பிளாக் மணி வைத்திருப்போருக்கு ஓர் அரிய வாய்ப்பு!

கருப்பு பண ஒழிப்பில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க அரசு கூடுதல் அக்கறை செலுத்தி வருகிறது. வெளிநாடுகளில் பல்வேறு தரப்பினராலும் குவிக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.அத்துடன் உள்நாட்டிலும் கணக்கில் காட்டாமல் கருப்பு பணம், கணக்கில் காட்டாமல் சொத்து குவித்து வைத்திருப்பதை முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில் கருப்பு பணம் மற்றும் சொத்துகளை பதுக்கி வைத்திருப்பவர்கள் அதுபற்றிய விவரங்களை வருமான வரித்துறையிடம் தெரிவித்து, 30 சதவீத வரி, அபராதம் என மொத்தம் 45 சதவீத அளவுக்கு வரி செலுத்தி, நிவாரணம் பெறும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதற்காக வருமான வரித்துறை 4 மாத காலம் அவகாசம் வழங்கி உள்ளது. இந்த காலகட்டத்திற்குள் கருப்பு பணம், சொத்து பதுக்கி வைத்திருப்பவர்கள் அது தொடர்பான விவரங்களை வருமான வரித்துறையிடம் தாக்கல் செய்து, வரி செலுத்தி நடவடிக்கைக்கு தப்பலாம். கருப்பு பணம், சொத்துகள் பதுக்கி வைத்திருப்பவர்கள், அதுபற்றிய விவரங்களை வருமான வரித்துறையிடம் இன்று (1-ந்தேதி) முதல் தாக்கல் செய்யலாம். இந்த அவகாசம் செப்டம்பர் 30-ந்தேதி வரை நீடிக்கும். இதுதொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் பிரசார இயக்கம் ஒன்றையும் ஆன்லைன் வழியாக மத்திய நிதித்துறை அமைச்சகம் மேற்கொண்டுள்ளது.

கருப்பு பணம் பற்றிய விவரங்களை அளிக்க 4 மாத காலம் அவகாசம் வழங்கி இருப்பது பற்றி மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறும்போது, “கருப்பு பணம், சொத்து பற்றிய விவரங்களை அளிக்க அவகாசம் தரப்பட்டுள்ளது. கருப்பு பணம், சொத்து பதுக்கியுள்ள அனைவரும் இந்த திட்டத்தின்கீழ் விவரங்களை அறிவித்து, வரி செலுத்தி நிம்மதியாக தூங்கலாம். இல்லாவிட்டால், கருப்பு பணம் பதுக்கல் பற்றி மென்மேலும் பகிரங்கமாக அறிவிக்கப்படும். மேலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும்” என குறிப்பிட்டார்.
அதே நேரத்தில் ஊழல் செய்து கருப்பு பணம், சொத்து குவித்திருப்பவர்கள் இந்த திட்டத்தின்கீழ் விவரங்களை தெரிவித்து தப்பிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts