2024 வெறும் நாடாளுமன்றத் தேர்தலை மட்டும் குறிக்கவில்லை.

2024 வெறும் நாடாளுமன்றத் தேர்தலை மட்டும் குறிக்கவில்லை.

ந்திய வரலாற்றில் 1947-ஐ விட 2024 மிக மிக முக்கியமானது. இந்தியாவின் தேசியப் பாதுகாப்பை, இறையாண்மையை, ஒருமைப்பாட்டை, சமூக அமைதியை, வருங்காலத்தை, ஏன் ஒட்டுமொத்த இருப்பையே 2024- தான் தீர்மானிக்கும். ஆனால் அன்றாட வாழ்க்கையைக் கழிப்பதிலேயே கவனம் செலுத்தும் ஏழைபாழைகளுக்கு இது தெரியாது.

ஓரளவு கல்வியும், செல்வமும், ஏராளமான (சாதி மதம் கலந்த) தேசிய உணர்வும் பெற்றிருக்கும் நடுத்தர வர்க்கத்தைச் சார்ந்த, இந்திய அரசியல் மற்றும் குடிமைச் சமூகங்களில் சஞ்சரிக்கும் பலருக்கு மேற்படி உண்மை புரியாது, புரியவில்லை. வரலாற்று அறிவோ, அரசியல் விழிப்புணர்வோ, (இந்திய) பாசிசம் குறித்தத் தெளிவோ இல்லாத இவர்கள் என்ன நடக்கப் போகிறது எனும் அறிவு கிஞ்சிற்றும் இல்லாதவர்கள்.

அதிகார பீடத்தின் உள்ளும் புறமும் இயங்கும் சிலரோ அனைத்தும் தெரிந்தும் தெரியாதது போல நடிக்கிறார்கள். மதில்மேல் பூனைகளான இவர்கள் உகந்த நேரத்தில் அதிகாரத்தோடு இணைந்துகொண்டு, தங்கள் தன்னலத்தை மட்டும் கவனமாகப் பேணிக் கொள்வார்கள்.

2024 வெறும் நாடாளுமன்றத் தேர்தலை மட்டும் குறிக்கவில்லை. அதில் பாஜக வெல்வதோ/தோற்பதோ மட்டுமே மிக முக்கியமான நிகழ்வல்ல. செங்குத்தாகப் பிளக்கப்பட்டு, வெறுப்பு மற்றும் கோபம் போன்ற எதிர்மறை உணர்வுகளால் பீடிக்கப்பட்டு, தகுதியற்ற, திறமையற்ற, நேர்மையற்ற தலைமையால் தகைமையும், தன்மானமும், தன்னம்பிக்கையும் இழந்து, தேம்பி நிற்கும் இந்தியச் சமூகம், முகிழ்த்தோங்கி நிற்கும் பாசிசத்தை எப்படி அழித்தொழித்து தன்னைப் புனருத்தாரணம் செய்யப் போகிறது என்பதுதான் நம் முன்னே இருக்கும் மாபெரும் கேள்வி. நாம் எதிர்கொள்ளும் மிகப் பெரிய பொறுப்பு.

கலங்கித்தான் தெளியுமோ? எப்படிக் கலங்கும்? எவ்வளவு மோசமாகக் கலங்கும்? அந்தக் கலங்கலை எப்படிக் கட்டுப்படுத்துவது, கையாள்வது? இந்த கேள்விகளுக்கு யாரால் பதில் தர முடியும்?

சுப. உதயகுமாரன்.
நாகர்கோவில்,
யூன் 6, 2023.

error: Content is protected !!