உலக முதியோர் தினம் – அக்டோபர் 1

உலக முதியோர் தினம் – அக்டோபர் 1

ப்போதெல்லாம் வயதான முதியோர்களை இளைஞர்கள் இளக்காரமாக பார்க்கிறார்கள். முதியவர்களும், ஒரு காலத்தில் தங்களைப் போல் இளைஞர்களாக இருந்து வந்தவர்கள்தான் என்பதை மறந்துவிடுகிறார்கள். மாறிவரும் சமுதாயத்தில் பண வசதியே முக்கியமாக கருதப்படுவதால் முதியோர் முற்றிலும் புறக்கணிக்கப்படும் நிலை காணப்படுகிறது. இதற்கு முதியோரும் ஒருகாரணம்.

சாதாரணமாக அறுபது வயதுக்கு மேலான முதியவர்கள், மருத்துவச் செலவுக்குக் கூட குடும்பத்தில் உள்ள மகன் அல்லது மகளை சார்ந்திருக்கும் நிலை இருக்கிறது. பெரும்பாலும் இளைஞர்கள் முதியோருக்கு செலவை எண்ணி சரிவர மருத்துவம் பார்ப்பதில்லை. வார்த்தைகளால் வதைக்கிறார்கள்.

பல இடங்களில் வயதானவருக்கு சரியான சாப்பாடு கூட மறுக்கப் படுவதால் சத்து குறைவு, சுகாதாரச் சீர்கேடு ஏற்ப்படுகிறது. பணியில் இருக்கும் போதே ஓய்வுக் காலத்துக்கு என்று சேமிப்பு மற்றும் முதலீடு செய்தவர்கள் பிற்காலத்தில் பிரச்சனை இல்லாமல் இருக்கிறார்கள். அவர்களுக்கு இளமையிலே முதுமைக்கு திட்டமிடும் அவசியத்தை எடுத்துச் சொல்ல வேண்டும்) வசதியான வயதானவர்களுக்கு குடும்பத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகமாக இருக்கின்றன. எல்லாம் பணம்தான் காரணம். வசதி இல்லாத வயதானவர்களைக் குடும்பத்தில் உள்ள பேரன், பேத்திகள் கூட மதிப்பதில்லை. குடும்பத்துக்காக உழைத்தே தாய் & தந்தையர் ஓடாகி விட்டார்கள் என்பதை குடும்பத்தில் உள்ள இளைஞர்கள் ஒரு நிமிடம் சிந்தித்து பார்த்தால் நல்லது.



இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக உலக அளவில் பிறப்பு மற்றும் இறப்பு விகிதம் குறைந்து வருவது தெரிய வந்துள்ளது.அதிகளவில் குழந்தை பிறப்பு, அதிக அளவு இறப்பு என்று ஏற்கனவே இருந்த நிலைமாறி, தற்போது பிறப்பு-இறப்பு எண்ணிக்கை குறைந்திருப்பதால் நாட்டில் வயதானவர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவுக்கு உயர்ந்துள்ளது.

எனவேதான் ஆண்டுதோறும் அக்டோபர் முதல் தேதியை உலக முதியோர் தினமாக கடந்த 1990ஆம் ஆண்டில் ஐ.நா. பொதுச் சபை அறிவித்தது. அதன்படியே ஒவ்வோர் ஆண்டும் இந்தநாள், உலக முதியோர் தினமாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.கடந்த 2002ஆம் ஆண்டிலிருந்து, சர்வதேச அளவில் முதியோருக்கான செயல்பாட்டுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

21ஆம் நூற்றாண்டில் வயது முதிர்ந்தோர் எதிர்கொள்ளக்கூடிய சவால் மற்றும் வாய்ப்புகளைக் கருத்தில் கொண்டும், அனைத்து வயதினரையும் முன்னிலைப்படுத்தும் நோக்கிலும் இத்திட்டம் கொண்டு வரப்பட்டது.

முதியோர் சுதந்திரம், பங்களிப்பு, வயதானவர்களை மதித்தல் போன்றவை உலக முதியோர் தினத்தின் முக்கிய நோக்கமாகும். மனிதர்களுக்கு வயதாக ஆக அவர்களின் தேவை முழுமையடைதல், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு மட்டுமின்றி சமூக, கலாச்சார, அரசியல் ரீதியிலும் அவர்கள் பங்களிப்பதை உறுதி செய்தல் வேண்டும். அத்துடன் வயது முதிர்ந்தோரைப் பாதுகாப்பதுடன் அவர்களின் ஆரோக்கியம் மற்றும் பங்களிப்பிற்கும் உறுதி மேற்கொள்வோம்!

மேலும் கீழ்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்துகிறார் சீனியர் சிட்டிசன்களின் டாக்டர் வி. எஸ். நடராஜன்

சென்னை கிண்டியில் ரூ.220 கோடியில் முதியோர்களுக்காக தேசிய முதியோர் நல மையம் (மருத்துவமனை) நிறுவப்பட்டுள்ளது. அது தற்போது வரை கொரோனா நோயாளிகளுக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதை விரைவில் முதியோர்கள் பயன்பெறும் வகையில் திறக்க வேண்டும்.

முதுமையின் விளைவாக பலர் மறதிநோய், பக்கவாதம், உதறுவாதம் என்கிற பார்க்கின்சன்ஸ் நோய் மற்றும் மூட்டுநோய் போன்ற நோய்களால் பாதிக்கப் பட்டவர்களுக்கு தொடர் சிகிச்சை அவசியமாகிறது. இதற்கு பல குடும்பங்களில் நிதி வசதி இடம் கொடுக்காது. இந்நோய்களால் பாதிக்கப்பட்ட முதியவர்களைக் கவனித்துக் கொள்ள தாலுகா அளவில் தொடர் சிகிச்சை மையங்களைஅரசு தொடங்க வேண்டும். வயதானகாலத்தில் பெரும்பாலான வர்கள் பல்வேறு நோய்களுடன் வாழ வேண்டியிருக்கிறது. பலருக்கு சரியான உறுதுணை இல்லை. படுத்த படுக்கையாகி விட்டால் பார்ப்பதற்கு யாரும் இல்லை. கைவிடப்பட்ட முதியோரின் நிலை பரிதாபத்துக்குரியது.

இப்படிப்பட்ட நிலையில் கருணைக்கொலையை நடைமுறைப்படுத்துவது குறித்து யோசிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அரசு ஓர் தெளிவான, திடமான முடிவைஎடுக்கலாம். முதியவர்களுக்காக தொலைக்காட்சி ஒன்றை ஆரம்பித்து, அதில் உடல் நலம், மன நலம், பொழுதுபோக்கு, ஆன்மிகம், உணவு முறை மற்றும் குடும்ப நலம் சார்ந்த நிகழ்ச்சிகளை ஒளிபரப்பினால் முதியவர்களிடையே நல்ல வரவேற்பு கிடைக்கும்.

முதியோர்களின் நிதி நிலைமையில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும். இந்தியாவில் 10 முதல் 15 சதவீத முதியோர்கள் மட்டுமே ஓய்வூதியம் பெறுகிறார்கள். முதியோர்களுக்கு மாதம் ரூ.1,000 அரசு வழங்குகிறது. விலைவாசி அதிகரித்து வருவதால், உதவித் தொகையாக ரூ.2 ஆயிரம் வழங்க வேண்டும். தற்போது, ரூ.1,500 ஆகஉயர்த்தியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. விதவைகளுக்கு மாதம் வழங்கப்படும் ரூ.1,000 உதவித் தொகையை ரூ.2 ஆயிரமாக உயர்த்த வேண்டும். முதியவர்களின் ஓய்வூதிய தொகையை அவர்களுடைய வீட்டுக்கே சென்று கொடுக்கும் திட்டத்தை ஆந்திராஅரசு அமல்படுத்தியுள்ளது. தற்போது, தமிழகத்தில் 80 வயது கடந்த முதியவர்களுக்கு வீட்டுக்கே சென்று வழங்கப்பட்டு வருகிறது. இதேபோல், 60 வயதைக் கடந்த முதியவர்களுக்கும் வீட்டுக்கே சென்று அளிக்க வேண்டும்.

முதியோர்களில் பலர், வங்கியில் ஓர் தொகையைச் செலுத்தி, அதிலிருந்து வரும் வட்டியை வைத்துதான் வாழ்க்கையை நடத்திக் கொண்டு வருகிறார்கள். மத்திய அரசு வங்கி வட்டியைக் குறைத்துவிட்டது. அதனால் பல முதியவர்களின் நிதி நிலைமையில் பெரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. வட்டியை மீண்டும் பழைய நிலைக்கு உயர்த்த வேண்டும்.

முதியோர்களைப் பராமரிக்க சட்டம்

முதியோர்களை சரியாகப் பராமரிக்காவிட்டால் அதற்கு பொறுப்புள்ள மகன் அல்லது மகளை தண்டிக்க ஒரு சட்டம் உள்ளது. முதியவர்கள் தங்கள் சொந்த வருவாய் மூலமோ, தங்கள் சொத்து மூலம் பெறும் வருவாயிலோ தங்களை பாதுகாத்துக் கொள்ள இயலாத சூழ்நிலையில் இச்சட்டத்தின் உதவியை நாடலாம்.

மேலும், முதியோர் இல்லங்களின் தரத்தை நிர்ணயிக்க அரசு ஓர் குழுவை அமைக்க வேண்டும். முதியோர் இல்லம் ஆரம்பிப்பதற்கு முன் இக்குழுவிடம் சான்று பெறவேண்டும். முதியோர் இல்லம்அமைந்துள்ள இடம், தரமான உணவு,மருத்துவ வசதி மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் போதிய அளவுக்கு உள்ளதா என்பதை இக்குழு அடிக்கடி நேரில் சென்று கண்காணிக்க வேண்டும். இக்குழுவில் முதியோர் நல மருத்துவர் ஒருவர்இடம்பெற வேண்டும். முதியோர்களுக்காக நகர்ப்புறங்களில் மட்டுமல்லாமல், கிராமப்புறங்களிலும் முதியோர் இல்லங்களை ஆரம்பிக்க வேண்டும்.

முதியோர் நல வாரியம்

முதியோர்களின் கொடுமை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 15-ம் தேதியை ‘முதியோர் கொடுமை ஒழிப்பு விழிப்புணர்வு ஊட்டும்’ நாளாக 2006-ம் ஆண்டில் இருந்து அனுசரிக்கப்படுகிறது. பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இந்த நாளில் முதியோரை மதித்தல் பற்றிய சிறப்பு நிகழ்ச்சி ஒன்றை வானொலி மூலம் நடத்தலாம்.

முதியோர்கள் நலம் பேண, அவர்களுக்கு என்று தனியாக ‘முதியோர் நல வாரியம்’ ஒன்றை அமைத்தால் மேற்சொன்ன அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற ஏதுவாக இருக்கும்.

நிலவளம் ரெங்கராஜன்

error: Content is protected !!