யசோதா – விமர்சனம்!

யசோதா – விமர்சனம்!

ல்வேறு நாடுகளில் உள்ள தம்பதிகளுக்கு வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுத் தரும் வர்த்தக மையங்கள் உண்டு. அதிலும் இன்று வரை நம் இந்தியாவில் இதற்கென  ஏகப்பட்ட மையங்கள் செயல்பட்டு வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இத்தனைக்கும் 80-களில் எழுத்தாளர் சிவசங்கரியின் ஒரு சிங்கம் முயலாகிறது என்ற நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட ‘அவன் அவள் அது’ என்ற படம் வாடகைத் தாய் பற்றிய பிரச்சனையை மையமாகக் கொண்ட. படத்தில் ‘செயற்கைக் கருத்தரித்தல்’ பற்றி பேசியிருப்பார்கள் – அச்சமயம் அய்யயோ.. இது தமிழ்க் கலாச்சார சீரழிவு, திருமணம், குழந்தை பிறப்பு பற்றி இளைய தலைமுறைக்குத் தவறான வழிகாட்டல் என்றெல்லாம் விமர்சனம் செய்யப்பட்டு(ம்) ஹிட் ஆன படமெல்லாம் நம் கோலிவுட் இளம் ரசிகர்களுக்கு தெரியாது. அதே சமயம் அண்மையில் நயன்தாரா & விக்னேஷ்சிவன் தம்பதியால் ஹாட் டாபிக் ஆன இந்த வாடகைத் தாய் விவகாரம் குறித்தும் அதில் நடக்கும் சில பல கோல்மால்கள் பற்றியும்  கொஞ்சம் டீடெய்லாக எக்ஸ்போஸ் பண்ணுவதே  இந்த ‘யசோதா’.

மிடில் கிளாஸ் ஃபேமிலியைச் சேர்ந்த சமந்தா தனது தங்கையில் அறுவை சிகிச்சைக்கு பணம் தேவைப்படுவதால், வாடகைத்தாயாக மாறுகிறார். அதை ஒப்புக் கொண்ட சமந்தாவை லேப் ஒன்றில் அடைத்து வைக்க, அங்கே இவரை போல பல பெண்கள் வாடகைத்தாயாக உள்ளனர். கொஞ்சம் அலெர்ட் ஆகி விசாரித்தால் வரலக்‌ஷ்மி சரத்குமார் நடத்தும் அந்த க்ளினிக்கில் சட்ட விரோதமாக பணம் சம்பாதிக்கும் நோக்கில் வாடகைத்தாயாக வரும் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதி நடப்பதை அறிந்து கொள்கிறார். கூடவே ஒரு ஹாலிவுட் நடிகை கொல்லப்பட்ட வழக்கு இவர்கள் செய்யும் வியாபரத்துடன் இணைகிறது. அந்த வழக்குக்கும், அந்த கும்பலுக்கும் என்ன தொடர்பு? இறுதியில் அவர்களின் பிடியில் இருந்து, தப்பிக்க ஹீரோயின் என்ற சக்தியாக உருவெடுக்கும் சமந்தாவின் அதிரிபுதிரி அதிரடி அட்டகாசம்தான் இந்த யசோதா கதை..!

வசதி வாய்ப்பு குறைந்த வாழ்க்கை. வயிற்றில் குழந்தையை சுமந்து கொண்டு நிறை மாத கர்ப்பிணியாக இருப்பது. பின்னர், தன்னை அடைத்து வைத்த இடத்தில் நடக்கும் மோசடியை அறிந்து கொண்டு சூறாவளியாக பொங்கி எழுந்து எதிரிகளை ஹாலிவுட் ஹீரோயின் போல அடித்து துவம்சம் செய்வது என சமந்தாவின் டிரான்ஸ்பர்மேஷன் ரசிகர்களை யசோதா படத்தை அண்ணாந்து பார்த்து ரசிக்க வைக்கிறது. கதை ஓட்டத்தைப் புரிந்து ஒட்டு மொத்த படத்தையும் தனது தோளில் சுமந்து சாதித்திருக்கிறார் சமந்தா. விஜய் படமொன்றில் அரசியல் வில்லியாக நடித்து அமர்களப்படுத்திய வரலட்சுமி மாஃபியா கேங்க் வில்லியாக வந்து ஸ்கோர் செய்கிறார்..

மேலும்  வரலட்சுமியின் காதலனாக வரும் உன்னி முகுந்தன், போலீஸ் அதிகாரியாக வரும் சத்ரு, அவர் குழுவை வழிநடத்தும் மூத்த அதிகாரியாக சம்பத் ராஜ் உள்ளிட்ட இதரகதாபாத்திரங்களும் கொடுக்கப்பட்ட ரோலுக்குரிய அங்கீகாரத்தைக் கொடுத்து ஸ்கோர் செய்திருக்கிறார்கள்

சுகுமார் கேமரா ஒர்க் படத்தை ஹாலிவுட் ரேஞ்சுக்கு வழங்க பாடுபட்டிருக்கிறது..மணிஷர்மாவின் பின்ன்ணி இசை கை கொடுத்த அளவுக்கு பாடல்கள் எடுபடவில்லை என்றாலும் கொஞ்சம் ஹம்மிங்-கை ஏற்படுத்தியதென்னவோ நிஜம்.

தொடக்க பேராவில் சொன்ன வாடகைத் தாய் என்ற ஒற்றைத் தொழிலின் பின்னணியைச் சொல்ல எக்கச்சக்க ஹோம் ஒர்க் செய்து பிரமாண்டமான லேப் செட் எல்லாம் போட்டு, நடக்கும் தில்லுமுல்லுகளைப் படிப்படியாக நாயகி அறிவதன் வாயிலாகவே ரசிகர்களுக்கும் கடத்தும் சுவாரசியமான திரைக்கதை பாணியுடன், இயக்குநர்(கள்) உண்மையான த்ரில்லிங் அனுபவத்தை கொடுத்திருக்கிறார்கள்..வழக்கம் போல் சில குறைகளை சுட்டிக் காட்டலாம் என்றாலும் ஏகப்பட்ட நிறைகள் கொண்டவள் இந்த யசோதா

மார்க் 3.75/5

error: Content is protected !!