32°C
விளம்பரம்
Advertisement

மெரினா கலங்கரை விளக்கம்: இன்று முதல் மக்களுக்கு அனுமதி

admin சேலம் Published: November 14, 2013 4 நிமிட வாசிப்பு Running News
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க
தமிழ் குரல் / AI Voice




சென்னை மெரினா கடற்கரையில் 45 மீட்டர் உயரத்தில் 10 மாடிகளுடன் கட்டப்பட்டுள்ள கலங்கரை விளக்கத்தின் உச்சியில் நின்று சென்னை நகரின் தோற்றத்தையும், வங்கங்கடலில் எழும்பும் கடல் அலைகளையும், கப்பல்களின் பயணத்தை ரசித்து பார்ப்பபதே பரவசமான அனுபவம் இந்த நிலையில், கடந்த 1994ம் ஆண்டு முதல் பாதுகாப்பு கருதி கலங்கரை விளக்கத்தில் மக்கள் ஏறி பார்வையிட தடை விதிக்கப்பட்டது.
சுமார் 19 ஆண்டுகளுக்கு பிறகு, நவம்பர் மாதம் 14-ந் தேதி முதல், மீண்டும் மெரினா கலங்கரை விளக்கம் புதுப்பொலிவுடன் பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்படுகிறது.
nov 14 - merina light house
கடலில் திக்குத் தெரியாமல் படகில் தவிக்கும் மீனவர்களுக்கும், கரை சேர துடிக்கும் கப்பல்களுக்கும் ஆபத்பாந்தவனாக விளங்குவது, கலங்கரை விளக்கங்கள்தான். அறிவியல் வளர்ச்சியின் பயனாய், இன்று மீன்பிடி படகுகளிலும், கப்பல்களிலும் அதிநவீன தகவல் தொடர்பு சாதனங்கள் பயன்படுத்தப்பட்டாலும், ஆரம்ப காலத்தில் கலங்கரை விளக்கங்கள்தான் வழிகாட்டியாக விளங்கின.

சென்னை மெரினா கடற்கரையில், சிவப்பு – வெள்ளை நிறத்தில் தற்போது கம்பீரமாக காட்சியளிக்கும் கலங்கரை விளக்கம் ஆரம்ப காலத்திலேயே இங்கு அமைக்கப்படவில்லை. 3 இடங்களை தாண்டித்தான் மெரினா கடற்கரையில் கலங்கரை விளக்கம் அமைந்தது.

1796-ம் ஆண்டு முதன்முறையாக ஜார்ஜ் கோட்டையில், இன்று கோட்டை மியூசியம் இருக்கும் கட்டிடத்தின் ஒரு எச்சரிக்கை விளக்கு பொருத்தப்பட்டது. இதுதான் சென்னையின் முதல் கலங்கரை விளக்கமாகும். இந்த கட்டிடத்தின் மேல் தளத்தில் ஒரு பெரிய எண்ணெய் விளக்கு பிரகாசமாக எரிந்து கொண்டே இருக்கும். இதன் மூலம், கோட்டை இருக்கும் இடத்தை அறிந்து கப்பலை செலுத்த மாலுமிகளுக்கு உதவியாக இருந்தது.

சுமார் 50 ஆண்டுகள், அதாவது 1841-ம் ஆண்டு வரை இங்கிலாந்தில் இருந்து வந்த கிழக்கிந்திய கப்பல்கள் இந்த விளக்கை நம்பித்தான் கரை சேர்ந்தன. 19-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், பூக்கடை பகுதியில் சென்ன கேசவப்பெருமாள் கோவில், சென்னை மல்லீஸ்வரர் கோவில் இருக்கும் இடத்தில், கிழக்கிந்திய கம்பெனிக்காரர்கள் 161 அடி உயரத்தில் கலங்கரை விளக்கம் ஒன்றை அமைத்தனர்.

இந்த கலங்கரை விளக்கத்தில் பொருத்துவதற்காக, இங்கிலாந்தில் உள்ள பிரபல நிறுவனம் ஒன்றில், நவீன விளக்கு தயாரித்து தர ‘ஆர்டர்’ கொடுக்கப்பட்டது. ஆனால், அந்த நவீன விளக்கு உரிய நேரத்தில் வந்துசேரவில்லை. அதனால், கோட்டையில் இருந்த பெரிய லாந்தர் விளக்கை இந்த கலங்கரை விளக்கத்தின் உச்சியில் வைத்துவிட்டார்கள். சுமார் 3 ஆண்டுகள் வரை இதே நிலை தான் நீடித்தது.

அதன்பின்னர், 1844-ம் ஆண்டு, இங்கிலாந்தில் தயாரான நவீன விளக்கு கொண்டுவரப்பட்டு, கலங்கரை விளக்கம் உச்சியில் பொருத்தப்பட்டது. இந்த விளக்கில் சிறப்பு அம்சம் என்னவென்றால், சாதாரண விளக்குகள் போல் தொடர்ந்து எரியாமல், விட்டுவிட்டு எரியும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த கலங்கரை விளக்கமும் 50 ஆண்டுகளுக்கு மேல் நீடிக்கவில்லை.

ஏனென்றால், 1892-ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்திற்காக பிரமாண்ட கட்டிடம் கட்டப்பட்டது. அப்போதைய நிலையில், சென்னையிலேயே உயர்ந்த கட்டிடம் இதுதான். அதனால், இந்த கட்டிடத்தில் இருந்த 175 அடி உயர கோபுரத்தில் விளக்கு அமைக்கப்பட்டு கலங்கரை விளக்கமாக செயல்பட தொடங்கியது. 1894-ம் ஆண்டு முதல் 83 ஆண்டுகள் இங்குதான் கலங்கரை விளக்கம் செயல்பட்டது.

அதன்பிறகுதான், 1977-ம் ஆண்டு மெரினாவில் 45 மீட்டர் உயரத்தில் கம்பீரமாக கலங்கரை விளக்கம் கட்டப்பட்டது. இந்த கலங்கரை விளக்கத்தில் 187அடி உயரத்தில் விளக்கு பொருத்தப்பட்டது. இந்த விளக்கின் வெளிச்சம் 30 கடல் மைல் தொலைவுக்கு தெரிந்தது. இந்தியாவிலேயே ‘லிப்ட்’ வசதி கொண்ட ஒரே கலங்கரை விளக்கம் சென்னை மெரினாவில் தான் உள்ளது.

சென்னை நகரின் பாதுகாப்பு கருதி, 1994-ம் ஆண்டு முதல் மெரினா கலங்கரை விளக்கத்தில் ஏறிப்பார்க்க பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டது.சுமார் 19 ஆண்டுகளுக்கு பிறகு, நவம்பர் மாதம் 14-ந் தேதி முதல், மீண்டும் மெரினா கலங்கரை விளக்கம் புதுப்பொலிவுடன் பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்படுகிறது. தற்போது, கலங்கரை விளக்கத்தின் உச்சியில் பொதுமக்கள் அனுமதிக்கப்படும் பகுதியில் கம்பி வேலி பொருத்தப்பட்டுள்ளது.

மெரினா கலங்கரை விளக்க தரைத்தளத்தில், அருங்காட்சியகம் அமைக்கப்பட உள்ளது. இதில், இந்தியாவில் உள்ள அனைத்து கலங்கரை விளக்கங்களின் ‘மாடல்’களும் இடம்பெற உள்ளது. மேலும், அங்கு வைக்கப்படும் டி.வி.யில், கடல்வழி தகவல் பரிமாற்றம் குறித்த தகவல்கள் படக்காட்சியுடன் ஒளிபரப்பப்பட உள்ளது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் பயன்படுத்தப்பட்ட பல்வேறு கலங்கரை விளக்க விளக்குகளும் இந்த அருங்காட்சியகத்தில் இடம்பெற உள்ளன.

கலங்கரை விளக்கத்தை பார்வையிட வரும் பொதுமக்களிடம், பெரியவர்களுக்கு ரூ.10, சிறியவர்களுக்கு ரூ.3 கட்டணம் வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில், வெளிநாட்டுக்காரர்களிடம் ரூ.25 வசூலிக்கப்பட இருக்கிறது. மேலும், புகைப்பட கேமராவுக்கு ரூ.20-ம், வீடியோ கேமராவுக்கு ரூ.25-ம் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது.

ஆனால், மெரினா கலங்கரை விளக்கம் ‘லிப்ட்’ வசதியுடன் இருப்பதால், கூடுதலாக கட்டணம் வசூலிக்கலாமா? என்றும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. ஒரே நேரத்தில், கலங்கரை விளக்கத்தின் மீது நின்று கடலையும், நகரையும் கண்டு ரசிக்க 20 பேர் மட்டும் அனுமதிக்கப்பட உள்ளனர்.

பொதுமக்களுக்கு டிக்கெட் வழங்கவும் தானியங்கி மெஷின் பயன்படுத்தப்பட உள்ளது. பொதுமக்கள் வருகையையொட்டி, போலீஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட இருக்கிறது.பார்வையிடும் நேரம்: தினமும் காலை 10மணி முதல் மதியம் 1மணி வரையும், மாலை 3மணி முதல் 5மணி வரையும் பார்வையிட பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள். வாரந்தோறும் திங்கட்கிழமை மட்டும் அனுமதி கிடையாது.

படம்:www.flickr.com

admin
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

உடனடி செய்திகள்