா பர்னவி – சவுதி அரேபியாவின் முதல் பெண் விண்வெளிப் பயண வீரர்!

சமீப காலமாக சவுதி அரேபியா, இஸ்லாத்தின் பெயரால் தனக்குத் தானே ஏற்படுத்தி வைத்திருந்த இறுக்கங்களைக் கொஞ்சம் கொஞ்சமாக நெகிழ்த்தி வருகிறது. இஸ்லாம் அறிமுகமான நிலம் என்ற வகையில் சவுதியின் மீதான புனிதத்தைக் கொண்டிருக்கும் உலகு தழுவிய முஸ்லிம்களுக்கு சவுதி அரேபியாவில் ஏற்பட்டு வரும் இந்த மாற்றங்கள், குறிப்பாக பெண்கள் சார்ந்து சவுதி அரசு மேற்கொண்டு வரும் மாற்றங்கள் நல்ல பார்வையை உருவாக்கும். அந்த வரிசையில் சமீபத்தில் தங்கள் நாட்டிலிருந்து முதன்முதலாக விண்வெளிக்கு அனுப்பிய வீரர்களுள் ஒருவராக ரியானா பர்னவி என்னும் பெண்ணை பிரதிநிதித்துவப்படுத்தியதன் வழியாக மீண்டும் பெண்கள் சார்ந்த அணுகுமுறையில் ஓர் ஆரோக்கியமான பார்வையினை ஏற்படுத்திக் கொண்டுள்ளது .

விண்வெளி சார்ந்த ஆய்வுகள், விண்வெளிக்கு வீரர்களை ஆய்வுக்கு அனுப்புதல் என்னும் முயற்சியில் சவுதி அரசு ஈடுபட்டு வருகிறது. அதன் வெளிப்பாடாக ரியானா பர்னவி மற்றும் அலி அல் கர்னி ஆகிய இரு வீரர்களை விண்வெளிக்கு அனுப்பியது. தங்கள் நாட்டில் இருந்து முதன்முதலாக விண்வெளிக்கு அனுப்பிய வீரர்கள் இருவருள் ஒருவராகப் பெண் ஒருவரையும் பங்கு பெற வைத்தது அந்த அரசின் விசாலப்பட்டு வரும் பார்வையைக் காட்டுகிறது. சவுதி அரேபியாவின் முதல் பெண் விண்வெளி வீரர் என்னும் சிறப்புக்கு உரியவராக ரியானா பர்னவி மாறி இருக்கிறார்.

விண்வெளிப் பயணத்தை நிறைவு செய்துவந்த இரண்டு வீரர்களையும் சவுதி விண்வெளி ஆய்வு மையத்திற்கு அழைத்து அந்நாட்டு அரசு உற்சாகமாக வரவேற்பு வழங்கியது. ரியானா பர்னவி தொண்ணூறுகளின் இறுதியில் சவுதியின் ஜித்தாவில் பிறந்து இப்போது முப்பத்தைந்து வயதைத் தொடுபவர். தன்னுடைய கல்லூரிக் கல்வியில் பயோமெடிக்கல் துறையைத் தேர்ந்தெடுத்து இளங் கலையை நியூசிலாந்திலும் முதுகலையை சவுதியிலும் நிறைவு செய்தவர். கூடுதலாக கேன்சர் தொடர்பான ஸ்டெம்செல் ஆய்வில் சென்ற ஒன்பது ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறார்.

Thuckalayhameem Musthafa

error: Content is protected !!