32°C
விளம்பரம்
Advertisement

’யாத்திசை’ – விமர்சனம்!

admin சேலம் Published: April 20, 2023 3 நிமிட வாசிப்பு Updated: April 21, 2023 Exclusive
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க
தமிழ் குரல் / AI Voice



வரலாறு சார்ந்த திரைப்படங்களுக்கென தமிழ் சினிமாவில் தனி மரியாதை உண்டு.. அது போன்ற படங்கள் சகல தரப்பினரையும் கவர்வது வாடிக்கை… அந்த வகையில்தான் சமீப காலமாக ஒட்டுமொத்த இந்திய சினிமா உலகமும் வரலாற்று படங்களுக்கு பின்னால் ஓடிக்கொண்டிருக்கிறது. மிகப்பெரிய இயக்குனர்கள் தற்போது வரலாற்று கதைகளை படமாக்கி ஜெயித்தும் வருகிறார்கள். இதற்கு மிக முக்கிய காரணம் இயக்குனர் ராஜமவுலி மற்றும் மணிரத்னம்தான். வரலாற்று படங்கள் எடுத்து இவர்கள் பெற்ற வெற்றிதான் இன்று இந்திய சினிமா உலகையே இது போன்ற படங்கள் எடுக்க தூண்டி இருக்கிறது.இப்போதெல்லாம் சினிமா ரசிகர்களும் ஒவ்வொரு வரலாற்று படங்கள் அப்டேட் ஆகும் பொழுது அந்த கதைகளை படிக்க தொடங்கி விடுகின்றனர். அப்படி மீண்டும் ட்ரெண்டான வரலாற்று நாவல் தான் பொன்னியின் செல்வன். இச்சூழலில் அந்த பொன்னியின் செல்வன் முதல் தற்போதைய காலக்கட்டத்தில் நடக்கும் போர்கள் வரை அனைத்துமே அதிகாரங்களை தக்க வைத்துக்கொள்வதற்காக மட்டுமே நடத்தப்பட்டு வருகிறது, என்பதை முன்னிலைப்படுத்தி பழங்குடியினரின் போராட்ட வாழ்க்கையை ஒரு முழு சினிமாவாகக் கொடுத்து அசத்தி இருக்கிறார்கள்..அதிலும் பாண்டிய மன்னனையும், அவரை எதிர்த்து நின்ற எயினர் என்ற குடி மக்களையும் மையப்படுத்தி கதை உருவாகி இருந்தாலும், திரைக்கதை மற்றும் காட்சிகளை வடிவமைத்த விதத்தில், தற்காலத்து உலக யுத்த அரசியலை நினைவுப்படுத்தி அப்ளாஸ் வாங்குகினார்கள் என்பதுதான் ஹைலைட்!

அதாவது சேர சோழ மன்னர்களை தோற்கடித்துவிட்டு சோழ நாட்டை கைப்பற்றி ஆட்சி செய்கிறார் ரணதீர பாண்டியன். சோழர்களுக்கு உதவிய பல சிறு படைகளில் எயினர் குடியும் ஒன்று. நடந்து முடிந்த போரில் சோழர்கள் தோல்வியடைந்து காட்டுக்குள் பதுங்கிவிட, எயினர்கள் பாலை நிலத்துக்கு விரட்டியடிக்கப்படுகிறார்கள். அங்கு வேட்டையாடி சமூகமாக வாழ்ந்துக் கொண்டிருக்கும் அவர்கள் பாண்டிய மன்னனை வீழ்த்தி விட்டு மீண்டும் சொந்த நாட்டுடன் வாழ வேண்டும் என்று முடிவு செய்கிறார்கள். அதன்படி, படை ஒன்றை திரட்டி பாண்டிய மன்னனை வீழ்த்த யூகம் வகுக்கும் அவர்களின் திட்டம் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதே இந்த ‘யாத்திசை’படக் கதை.

கதையின் முக்கிய பாத்திரங்களான ரணதீர பாண்டியன் வேடத்தில் நடித்திருக்கும் ஷக்தி மித்ரன், எயினர் குடி தலைவன் கொதி வேடத்தில் நடித்திருக்கும் சேயோன் இருவரும் மட்டும் இன்றி படத்தில் நடித்திருக்கும் எல்லோருமே புதுமுகங்கள். ஆனால், இவர்கள் எல்லோருமே வெறித்தனமாக நடித்து மிரட்டியிருக்கிறார்கள்.குறிப்பாக எயினர் இனக் குழுவின் மூத்தவராக வரும் சந்திரகுமார், சாமியாடியாக வரும் குருசோம சுந்தரம், பெரும்பள்ளி இனக்குழுவின் தலைவியாக சுபத்ரா, தேவரடியாராக வரும் ராஜலெட்சுமி ஆகியோர் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணிக்கு நியாயம் செய்திருக்கிறார்கள். எயினர் இனக் குழு மக்கள், அதன் போர் வீரர்கள், பாண்டிய போர்ப் படையில் உள்ள தளபதிகள், போர் வீரர்கள் என எல்லாருமே நிறைவான பங்களிப்பை வழங்கி அசத்தி இருக்கிறார்கள்.

30 நிமிட பழங்குடிக் காட்சிக்கு, 7ஆம் நூற்றாண்டு இலக்கியங்களை ஆய்வு செய்து அதைத் தொகுத்து உரையாடலாக மாற்றி உள்ளார்கள்.. அந்த வசனங்கள் புரியவில்லை என்பதும் சப் டைட்டில் போட்டதே குறையாக இருந்தாலும், நாம் இதுவரை திரைப்படங்களில் கேட்டிராத சங்ககால தமிழ் வார்த்தையை படத்தில் பயன்படுத்தியிருப்பது புதிய முயற்சியாக மட்டும் இன்றி, படம் பார்ப்பவர்களுக்கு புதிய அனுபவமாகவும் இருக்கிறது.. அத்துடன் அந்த கால பல்வேறு இனக்குழுவைச் சேர்ந்தவர்களின் தனித்துவமான பழக்கவழக்கங்கள், அவர்களின் கலாச்சார வழிபாட்டு முறைகளின் சித்தரிப்பு, அவர்கள் வாழும் நிலபரப்பு, உடுத்திய ஆடை அனிகலன், ,வீட்டு அமைப்பு, மண்பாத்திரங்கள், உணவுமுறைகள் ஆகியவைகளை வெளிச்சமிட்டுக் காட்டி பிரமிக்க வைத்து விட்டார்கள்..!

ரணதீரனுக்கு எதிரான முதல் சண்டைக்காட்சி தொடங்கி போர்க்களத்துக்கான விறுவிறுப்பு என படம் நெடுகிலும் சக்கரவர்த்தியின் பின்னணி இசை காட்சிகளுக்கு உயிரூட்டுகிறது. அகிலேஷ் காத்தமுத்துவின் பிரமாண்ட ஒளிப்பதிவு ப்ரேமுக்கு ப்ரேம் அழகியலுடனும், போர்க்காட்சிகளை படமாக்கியிருக்கும் விதமும் ரசிக்க வைக்கின்றன.

லோ பட்ஜெட் என்பதால் சில இடங்களில் சிஜி காட்சிகள் எடுபடாமல் போனாலும் உறுத்தவில்லை.. மேலும் திரைக்கதையில் இன்னமும் சொல்ல வேண்டியதை ஆழமாக அலசி இருக்கலாம் என்று சொல்ல தோன்றினாலும் யாத்திசை இரண்டாம் பாகம் எப்போ வரும் என்று கேட்க வைத்து விட்டது இப்படம்

மொத்தத்தில் யாத்திசை – நவீன வீரபாண்டிய கட்டப்பொம்மன்

மார்க் 4/5

admin
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

உடனடி செய்திகள்