டீ குடிச்சா கேன்சர் வராதாக்கும்; தேயிலை சங்க கருத்தரங்கில் தகவல்
ஒரு நாளில் குறைந்தபட்சம் மூன்று அல்லது நான்கு முறையாவது காபி அல்லது பானங்களைப் பருகாதவர்கள் குறைவு. இப்படி அடிக்கடி காபி அல்லது டீ குடிப்பது நல்லதா?என்று அடிக்கடி ஆராய்ச்சி நடக்கிறது. இவற்றில் மனிதனின் நரம்பு மண்டலத்தைத் தூண்டி உற்சாகப் படுத்தும் வேதிப்பொருட்கள் இருக்கின்றன. அதன் காரணமா கவே காபி அல்லது டீ குடித்ததுமே நாம் உற்சாகமாக உணர்கிறோம். மேலும் டீ குடிப்பதால் பார்கின்சன்ஸ், ருமட்டாய்டு ஆர்த்ரட்டிஸ் போன்றவை ஏற்படும் ஆபத்து ஓரளவுக்குக் குறைகிறதாம். ஒருவர் தொடர்ந்து 10 ஆண்டுகளுக்குச் சரியான அளவில் டீ குடித்து வந்தால், அவருடைய எலும்புகள் மற்றவர்களைவிட உறுதியாக இருக்குமாம். ரத்தஅழுத்தம் கட்டுக்குள் இருக்கும். புற்றுநோய் ஏற்படுவதற்கான காரணிகளையும் டீ குடிப்பதால் குறையலாம் என்கிறார்கள்.

இந்நிலையில் கருப்பு மற்றும் கிரீன் டீயை அருந்துவதால் புற்றுநோய் அபாயத்தை தடுக்கலாம் என அமெரிக்காவின் விஸ்கான்சின் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் ஹசன் முக்தார் தெரிவித்தார். இந்திய தேயிலை சங்கம் சார்பில் கொல்கத்தாவில் நடந்த கருத்தரங்கில் கலந்து கொண்ட அவர் இதுகுறித்து வெளியிட்ட பயனுள்ள தகவல்கள் இதுதான்: “டீ உலகம் முழுவதும் பரவலாக பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு அற்புதமான உற்சாக பானம். டீயில் பல மருத்துவ பயன்கள் இருக்கின்றன. கேன்சர் வராமல் தடுக்கும் பல எதிர்ப்பு சக்திகள் டீயில் இருக்கிறது. நீரழிவு மற்றும் இதய சம்பந்தப்பட்ட நோய்களையும் வராமல் தடுக்கும் ஆன்டி- ஆக்ஸிடென்டுகள் டீயில் அதிகம் உள்ளன. வழக்கமாக டீ குடிக்கும் பழக்கமுள்ளவர்களிடம் நடத்திய ஆராய்ச்சியில் அவர்களுக்கு மற்றவர்களை விட கேன்சர் வரும் அபாயம் குறைவாக உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
கேன்சரை ஊக்குவிக்கும் செல்கள் உற்பத்தியாவதை டீ தடுக்கிறது. இதனால், தோல், கல்லீரல், புராஸ்டேட், நுரையீரல் மற்றும் மார்பகங்களில் கேன்சர் உருவாவது தடுக்கப்படுகிறது. மேற்கத்திய நாடுகளை விட அதிக அளவில் டீ அருந்தும் பழக்கம் ஜப்பான், சீனா நாடுகளில் உண்டு. மருத்துவ பயன்கள் அதிகம் கொண்ட ஒரே உற்சாக பானம் டீ மட்டுமே என்பதை நாம் அங்கீகரிக்க வேண்டும். நிறுவனங்கள் பிரம்மாண்ட அளவில் விளம்பரம் செய்து டீயின் மருத்துவ பயன்கள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்”என்று அவர் தெரிவித்தார்.


