தலைவர்கள், வேட்பாளருக்கான பிரச்சார சொகுசு வேன்கள் ரெடி

தலைவர்கள், வேட்பாளருக்கான பிரச்சார சொகுசு வேன்கள் ரெடி

தமிழக சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கும் நேரத்தில் அக்னி வெயிலும் தனது உக்கிரத்தை காட்டத்தொடங்கி விடும்.கொளுத்தும் வெயிலில் ஊர் ஊராக சூறாவளிதேர்தல் பிரசாரம் செய்யும் அரசியல்கட்சி தலைவர்களின் நிலைமை கடினமான ஒன்று. இதற்காக கோவையில் சொகுசு வசதிகளுடன் கூடிய பிரசார வேன்கள் தயாராக தொடங்கிவிட்டன.
van mar 5election assembly leader campaign van coimbatore
இத்தகைய திறந்த வேன்களில் தலைவர்களின் வசதிக்கேற்றவாறு பல மாற்றங்கள் கோவையில்தான் செய்யப்படுகின்றன.கோவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனம் பல ஆண்டுகளாக இந்த பணிகளை செய்து வருகிறது. தேர்தல் வருவதை முன்னிட்டு தொடர்ந்து பிரச்சாரம் செய்யும் தலைவர்களுக்கான வேன்கள் நிறுவனத்தில் வழக்கம் போல இரவு பகலாக தயாராகி வருகின்றன. இந்த ஆண்டும் நுற்றுக்கும் அதிகமான பிரச்சார வேன்கள் தயாராகி வருகின்றன. இவை கோவை சிவானந்தா காலனியில் உள்ள தனியார் நிறுவனம் மூலம் தயாராகி வருகின்றன.

இது குறித்து அந்த தனியார்நிறுவன ஊழியர்கள், “அ.தி.மு.க தேர்தல் பிரசாரத்துக்காக நவீன வசதிகளுடன் வேன் ஒன்று தயாராகிறது. இது தவிர தி.மு.க. , காங்கிரஸ் தலைவர்கள் தேர்தல் பிரசாரத்துக்காக வாகனங்கள் தயார் செய்யப்பட்டு வருகின்றன.அ.தி.மு.க.வுக்காக தயாராகும் வேனில், 12 பேர் பயணிக்கலாம். இதன் முன்புற இருக்கைகள் சுழலும் வகையிலும், மேலும், கீழும் இயங்கும் வகையில் ஹைட்ராலிக் லிப்ட் பொருத்தப்பட்டுள்ளது. தி.மு.க. பிரசார வேனில், இருக்கையை எளிதாக ஏற்றி இறக்கவும் 10 பேர் அமர்ந்து செல்லும் வகையிலும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்த வாகனங்களில் குடிநீர் சுத்திகரிப்பு கருவி, மைக்ரோவேவ் ஓவன், குளிர்சாதன பெட்டி, கட்டில், மெத்தை, சிகையலங்கார அலமாரி, ஏ.சி, எல்.இ.டி. டிவி, வெஸ்டன் மாடல் கழிவறை, குளியல் அறை, நீர் சேமிப்பு தொட்டி என பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

இதில் படுத்து ஓய்வு எடுக்கும் வகையில் இருக்கைகளையே படுக்கையாக மாற்றும் வசதியும் செய்யப்படுகிறது.மேலும் இந்த பிரசார வேனில் நின்றவாறே பிரசாரம் செய்வதற்கு வசதியாக, வேனில் நடுப்பகுதியில் தானியங்கி சிறிய மேடையும் அமைக்கப்பட்டுள்ளது. இரவு வேளையில் திறந்த நிலையில் நின்று பிரசாரம் செய்வதற்கு வசதியாகவும், பகல்வேளையில் பிரசாரம் செய்யும்போது வெயில் அதிகமாக இருக்கும் என்பதால் குடைபோன்ற கூரையும் சேர்த்து வடிவமைக்கப்படுகிறது. பிரசார வேனில் ஒரே நேரத்தில் 3 பேர்நின்றவாறு பிரசாரம் செய்வதற்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.

இது தவிர இரவு வேளையில் பிரசாரம் செய்கிறவரின் முகத்தை பளிச்சென்று பிரகாசமாக வெளிப்படுத்துவதற்காக நவீன மின்னொளி விளக்குகளும் பொருத்தப்படுகின்றன. மின்விளக்குகளை ஒளிரச்செய்வதற்காக தானியங்கி நவீன ஜெனரேட்டர் கருவியும் பொருத்தப்படுகிறது.இந்த வாகனங்கள் இன்னும் சில நாட்களில் தயார் நிலைக்கு வந்துவிடும்” என்று அவர்கள் கூறினார்கள்.

Related Posts