தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு!

தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு!

மத்திய அரசு ஆண்டுதோறும் திரைப்பட துறையைச் சேர்ந்த சிறந்த கலைஞர்களை தேர்ந்து எடுத்து விருது வழங்கி கவுரவித்து வருகிறது.2014-ம் ஆண்டுக்கான 62-வது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று டெல்லியில் அறிவிக்கப்பட்டன. தேர்வுக்குழுவின் தலைவர் பாரதிராஜா விருதுக்கு தேர்ந்து எடுக்கப்பட்டுள்ள திரைப்படங்கள் மற்றும் கலைஞர்களின் பெயர்களை அறிவித்தார்.இந்த விருதுகளை மே 3-ந் தேதி டெல்லியில் நடைபெறும் விழாவில் ஜனாதிபதி வழங்குவார் என்று தெரிகிறது. இதே விழாவில் தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ள இந்தி நடிகர் சசிகபூருக்கும் விருது வழங்கப்படுகிறது.
NAF 1
இதில் தமிழ் திரைப்படத்துறைக்கு 7 விருதுகள் கிடைத்து உள்ளன.நடிகர் தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ், கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி இணைந்து தயாரித்து, புதிய இயக்குனர் எம்.மணிகண்டன் இயக்கிய ‘காக்கா முட்டை’ படம் 2 விருதுகளை பெற்றுள்ளது. அந்த படம் சிறந்த குழந்தைகள் படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. அந்த படத்தில் நடித்த சிறுவர்கள் விக்னேஷ், ரமேஷ் ஆகியோர் சிறந்த குழந்தை நட்சத்திரங்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ஜிகர்தண்டா படமும் 2 விருதுகளை பெற்றுள்ளது. அந்த படத்தில் வில்லனாக நடித்த பாபி சிம்ஹா சிறந்த துணை நடிகராகவும், விவேக் ஹர்ஷன் சிறந்த எடிட்டராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

சைவம் படத்தில் இடம்பெற்ற ‘அழகே, அழகே, எதுவும் அழகே….’ என்ற பாடல் 2 விருதுகளை பெற்றுள்ளது. அந்த பாடலை எழுதிய நா.முத்துக்குமார் சிறந்த பாடலாசிரியராகவும், அந்த பாடலை பாடிய பிரபல பாடகர் உன்னிகிருஷ்ணனின் மகள் உத்ரா உன்னிகிருஷ்ணன் சிறந்த பாடகியாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மொழிவாரியான படங்களில் சிறந்த தமிழ் படமாக ‘குற்றம் கடிதல்’ படம் அறிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற விருதுகளை பெற்றவர்கள் விவரம் வருமாறு:-

சிறந்த படமாக ‘கோர்ட்’ என்ற மராத்தி படமும், சிறந்த பொழுதுபோக்கு படமாக நடிகை பிரியங்கா சோப்ரா நடித்த ‘மேரிகோம்’ இந்தி படமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

சிறந்த நடிகராக ‘நானு அவனல்லா’ என்ற கன்னட படத்தில் நடித்த கன்னட நடிகர் விஜய், சிறந்த நடிகையாக ‘குயின்’ படத்தில் நடித்த இந்தி நடிகை கங்கனா ரணாவத், சிறந்த இயக்குனராக சோதுஷ்கோன் என்ற வங்காள மொழி படத்தை இயக்கிய ஸ்ரீஜித் முகர்ஜி ஆகியோர் அறிவிக்கப்பட்டு உள்ளனர்.

ஹைதர் என்ற இந்தி படத்துக்கு இசையமைத்த விஷால் சிறந்த இசையமைப்பாளராகவும், அந்த படத்தில் பாடிய சுக்விந்தர் சிங் சிறந்த பாடகராகவும் அறிவிக்கப்பட்டனர்.

இதுதவிர சிறந்த புத்தகமாக தமிழ் சினிமாவின் பெருமை (1931-2013) என்ற புத்தகம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதனை எழுதிய ஜி.தனஞ்செயனுக்கு சான்றிதழ் வழங்கப்படுகிறது.