ரயில்வே பார்சல் கட்டணம இன்று முதல் உயர்வு!
ரயில்வே பார்சல் கட்டணம் இன்று செவ்வாய்க்கிழமை (அக்.1) முதல் 25 சதவீதம் உயர்த்தப்படுகிறது. முன்னர் மதுரையில் இருந்து வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னைக்கு 100 கிலோ பார்சல் அனுப்புவதற்கு ரூ.62 கட்டணமாக இருந்தது. இன்று முதல் இதில் 25 சதவிகிதம் கூடுதலாகச் செலுத்த வேண்டிருக்கும். ஏற்கெனவே நடைமுறையில் உள்ள 2 சதவிகித ரயில்வே மேம்பாட்டு கட்டணம் மற்றும் 3.78 சேவை வரி ஆகியவையும் இந்தக் கட்டணத்துடன் சேரும். பத்திரிகைகள் தவிர மற்ற அனைத்து விதமான பார்சல்களுக்கும் குறைந்த பட்சம் 50 கிலோ மீட்டர் தொலைவுக்கு கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது.

பார்சல் கட்டணத்தில் ஆர் ஸ்கேல் மற்றும் எஸ் ஸ்கேல் என இரண்டு விதமான கட்டண விகிதம் உள்ளது. ராஜதானி, சதாப்தி மற்றும் தூரந்தோ ரயில்களுக்கு ஆர் ஸ்கேல் அளவீடும், மற்ற ரயில்களுக்கு எஸ் ஸ்கேல் அளவீடும் பின்பற்றப்படுகிறது. அதே சமயம் சரக்குப் பெட்டிகளின் கொள்ளவில் 60 சதவீதத்துக்கும் கூடுதலாக சரக்குகள் அனுப்பப்படும் போது விரைவு ரயில்களாக இருந்தாலும் ஆர் ஸ்கேல் விகிதம் கணக்கிடப்படுகிறது.
மதுரை வழியாக இயங்கும் விரைவு ரயில்களைப் பொருத்தவரையில், திருச்செந்தூர்-சென்னை (செந்தூர்), செங்கோட்டை-சென்னை ( பொதிகை), மதுரை-சென்னை (வைகை) ஆகிய விரைவு ரயில்களில் எஸ் ஸ்கேல் கட்டணமும், மற்ற ரயில்களுக்கு ஆர் ஸ்கேல் கட்டணமும் வசூலிக்கப்படுகிறது.
மதுரையில் இருந்து புதுதில்லி, கொல்கத்தா, ஆக்ரா போன்ற இடங்களுக்கு ஏலக்காய் அதிக அளவில் அனுப்பப்படுகிறது. மதுரை-போடி ரயில் போக்குவரத்து இல்லாததால், கம்பம் பகுதியில் இருந்து ஏலக்காய் பார்சல்கள் லாரிகள் மூலம் வரவழைக்கப்பட்டு, ரயிலில் அனுப்பப்படுகின்றன. மதுரையில் இருந்து அலுமினியம், எவர்சில்வர், பைபர் பிளேட், இனிப்புகள், ரெடிமேடு துணிகள் பெருமளவில் கேரளத்துக்கு அனுப்பப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
.


