66 ஏ சட்டப் பிரிவு செல்லாது என்ற சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு பற்றி மத்திய அரசு கருத்து
சிவசேனா தலைவர் பால்தாக்ரே கடந்த 2012ம் ஆண்டு மறைந்தபோது, மகாராஷ்டிராவில் கடையடைப்பு சம்பவம் நடத்தப்பட்டது. தனிநபர் ஒருவரின் மறைவுக்காக இப்படி கடையடைப்பை நடத்தி, பொது மக்களை பாதிக்கச் செய்வது நியா யம் தானா? என தானேவைச் சேர்ந்த ஷகீன் தடா மற்றும் ரினு சீனிவாசன் என்ற இரண்டு மாணவிகள் பேஸ்புக்கில் கருத்து தெரிவித்திருந்தனர். இதற்கு பலர் ‘லைக்’ போட்டிருந்தனர். இச்சம்பவத்துக்கு சிவசேனா தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அந்த பெண்கள் இருவரும் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் 66ஏ பிரிவின்கீழ் கைது செய்யப்பட்டனர்.

இந்த விவகாரம் சர்ச்சை ஏற்படுத்தியது. தகவல் தொடர்பு சாதனங்கள் மூலம் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவிப்போருக்கு தண்டனை அளிக்கும் இந்த சைபர் சட்டப் பிரிவை எதிர்த்து, ஷ்ரய்யா சிங்கால் என்ற சட்ட மாணவி சுப்ரீம் கோர்ட்டில் கடந்த 2012ம் ஆண்டு முதன் முதலில் வழக்கு தொடர்ந்தார். அதை தொடர்ந்து இந்த சட்டப் பிரிவில் திருத்தம் செய்ய வேண்டும் என பலரும் மனு செய்தனர். இந்த விவகாரம் குறித்து கடந்த 2013ம் ஆண்டு மே 16ம் தேதி ஆலோசனை வழங்கிய சுப்ரீம் கோர்ட், சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவிக்கும் நபரை, போலீஸ் ஐ.ஜி அல்லது துணை கமிஷனர் அந்தஸ்து அதிகாரியின் அனுமதி இல்லாமல் ஐ.டி. சட்டம் 66ஏ பிரிவின்கீழ் போலீசார் கைது செய்யக் கூடாது என கூறியது. இது தொடர்பான வழக்கின் விசாரணை கடந்த மாதம் 26ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், சமாஜ்வாடி மூத்த தலைவர் அசம்கானை விமர்சித்து ஒரு மாணவன் பேஸ்புக்கில் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்திருந்தான்.
அந்த மாணவன் ஐ.டி. சட்டம் 66ஏ பிரிவின்கீழ் போலீசாரால் கடந்த 18ம் தேதி கைது செய்யப்பட்டான். உடனே கோர்ட் ஆலோசனை மீறப்பட்டுள்ளதாக மீண்டும் புகார் எழுந்தது. இதையடுத்து இச்சம்பவம் குறித்து உ.பி. போலீஸ் விளக்கம் அளிக்கும்படி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.
இதையடுத்து வழங்கிய தீர்ப்பின் விவரம்: ஐ.டி. சட்டம் 66ஏ பிரிவுக்கு எதிராக தொடுக்கப்பட்ட மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் சலமேஸ்வர் மற்றும் நாரிமன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் நேற்று அளித்த தீர்ப்பில் கூறியதாவது: ஜனநாயகத்தில் மக்களுக்கு வழங்கப்படும் மிக முக்கிய இரு விஷயங்கள், அடிப்படை உரிமை, கருத்து சுதந்திரம்; இரண்டும் இல்லாவிட்டால் ஜனநாயகம் இல்லை; கருத்து சுந்திரம் மிகவும் முக்கியமானது. தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் 66ஏ பிரிவு, மக்களின் இந்த உரிமையை நேரடியாக பாதிக்கிறது. இது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது.
இந்தப் பிரிவில் இடம் பெற்றுள்ள எரிச்சலூட்டுகிற, அசெளகரியாமான, அதிகமாக வெறுப்பூட்டுதல் போன்ற வார்த்தைகள் தெளிவற்ற நிலையில் உள்ளன. இந்த குற்றப் பிரிவில் உள்ள சரத்துகளை அறிந்து கொள்வது குற்றம் செய்பவருக்கும், போலீசாருக்கும் சிக்கலாக உள்ளது. இதை படிக்கும்போது நீதிபதிகளுக்கே குழப்பம் ஏற்படும்போது, போலீசாரால் எப்படி முடிவெடுக்க முடியும். இச்சட்டப்பிரிவை தவறாக பயன்படுத்த மாட்டோம் என அரசு உறுதி கூறுகிறது. ஆட்சிகள் வரும், போகும். ஆனால் சட்டம் எப்போதும் இருக்கும். அடுத்து வரும் அரசு இதை தவறாக பயன்படுத்தாது என்பதற்கு இப்போதுள்ள அரசு உறுதி அளிக்க முடியாது. எனவே இந்த சட்டப்பிரிவு நீக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் கூறினார். ஆனால் தகவல்களை வெளியிட வலைதளங்களுக்கு தடை விதிப்பதற்கான அதிகாரம் அளிக்கும் ஐ.டி சட்டத்தின் 69ஏ பிரிவு, நடுநிலைமை பொறுப்புக்கு விலக்களிக்கும் 79வது பிரிவு ஆகியவற்றை உச்சநீதிமன்றம் நீக்கவில்லை. சில கட்டுப்பாடுகளுடன் இந்த சட்டப்பிரிவுகள் அமலில் இருக்கலாம்”என சுப்ரீம் கோர்ட் தெரிவித்தது.

ithanidaiyee இதுபற்றி மத்திய அரசு சார்பில் மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத் கருத்து தெரிவித்துள்ளார்.
அவர்,”முந்தைய அரசின் நிலைப்பாட்டை ஆதரிப்பது இல்லை என்றுதான் நரேந்திர மோடி அரசு முடிவு செய்துள்ளது. அந்த சட்டப்பிரிவு, துஷ்பிரயோகம் செய்யப்படுவதை தடுக்க மிகக்கடுமையான வழிமுறைகளை கொண்டுவர விரும்புவதாகவே சுப்ரீம் கோர்ட்டில் நாங்கள் தெரிவித்தோம். பேச்சு, கருத்து சுதந்திரத்தை நாங்கள் மதிக்கிறோம். சமூக வலைத்தளங்களில் கருத்து பரிமாற்றத்தையும் மதிக்கிறோம். மாறுபட்ட கருத்துகளையோ, விமர்சனங்களையோ தடுப்பது எங்கள் நோக்கம் அல்ல.”என்று அவர் கூறினார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தீர்ப்பை வரவேற்கிறேன். 66ஏ பிரிவு, மோசமாகவும், தவறாக பயன்படுத்தப்படும் வகையிலும் உருவாக்கப்பட்டது. பேச்சுரிமையை தவறாக பயன்படுத்துவோர் மீது சாதாரண சட்டங்களையே பயன்படுத்தலாம். அதை பலப்படுத்த வேண்டுமானாலும், பரிசீலிக்கலாம். ஆனால், அதற்கு 66ஏ பிரிவு, தீர்வு அல்ல’ என்று கூறியுள்ளார்.
ஐக்கிய ஜனதாதள தலைவர் சரத் யாதவ், ‘நீதித்துறையை நான் மதித்தாலும், நல்ல சட்டப்பிரிவை நீக்கியது தவறு. ஏனென்றால், பேச்சு சுதந்திரம் என்பது அவதூறு செய்யும் சுதந்திரம் அல்ல’ என்று கூறியுள்ளார்.
சிவசேனா கட்சி, ‘இத்தீர்ப்பு, போலீசாரின் கரங்களை பலவீனப்படுத்தி விடும்’ என்று கூறியுள்ளது.
ஆம் ஆத்மி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தீர்ப்பை வரவேற்கிறோம். எதிர்க்கட்சியாக இருந்தபோது, இந்த சட்டப்பிரிவை எதிர்த்த பா.ஜனதா, ஆளுங்கட்சியான பிறகு ஆதரித்து இரட்டை நிலையை எடுத்தது’ என்று கூறியுள்ளது.
நடிகர் கமல்ஹாசன் கூறுகையில், ‘தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியை நிறுத்தக்கூடாது, நிறுத்த முடியாது என்று கருதுகிறேன்’ என்றார்.
இந்திப்பட பிரபலங்கள் மதுர் பண்டர்கர், சஞ்சய் குப்தா, புனித் மல்கோத்ரா, பிரிதிஷ் நந்தி, அசோக் பண்டிட் ஆகியோர் தனித்தனியாக வெளியிட்ட செய்திகளில், ‘இது நல்ல செய்தி. கருப்பு சட்டம் போய்விட்டது. ஜனநாயகத்தில், கருத்து சுதந்திரம் நிலைநாட்டப்பட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட்டுக்கு நன்றி. சுப்ரீம் கோர்ட்டே ஒரே நம்பிக்கை என தோன்றுகிறது’ என்று கூறியுள்ளனர்.
இதனிடையேசுப்ரீம் கோர்ட்டால் நீக்கப்பட்டுள்ள 66ஏ பிரிவின் கீழ், நாட்டிலேயே முதல்முதலில் கைது செய்யப்பட்டவர், புதுச்சேரியில் விற்பனை பிரதிநிதியாக பணியாற்றி வரும் ரவி சீனிவாசன் (வயது 47) ஆவார். அவர் இந்த தீர்ப்பால், முழு நிம்மதி அடைந்திருப்பதாக கூறினார். ‘என் மீதான வழக்குக்காக 10 தடவை கோர்ட்டுக்கு சென்றுள்ளேன். இன்று (நேற்று) காலை கூட மிரட்டல் வந்தது. இறுதியாக நீதி வென்றது. பேச்சு சுதந்திரம் நிலை நிறுத்தப்பட்டது’ என்று அவர் கூறினார்.
கடந்த 2012-ம் ஆண்டு, சிவசேனா தலைவர் பால் தாக்கரே மரணத்துக்கு கடையடைப்பு நடத்தியதை விமர்சித்து பேஸ்புக்கில் கருத்து தெரிவித்ததற்காக கைது செய்யப்பட்டவர்கள் ஷாகீன் தாதா, ரேணு சீனிவாசன் ஆகியோர். இச்சம்பவம், தேசிய அளவில் பரபரப்பை உருவாக்கியது. அவர்களுடைய குடும்பத்தினரும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை வரவேற்றுள்ளனர்


