’தி டார்க் ஹெவன்’ ட்ரெய்லர் வெளியீட்டு விழாத் துளிகள்!

’தி டார்க் ஹெவன்’ ட்ரெய்லர் வெளியீட்டு விழாத் துளிகள்!

கோதை என்டர்டெயின்மெண்ட் மற்றும் எம்.எஸ்.ஸ்விஸ் ஃபிலிம் பேக்டரி தயாரிப்பில், பாலாஜி இயக்கத்தில் உருவாகியிருக்கும் புதிய திரைப்படம் ‘தி டார்க் ஹெவன்’. நாட்டார் கதைகளில் சொல்லப்படும் அமானுஷ்ய அம்சங்களை மையமாகக் கொண்டு மர்மமான க்ரைம் த்ரில்லராக உருவாகியுள்ள இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை கிரீன் பார்க் ஓட்டலில் நடைபெற்றது.

அறிமுக நாயகன் சித்து பிரதான பாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்திற்கு ‘எ சித்து இன்வெஸ்டிகேஷன்’ (A Sidhu Investigation) என்ற டேக் லைன் வைக்கப்பட்டுள்ளது. தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய 4 மொழிகளில் வரும் ஜூலை 17 அன்று இப்படம் திரைக்கு வரவுள்ளது.

ட்ரெய்லர் பார்க்கும் வரை நம்பிக்கை இல்லை: வேல ராமமூர்த்தி

விழாவில் கலந்து கொண்டு பேசிய நடிகர் மற்றும் எழுத்தாளர் வேல ராமமூர்த்தி, சமீபத்தில் மறைந்த இயக்குநர் கே. பாக்யராஜ் அவர்களின் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டு தனது துயரத்தை வெளிப்படுத்தினார். தொடர்ந்து படம் குறித்துப் பேசுகையில்:

“இயக்குநர் பாலாஜி போனில் கதை சொல்லும்போது மற்றவர்களைப் போலத்தான் இருந்தது, சற்றே சந்தேகப்பட்டேன். ஒருவேளை படம் எடுக்க முடியாமல் தோற்றுவிட்டால் அமெரிக்கா சென்றுவிடுவதாகக் கூறினார். அவரது உழைப்புக்காகவே இப்படம் ஓட வேண்டும். உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், ட்ரெய்லர் பார்க்கிற வரை எனக்கு இந்த படத்தின் மீது நம்பிக்கை இல்லை. ஆனால் இப்போது சொல்கிறேன், படம் நிச்சயம் தோற்காது; அவர் அமெரிக்கா செல்ல வேண்டிய அவசியமில்லை.”

உப்புமா படங்களால் திரையுலகிற்கு ஆபத்து: தயாரிப்பாளர் மனோஜ்

இன்றைய சினிமா சூழல் குறித்து தயாரிப்பாளர் மனோஜ் பேசுகையில், “தரமற்ற மற்றும் உப்புமா படங்களால் தயாரிப்பாளர்களுக்கு மட்டும் அல்ல, திரையுலகில் பலருக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் திறமையான இயக்குநர்களுக்குக் கிடைக்க வேண்டிய இடம் கிடைக்காமல் போகிறது. ‘தி டார்க் ஹெவன்’ நிச்சயம் வெற்றி பெறக்கூடிய நல்ல கிரைம் த்ரில்லராக இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது” என்றார்.

மற்றொரு தயாரிப்பாளரான ஷரண், பாலாஜியின் உழைப்பையும் போராட்டத்தையும் பார்த்துவிட்டு, அவருக்கு உதவ வேண்டும் என்ற நோக்கில் தயாரிப்பில் இணைந்ததாகக் குறிப்பிட்டார்.

70% படத்தை தூக்கிப்போட்டுவிட்டு எடுத்த சாதனை: ரித்விகா

படப்பிடிப்பு அனுபவங்களைப் பகிர்ந்த நடிகை ரித்விகா, “இவ்வளவு போராட்டங்களுக்குப் பிறகு படம் ரிலீஸ் வரை வந்திருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. ஏறத்தாழ 70% படத்தை எடுத்து முடித்த பின், அதை வேண்டாமென்று தூக்கிப்போட்டுவிட்டு, மீண்டும் அதே லொகேஷன்களில் மறுபடி எடுத்து ரிலீஸ் வரை கொண்டு வந்திருக்கிறார்கள். இது இவர்களின் விடாமுயற்சிக்குக் கிடைத்த சாதனை” எனப் பாராட்டினார்.

நடிகர் அருள் டி சங்கர் பேசுகையில், இயக்குநர் பாலாஜிக்கு தாங்க முடியாத மன அழுத்தம் இருந்ததாகவும், ஒருமுறை அந்த அழுத்தத்தில் தனது சொந்த காரையே அடித்துச் சேதப்படுத்தியதாகவும், ஆனால் அந்த கோபத்தை படப்பிடிப்பில் காட்டாமல் உழைத்தார் என்றும் குறிப்பிட்டார்.

நம்மைப் பற்றி நாமேதான் சொல்லிக் கொள்ள வேண்டும்: நாயகன் சித்து

இப்படத்தின் மூலம் பிரதான நாயகனாக அறிமுகமாகும் தொலைக்காட்சி புகழ் சித்து பேசுகையில்:

“இன்றைய காலகட்டத்தில் நம்மைப் பற்றி நாமேதான் பிறரிடம் சொல்லிக் கொள்ள வேண்டும்; நம்மை நாமே முன்வைக்க வேண்டிய காலத்தில் வாழ்கிறோம். ‘திருமணம்’ சீரியலுக்குப் பிறகு எனக்குக் கிடைத்த பெரிய வாய்ப்பு இது. மைம்கோபி அண்ணனின் நடிப்புப் பள்ளியில் தான் நான் நிறையக் கற்றுக்கொண்டேன். இப்படம் மூலமும் பல அனுபவங்களைப் பெற்றுள்ளேன்.”

என்னை நம்பாமலேயே நடித்தார்கள்: இயக்குநர் பாலாஜி

நிறைவாகப் பேசிய இயக்குநர் பாலாஜி, “சினிமாவுக்கு வந்த புதிதில் நான் முதலில் கதை சொன்னதே பாக்யராஜ் சாரிடம் தான், அவர் மறைவு வருத்தமளிக்கிறது. இந்த படத்தின் மீதும், என் மீதும் ஆரம்பத்தில் சிலருக்குச் சந்தேகங்கள் இருந்தன. என்னை முழுமையாக நம்பாமலேயே கூட படத்தில் நடித்தார்கள். ஆனாலும் அனைவரின் ஒத்துழைப்போடும் இப்படத்தை முடித்துவிட்டேன். ஜூலை 17-ல் வெளியாகும் இப்படம் சித்துவுக்கு சினிமாவில் ஒரு சிறப்பான இடத்தை அமைத்துக் கொடுக்கும்” என நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

இவ்விழாவில் தயாரிப்பாளர் கோபால், இயக்குநர்கள் மித்ரன், நடிகர்கள் புகழ், ஜெயக்குமார், மைம் கோபி மற்றும் இசையமைப்பாளர் சக்தி பாலாஜி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டு வாழ்த்திப் பேசினர். மணிகண்டன் பிகே ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ராஜா ஆறுமுகம் படத்தொகுப்பு செய்துள்ளார்.