மிரள் – விமர்சனம்!

மிரள் – விமர்சனம்!

நீங்கள் குண்டானவரா? அல்லது உங்கள் உடல் நலம் பேண மெனக்கிடுபவரா? ஆமெனில் அண்மையில் வெளியான த்ரிலர் படமான மிரள் சினிமா பாருங்கள்..நிஜந்தாங்க.. சில ஆண்டுகளுக்கு முன்னர் பிரிட்டனின் வெஸ்ட்மினிஸ்டர் பல்கலைக்கழகம் நடத்திய ஓர் ஆய்வில், பயங்கர திகில் படங்களைப் பார்க்கையில் இதயத்துடிப்பு அதிகரிக்கிறது என்றும் இதன் மூலம் உடம்பின் குறிப்பிட்ட கலோரி சக்தியானது எரிக்கப்பட்டு, உடல் எடையும் குறைக்கப்படுகிறது என்றும் தெரிய வந்துள்ளது. அந்த வகையில் இந்த மிரள் படம் உங்கள் ஆரோக்கியத்தை பேணும்..!

மிடில் கிளாஸ் பேமிலையைச் சேர்ந்த ஹரியும்( பரத் ) ரமாவும் (வாணி போஜன் ) லவ் பண்ணி மேரேஜ் ஆன இளம் தம்பதிகள்.இதில் மனைவி ரமாவிற்கு அடிக்கடி கணவரையும், தன்னையும் யாரோ கொலை செய்வது போல் கெட்ட கனவு அடிக்கடி வருகிறது அதனால் மூட் அவுட்டாகி ஜோதிடரைப் போய் பார்த்தால் நேரம் சரியில்லை என்று சொல்லி மேலும் குழப்பி விடுகிறார். இந்த பிரச்சனைகள் தீர ரமாவின் குல தெய்வம் கோவில் உள்ள கிராமத்திற்கு போய் சாமி தரிசனம் செய் என்று மாமியார் சொன்னதை அடுத்து அன்று இரவே தங்களது மகனுடன் காரில் கிராமம் போய் திரும்புகிறார் வரும் வழியில் கார் திடீரென ரிப்பேரான நிலையில் ஏகப்பட்ட அமானுஷ்ய உருவங்கள் இந்த மூவரையும் பயமுறுத்தி. கொலை செய்ய பார்க்கிறது. அதனால் இந்த மூவரும் உயிருக்கு பயந்து ஓடுகிறார்கள். இறுதியில் இதெல்லாம் ஏன் நடக்கிறது? என்பதை நாம் ஊகிக்க முடியாத ட்விஸ்ட்டுடன் புது டைப்பிலான கதையொன்றை சொல்லியிருக்கிறார் டைரக்டர்.

நாயகன் பரத் மற்றும் வாணி போஜன் இருவரும் முழு படத்தையும் இன்வால்மெண்டோடு பார்க்க வைக்கும் விதத்தில் படம் முழுவதும் பயத்தோடு பயணித்து நம்மையும் அச்சப்பட வைக்கிறார்கள். அதிலும் ஒரு சாமானிய மனிதருக்கு திடீரென்று ஒரு பிரச்சனை வந்தால் அவர் அதை எப்படி எதிர்கொள்வாரோ அப்படிப்பட்ட இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கும் பரத், எந்த இடத்திலும் ஹீரோயிஷத்தை காட்டாமல் அந்த கதாபாத்திரமாகவே படம் முழுவதும் பயணித்து படத்திற்கு பலம் சேர்த்துள்ளார். 10 வயது பையனுக்கு அம்மாவாக நடித்திருக்கும் வாணி போஜன், கமிட் ஆன ரோலின் தரமறிந்து நடித்திருக்கிறார். பெண்கள் பலர் எதிர்கொள்ளும் பிரச்சனையால் பாதிக்கப்படும் வாணி போஜன், அதற்கான தீர்வாக எடுக்கும் முடிவு அதிரடியாக மட்டும் அல்ல பாராட்டும்படியும் இருக்கிறது. வாணி போஜனின் அப்பாவாக நடித்திருக்கும் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், அம்மாவாக நடித்திருக்கும் மீரா கிருஷ்ணன், பரத்தின் நண்பராக நடித்திருக்கும் ராஜ்குமார் என அனைத்து நடிகர்களும் தங்களது வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.

கேமராமேன் சுரேஷ் பாலா நைட் எஃபெக்ட் காட்சிகளை மிக நேர்த்தியாக படமாக்கி அடடே சொல்ல வைத்து இருக்கிறார். இசையமைப்பாளர் பிரசாத் எஸ்.என் பின்னணி இசையில் – அதுவும் அந்த காற்றாலை சுற்றும் ஒலியைக் கூட துல்லியமாக வழங்கி மிரட்டியிருக்கிறார்.

மிகக் குறைந்த நடிகர்களுடன்,படம் தொடங்கி முடியும் வரை எங்கேயும் சின்னத் தவறு கூட இல்லாமல் மிகுந்த சஸ்பென்ஸ் உடன் படத்தை கொண்டு செல்கிறார் டைரக்டர். நாம் பயம் கொள்ள பல காட்சிகள் இருக்கின்றன. குறிப்பாக கனவில் முகமூடியுடன் வந்த ஆசாமி ர் யார்? எதற்காக இப்படி செய்கிறார்? என்ற கேள்வியோடு நடுநடுவே சில சந்தேகங்களையும் மனதில் எழுப்பும் வகையில் ஸ்கீரின் பிளேயைக் கொண்டு போய் கிளைமாக்ஸில் ரகசியத்தை வெளிப்படுத்தும் போது, வாவ் சொல்ல வைத்து விடுகிறார் டைரக்டர் சக்திவேல்.

மொத்தத்தில் மிரள்- லோ பட்ஜெட்டில் உருவான ஒரு ஹை த்ரில்லர் படம்!

மார்க் 3/5

error: Content is protected !!