நாளிதழ்களின் விலையும் ***நாட்டு மக்களின் நிலையும் – 1***! By கதிர்
தினத்தந்தி விலை ஏற்றம் அறிவித்திருக்கிறது. 16ம் தேதி முதல் தினமும் ₹ 5, ஞாயிறு ₹ 6. ஓரிரு வாரங்களில் ஏனைய நாளிதழ்களும் விலை உயர்வை அறிவிக்கும். உயர்வு நியாயமா இல்லையா என்ற விவாதம் நடந்தால் நல்லது. வெறும் சரி, தப்பு உதவாது. செய்தித்தாள் தயாரிப்பின் வெவ்வேறு பிரச்னைகள் பற்றி வாசகர்கள் தெரிந்து வைத்திருப்பது சமூகத்துக்கு பெரிய அளவில் நன்மை அளிக்கும். குறிப்பாக தமிழ் சமூகத்துக்கு.

செய்தித்தாள் விலை மிகவும் குறைவாக இருப்பது இந்தியாவில்தான். இலவசத்தை விடவும் இந்தியாவில் மலிவாக கிடைக்கின்றன நாளிதழ்கள், என்று ஐரோப்பிய பத்திரிகையாளர்கள் புள்ளிவிவரங்களுடன் கட்டுரைகள் வெளியிட்டுள்ளனர்.
உண்மையில் உலகில் எதுவும் எவருக்கும் இலவசமாக கிடைப்பதில்லை. ஒவ்வொன்றுக்கும் ஒரு விலை உண்டு. வெளிப்படையான விலையாக இருக்கலாம். அச்சிடப்படாத மறைமுக விலையாக இருக்கலாம். வாங்குபவர் அல்லது அனுபவிப்பவர் விலையேதும் கொடுக்கவில்லை என்பதால் அது இலவசமாகி விடாது. வேறு எவரோ விலையை கொடுத்திருப்பார். நமது நாளிதழ்களின் விலையை அப்படித்தான் பார்க்க வேண்டும்.
அண்டை நாடு பாகிஸ்தானில் ஒரு நாளிதழ் விலை 20 முதல் 25 ரூபாய். இலங்கையில் 20 முதல் 30. ஒன்றரை ரூபாய், இரண்டு ரூபாய்க்கு இந்தியாவில் தினசரி பத்திரிகைகள் கிடைப்பதை கேள்விப்பட்டு அவர்கள் அதிர்ச்சி அடைகிறார்கள். எப்படி கட்டுப்படி ஆகிறது என்று கேட்கிறார்கள். அரசாங்கம் மானியம் கொடுக்கிறதா என விசாரிக்கிறார்கள். அவ்வாறு எதுவுமில்லை என்று சொல்லும்போது நமக்கே சங்கடமாக இருக்கிறது. தவறு செய்பவர்களுக்கு உண்டாவதை போன்ற மன உறுத்தல் ஏற்படுகிறது.
ஏனென்றால், உற்பத்தி செலவை காட்டிலும் மிக மிக குறைந்த விலைக்கு நாளிதழ் விற்கப்படுகிறது. 24 முதல் 40 பக்கங்கள் கொண்ட ஆங்கில நாளிதழ்கள் அடக்க விலையில் 10 சதவீத விலைக்கு விற்பனையாகின்றன. அதாவது, இந்த பத்திரிகைகளின் ஒரு பிரதியின் தயாரிப்பு செலவு 20 முதல் 30 ரூபாய் வரை ஆகிறது. அதை 2 அல்லது 3 ரூபாய்க்கு விற்கின்றனர். தமிழ் உள்ளிட்ட மாநில மொழி நாளிதழ்களின் விலை தயாரிப்பு செலவில் 15 முதல் 20 சதவீதம். ஆறுதலாக இருக்கிறதோ?
எந்த பொருளும் உற்பத்தி செலவைவிட குறைவான விலைக்கு விற்கப்பட்டால் அது தரமானதாக இருக்காது என்பது நடைமுறை சித்தாந்தம். அத்தகைய தொழில் சீக்கிரம் முடங்கிப் போகும் என்பதும் பொருளாதார பாடம். எனவேதான் ஏனைய நாடுகளில் பத்திரிகைஉற்பத்தி செலவில் அதிக பட்சம் 70 சதவீதம் வரை விலையாக வைத்து வாசகர்களிடம் வசூலித்து விடுகின்றனர். அதற்கு நேர்மாறான அணுகுமுறையை கையாண்டும்கூட இந்திய பத்திரிகைகள் – குறிப்பாக நாளிதழ்கள் – ஆண்டுக்கு ஆண்டு அதிக லாபம் பெற்று வளர்ச்சி அடைந்து வருகின்றன.
விளம்பரங்களை பிரசுரிப்பதால் கிடைக்கும் வருமானம்தான் இந்த முரண்பாடு சாத்தியமாவதற்கு காரணம். அரசாங்க விளம்பரமும், தனியார் பெருந்தொழில் நிறுவனங்களும், சிறு சிறு வர்த்தக மற்றும் தனிநபர் விளம்பரங்களும் கணிசமான வருமானம் ஈட்டித் தருவதால் பத்திரிகை அதிபர்கள் மலிவான விலையில் நாளிதழ்களை விற்க முடிகிறது.
மற்ற நாடுகளில் விளம்பரங்கள் இவ்வளவு அதிகமான இடத்தை ஆக்கிரமித்துக் கொள்வதில்லை. எனவே, விலையை செலவுக்கேற்ப நிர்ணயம் செய்கின்றனர். அது அதிகம் என்பதாலோ வசதியில்லை என்பதாலோ வாசகர்கள் எண்ணிக்கை குறைந்து கொண்டே வந்து பல பெரிய பத்திரிகைகள் மூடப்பட்டு வருகின்றன. நூற்றாண்டு கடந்த பாரம்பரியமான நாளிதழ்களும் இதில் அடக்கம். அந்த நிலையோடு ஒப்பிடும்போது, இந்தியாவில் மேலும் மேலும் அதிக வாசகர்களை சென்று அடையும் விதமாக பத்திரிகைகள் பின்பற்றும் உத்தி சிறப்பானதாகவும் புத்திசாலித்தனமாகவும் தோன்றுகிறது.
அந்த தோற்றம் சரியானதுதானா? விளம்பரங்கள் எவ்வாறு பெறப்படுகின்றன? விளம்பரதாரர்கள் – அரசாங்கம் உட்பட – பத்திரிகைகளின் அடிப்படை கடமைகளில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகிறார்கள்? அதன் விளைவுகள் என்ன? பத்திரிகை சுதந்திரமும், பொதுமக்களின் உண்மையறியும் உரிமையும் எவ்வாறு பாதிக்கப்படுகிறது? அதனால் நாடு எதிர்கொள்ளும் பிரச்னைகள் என்ன? நாட்டின் விடுதலைக்கு வீரமாக குரல் கொடுத்து மக்களிடையே எழுச்சியை ஏற்படுத்திய இந்திய நாளிதழ்கள் எப்போது, ஏன் இந்த வழிக்கு திரும்பின? இந்த நிலை மாற வாய்ப்பு இருக்கிறதா?
தொடர்ந்து தேடுவோம்.
கதிர்


