பெரிசு என்று பட்டம் சூட்டி மூலையில் முடக்கிய பெரியோரை மதிக்கலாமே!

‘ஆய்வு’ எனும் ஒற்றைச் சொல்லை மையப்படுத்தி, ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு ஆண்டுதோறும் ஒதுக்கீடு செய்து வருகிறது. எனினும் இதில் முக்கால் பங்குக்கும் அதிகமான ஆய்வியல் அம்சங்கள் தமிழகத்தின் எல்லைக்குள் நுழைவதே குதிரைக்கொம்பு. ஓய்வு என்பது வயது முதிர்வு மட்டுமல்ல, பழகியப் பகிர்வும் அதுதான். அனுபவ நிறைவும் அதுவே. மூளை முழுக்க அறிவுப் பழமாக.. அனுபவச் சுரங்கமாக நிறைவு நிலையை எட்டுபவர்கள், அவற்றைத் தம் அனுபவத் தொட்டிலுக்கு அர்ப்பணிக்க விரும்பினாலும் அது சாத்தியப்படுவது இல்லை. நானும் ஓய்வு பெற்றவன் தான். ஆனால் இது வயது ஓய்வு தானே தவிர உழைப்பு ஓய்வு அல்ல. எனவே ஓய்வு என்பது ஆய்வு. எனவே ஆய்வு சார்ந்த அம்சங்களில் கவனம் செலுத்தியபோது பிரமிப்பூட்டும் பல நிலைப்பாடுகளை உணர முடிகிறது. அவற்றின் மூலக்கூறுகளில் சிலவற்றை, வாசகர்களின் மூளை பேறு பெற இங்கு கோடிட்டுக் காட்டுகிறேன்.
மத்திய அரசின் நேரடி நிதி உதவியைக் கொண்டு என் அறிவின் எல்லைக்குள் 176 ஆய்வுக் கவுன்சில்கள் இயங்கி வருகின்றன. இந்தியன் மெடிக்கல் ரிசர்ச் கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) என்ற ஆய்வு அமைப்பு தான் தற்போது தொற்றுகள் அற்றுப் போக முற்றிய ஆய்வுகளில் மூழ்கி இருக்கிறது. இந்த கவுன்சிலின் சர்வதேச விரிவுப் பார்வை சார்ந்த ஆராய்ச்சிகளின் பின்னர் பல முடிவுகளை இக்கவுன்சில், மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்கிறது. இதன் அடிப்படையில் தான் தடுப்பூசிகள் தயாராகின்றன. இவற்றைச் செலுத்திக் கொள்ளும் காலவரையறைகள் முடிவு செய்யப்படுகின்றன. இவற்றின்படி தான் அகில இந்தியாவே இயங்கிக் கொண்டு இருக்கிறது. இது வெளிப்படையாகத் தற்போது தெரிந்து இருக்கும் ஆய்வு கவுன்சில்.
இதுபோல ஐ.சி.எச்.ஆர். எனும் இந்திய வரலாற்று ஆய்வுக் கவுன்சில் செயல்படுகிறது. இதுவும், ஆழமான ஆராய்ச்சிகளுக்குப் பின்னர், நாடெங்கும் ஆய்வியல் அறிஞர்களின் தலைமையிலான ஆராய்ச்சிக் கருத்தரங்குகளின் வாயிலாக நிர்ணயம் செய்யப்பட்ட பல முடிவுகளை ஒன்றிய அரசுக்குச் சமர்ப்பணம் செய்து வருகின்றது. இவையும் ஒன்றிய அரசின் வாயிலாக நடைமுறைக்குக் கொண்டு வரப்படுகின்றன. இவ்வாறாகத் தான் 176 ஆய்வு கவுன்சில்கள் என் பார்வைப் பாய்ச்சலுக்குள் பதுங்கிக் கிடக்கின்றன. இவற்றின் ஆய்வுகளுக்கெனத் தான் ஒன்றிய அரசு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் நிதி உதவி செய்து வருகிறது.
இது மட்டுமின்றி, சர்வதேச அளவிலான பல்வேறு அமைப்புகளும் சில குறிப்பிட்ட ஆய்வு அம்சத்தின் நோக்கம் கருதி இத்தகு கவுன்சில்கள் பலவற்றுக்கு நிதி உதவி செய்து வருகின்றன. ஐ.நா.சபையின் நேரடி நிர்வாகத்தின் கீழ் நூற்றுக்கும் மேற்பட்ட துணைக் குழுக்கள் உள்ளன. இவையும் சர்வதேச அளவில் ஆய்வுப் பணிகளுக்காக நிதி உதவிகளை வழங்கி வருகின்றன. இவை முழுக்க முழுக்க மானியம் தான். செலவு செய்தபின் அந்த குறிப்பிட்ட நோக்கம் சார்ந்த வகையிலான வரவு- செலவு கணக்கு விபரத்தைத் தணிக்கை செய்து, அந்தந்த நிதி உதவி தந்த நிறுவனத்துக்கு அனுப்பி வைத்து விட்டாலே போதுமானது. இதில் அந்த நிறுவனம் திருப்தி அடைந்துவிட்டால் அடுத்தடுத்த நோக்கங்களின் பேரில் மறுகட்ட நிதி உதவி வழங்கப்படும்.
யுனஸ்கோ நிறுவனமும் இதேபோன்று நிதி உதவிகளைச் செய்து வருகின்றது. உலகச் சுகாதார நிறுவனம் கூட இத்தகு நிதி உதவித் திட்டங்களை வைத்திருக்கிறது. அகில உலக நாடுகளுக்கு எந்த நாட்டின் ஆய்வு முடிவுகள் பயன்படும் என்று அந்த நிறுவனம் கருதுகிறதோ அந்த நாட்டு நிறுவனங்களுக்கு யுனஸ்கோ நிதி உதவி செய்யும். உலக சுகாதார நிறுவனமும் நல்கை வழங்கும். இவ்வாறான ஆய்வுப் பணிகளுக்கு நிதி உதவியைச் செய்துவரும் சர்வதேச நிதியத்து நிறுவனங்கள் என்று எடுத்துக் கொண்டால் இவையும் நூற்றுக்கணக்கில் இருக்கின்றன. இத்தகு விபரங்களை விரிவாக்கினால் அச்சுக்குள் அடைத்தாலும் மிச்சமாகியே தீரும். இவை எல்லாம் நமக்கு என்ன அறிவிப்பைத் தருகின்றன?
பெரும்பாலான தேசிய ஆராய்ச்சி நிறுவனங்கள் டெல்லியை மையப்படுத்தியே இயங்கி வருகின்றன. எனவே இவை அனைத்தும் தமிழகத் தகவல் பலகைக்குள் பதிந்தாக வேண்டும். இதன் மூலமாக ஆய்வுத் திட்டங்களுக்கான நிதி என்ற பெயரில் ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் தொகையைத் தமிழகம் பெற்றுச் செயல்பட முடியும். எனவே ஒவ்வொரு அமைச்சகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டிலும், துணைச் சார்பு கொண்டு செயல்படும் ஆய்வியல் கவுன்சில்கள் தொடர்பான தகவல்களைத் திரட்ட வேண்டும். இவற்றின் நிதியை எப்படிக் கேட்டுப் பெறுவது என்பது தொடர்பான விபரங்களையும் வேட்டையாடிக் கேட்டுப் பெற வேண்டும். அவை, என்னென்ன தகுதிகள் தேவை என்று கருதுகின்றனவோ அந்தந்த தகுதிகள் கொண்டவையாகத் தமிழக ஆய்வு அமைப்புகளைத் தரமுயர்த்த வேண்டும். பின்னர் இந்த நிதி உதவிகளைப் பெறுவதற்கான வழிமுறைகள் வசப்பட்டு விடும்.
இத்தகு ஆய்வு கவுன்சில்களில் பெரும்பாலும் வடநாட்டு அறிஞர்கள் தான் உறுப்பினர்களாக நியமனம் பெற்று வருகின்றனர். இவற்றுக்கான நியமனங்கள் எப்போது… எப்படி நடக்கின்றன என்ற தகவல்கள் கூடத் தமிழகத்துக்கு எட்டுவதில்லை. தென்னகத்தைப் பொறுத்தவரை கேரள மாநிலத்தவர்கள் அதிக அளவில் இத்தகு கவுன்சில்களில் உறுப்பினர்களாக இருக்கின்றனர். டில்லியின் அதிகார பீடத்தில் இருக்கும் கேரள ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் வழிகாட்டுதல்கள் இதில் அதிகம். புதுடில்லியில் உயர் தகுதிமிக்க அதிகாரப் பதவிகளில் இருக்கும் தமிழகத்துத் தவப்புதல்வர்கள் இந்த நிதித் தவத்தில் ஈடுபட்டால் தமிழக ஆய்வாளர்களுக்கு வரம் கிடைக்கும், வளம் நிலைக்கும்.
அண்ணா பல்கலைத் துணைவேந்தராக இருந்த முனைவர் வா.செ.குழந்தைசாமி இத்தகைய ஆய்வு கவுன்சில்கள் சிலவற்றில் உறுப்பினராக இருந்து வந்துள்ளார். இப்போது அவர் உயிருடன் இல்லை. எனினும் தமிழகத்தில் இத்தகு உறுப்பினர் பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்ற அறிவுலக ஆசான்கள் வயது முதிர்வால் வீட்டில் முடங்கிக் கிடக்கக்கூடும். அவர்களை அடையாளம் காண வேண்டும். அவர்களின் மூளையும் இளைஞர்களின் வேலையும் ஒருங்கிணைந்தால் வெற்றி பெற்றிடல் சாத்தியம் தான்.
தென்னிந்திய நாணயவியல் ஆய்வுக் கழகப் பொருளாளராகத் தொடர்ந்து 17 ஆண்டுகள் பொறுப்பு வகித்திருந்தேன். ஆண்டுதோறும் ஒரு தென்னக மாநிலம் என்றவாறு ஆய்வுக் கருத்தரங்குகள் நடந்துவருகின்றன. நான் பொறுப்பில் இருந்தவரை, இக்கருத்தரங்குகளுக்கு ஏ.எஸ்.ஐ. எனும் ஆர்க்கியாலஜிகல் சர்வே ஆஃப் இந்தியா என்ற ஒன்றிய அரசு நிறுவனத்தில் இருந்து மானிய உதவிகளைப் பெற்றுவந்திருக்கிறேன்.
ஆண்டுக் கணக்கில் நீண்ட நெடிய அபூர்வ அனுபவங்களைத் தேக்கி வைத்திருக்கும் எத்தனையோ முதியோர்… காட்டில் காய்ந்த நிலா என்றவாறு கவனிப்பாரற்றுக் கிடக்கின்றனர். ‘பெருசு’ என்ற பட்டம் சூட்டி, அவர்களை மூலையில் முடக்கி விட்டுவிடுவது என்பது, முதிர்ந்து முழுமை பெற்ற மூளையையே மூடி வைத்ததாகி விடும்.முதியோர்…மதியோர்., அவர்களை மதியுங்கள்.
நூருல்லா ஆர்.
செய்தியாளன்
01-07-2021.