தினமும் 12 மணி நேரம் வேலை :தமிழக அரசு புதிய மசோதா நிறைவேற்றம்!

தினமும் 12 மணி நேரம் வேலை :தமிழக அரசு புதிய மசோதா நிறைவேற்றம்!

மிழக சட்டசபையில் இன்று 12 மணி வேலை நேர மசோதா எதிர்க்கட்சியான அதிமுக மற்றும் திமுக கூட்டணிக் கட்சிகளின் எதிர்ப்பை மீறி நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதால், தனியார் நிறுவனங்கள் விரும்பினால், ஊழியர்களை 12 மணி நேரம் வேலை செய்ய வலியுறத்தலாம். அதேநேரம் 12 மணி நேரம் வேலை செய்ய வைத்தால், வாரத்தில் 3 நாட்கள் விடுமுறை அளிக்க வேண்டியது கட்டாயம் ஆகும். இந்த சட்ட மசோதாவை சட்டசபையில் கொண்டு வந்த போது, எதிர்க்கட்சிகளுடன், திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால் கூட்டணி கட்சிகள் எதிர்ப்பையும் மீறி குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இந்த மசோதாவை கூட்டணி கட்சிகள் எதிர்க்கிறது என்று இல்லை, முதல்வர் ஸ்டாலினே கடந்த 2020ம் ஆண்டு கடுமையாக எதிர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தனியார் நிறுவனங்களில் வேலை நேரத்தை 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக உயர்த்துவது தொடர்பான சட்ட மசோதா சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகளுடன், திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதனைத் தொடர்ந்து குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.

இந்த மசோதா தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு , “வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீட்டிற்காக தமிழகத்தை நோக்கி வருகின்றன. தொழிற்சாலைகளில் நெகிழ்வுத் தன்மை வரவேண்டும் என்பதற்காக, இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. எந்த தொழிலாளர்கள் விரும்புகிறார்களோ, அவர்களுக்கு மட்டுமே இது பொருந்தும். இது தொடர்பாக உயர்மட்ட குழு அமைக்கப்படும்” என்று தெரிவித்தார்.

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் கணேசன் பேசுகையில், “வாரத்திற்கு 48 மணி நேரம் வேலை பார்க்க வேண்டும்; இந்த நேரத்தை 4 நாட்களில் முடித்துவிட்ட பிறகு 5-வது நாளாக தொழிலாளர் வேலை செய்ய விரும்பினால், அவர்களுக்கு சம்பளம் வழங்கும் வகையில் சட்டம் உள்ளது; அனைத்து நிறுவனங்களுக்கும் இந்த சட்டம் இல்லை; விரும்பக்கூடிய தொழிற்சாலைகள், தொழிலாளர்களுக்கு மட்டுமே இந்தச் சட்டம் கொண்டு வரப்படும்” என்று தெரிவித்தார்..

தமிழக தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கமிது:

“இப்போது கொண்டு வந்திருக்கின்ற 65-ஏ சட்டத் திருத்தம் என்பது, பொதுவாக இன்றைக்கு இருக்கக்கூடிய உலகளாவிய சூழ்நிலையில் புதிய முதலீடுகள் இந்தியாவிற்கும், தமிழ்நாட்டிற்கும் வருகின்றபோது, மற்ற மாநிலங்களுடன் ஒப்படுகையில் தமிழ்நாட்டிற்கு வரக்கூடிய நிறுவனங்கள் நம்முடையை வேலை நேரத்தில் ஒரு நெகிழ்வுத்தன்மை (flexibility) இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றன. இந்த நெகிழ்வுத்தன்மையின் மூலமாக புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். குறிப்பாக, பெண்களுக்கு அதிகமாக வேலைவாய்ப்புகள் உருவாகக் கூடிய ஒரு வாய்ப்பு இருக்கிறது. இதுபோன்ற நெகிழ்வுத்தன்மையை எந்தெந்த நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன என்று பார்த்தால், தொழிலாளர் நலத் துறை அமைச்சர் கூறியதைப் போல, அனைத்து நிறுவனங்களுக்கும் இது பொருத்தமானது அல்ல. குறிப்பிட்ட சில நிறுவனங்களுக்கு மட்டுமே இந்த விதிகள் பொருந்தக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறது.

உதாரணமாக, மின்னணுவியல் துறையில் (Electronics Industries) இருக்கக்கூடிய நிறுவனங்கள், Non leather shoe making என்று சொல்லக்கூடிய தோல் அல்லாத காலணிகள் உற்பத்திச் செய்யக்கூடிய தொழில்கள், Electronic clusters அல்லது மென்பொருள் துறை (Software) இவ்வாறான தொழில்களில் பணியாற்றக்கூடியவர்கள், அவர்கள் வேலை பார்க்கும் சூழலுக்கு ஏற்ற வகையில், அங்கு பணியாற்றுபவர்கள் விரும்பினால், இதை ஒரு வாய்ப்பாக எடுத்துக்கொள்ளலாம். இதனால், வாரத்தில் இருக்கின்ற ஒட்டுமொத்த வேலை மணி நேரங்கள் என்பது மாறாது. இந்த மசோதாவின்படி வேலை செய்பவர்கள், 4 நாட்கள் வேலை செய்துவிட்டு 3 நாட்கள் ஓய்வு எடுத்துக் கொள்ளலாம். அந்நாட்களில் வேறு பணிகளையும் அவர்கள் பார்க்கலாம்.

இன்றையச் சூழலில் மாறியிருக்கின்ற Working Condition-ல், இந்த நெகிழ்வுத்தன்மை அவசியமான ஒன்றாக இருக்கிறது. இந்த மசோதா எந்த தொழிற்சாலைகளுக்குப் பொருந்தும் என்பது குறித்த கொள்கைகள் அரசால் வகுக்கப்பட்டு அதன் மூலம் தெரிவிக்கப்படும். எல்லாவற்றுக்கும் மேலாக, இந்த வாய்ப்பை தன்னார்வமாக யார் விரும்புகிறார்களோ, அதை தேர்வு செய்யும் உரிமை வழங்கப்படும்.

ஏற்கெனவே நடைமுறையில் இருக்கின்ற சட்டங்களை மாற்றுவதாக இது அமையாது. இதை நடைமுறைப்படுத்தும்போது, எந்த இடத்தில் பணியாற்றுகின்றனர், அந்த தொழிலின் வேலை சூழல் என்ன என்பது குறித்து பார்க்கப்படும். உதாரணத்துக்கு, பொறியியல் சார்ந்த தொழிற்சாலை தளத்துக்கும், எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலை தளத்துக்கும் மிகப் பெரிய அளவில் வித்தியாசங்கள் இருக்கிறது. பணியாளர்கள் வேலை பார்க்கும் தளத்திற்கு இடையே உள்ள தூரம் என்ன என்பது குறித்து பார்க்கப்படும்.

12 மணி நேரம் வேலை செய்கிறார்கள் என்றால், அதற்கேற்ற வசதிகள் சம்பந்தப்பட்ட தொழிலாளர்களுக்கு செய்யப்பட்டிருக்கிறதா என்பதையெல்லாம் இருந்தால் மட்டுமே இதற்கான அனுமதி வழங்கப்படும். உடனடியாக இந்த மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்ற சூழ்நிலைகள் இல்லை”

Related Posts