உக்ரைனிலிருந்து திரும்பிய இந்திய மருத்துவ மாணவர்களுக்கு ரஷ்யா அழைப்பு!

உக்ரைனிலிருந்து திரும்பிய இந்திய மருத்துவ மாணவர்களுக்கு ரஷ்யா அழைப்பு!

டந்த பல மாதங்களாக தொடரும் போர் காரணமாக, படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு உக்ரைனிலிருந்து திரும்பிய இந்திய மருத்துவ மாணவர்கள், தங்கள் நாட்டுக்கு வந்து கல்வி பயிலலாம் என்று ரஷ்யா அழைத்துள்ளது. உக்ரைன் மற்றும் ரஷ்யாவில் மருத்துவக் கல்வி ஒன்றுதான் என்பதால், இந்திய மருத்துவ மாணவர்கள், உக்ரைனில் விட்ட மருத்துவக் கல்வியை தங்கள் நாட்டில் வந்து தொடர வசதி செய்யப்படும் என்று ரஷ்யா அறிவித்துள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த போது, அச்சம் காரணமாக, அங்கிருந்த மருத்துவக் கல்லூரியில் பயின்று வந்த 24 ஆயிரம் இந்திய மருத்துவ மாணவர்கள் படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு நாடு திரும்பினர். இவர்களுக்கு இந்தியாவில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கை அளிக்க முடியாது என்று இந்திய அரசு அறிவித்திருக்கும் நிலையிலும், உயிர் போனாலும் பரவாயில்லை என்று சில இந்திய மாணவர்கள் மீண்டும் உக்ரைனுக்குத் திரும்பி தங்களது கல்வியை தொடர்ந்து வருவதாக செய்திகள் வெளியானது. இந்நிலையில் ரஷ்யா இந்த அழைப்பை விடுத்துள்ளது.

இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் ஒலேக் அவ்தீவ் சென்னையில் வெளியிட்ட அறிக்கையில், உக்ரைனில் மருத்துவக் கல்வி பயின்று, பாதியிலேயே விட்டுவிட்டு நாடு திரும்பிய இந்திய மருத்துவக் கல்வி மாணவர்கள், ரஷ்யாவிலும் ஒரே மாதிரியான (உக்ரைன்) மருத்துவக் கல்விதான் வழங்கப்படுகிறது என்பதால், தங்கள் நாட்டில் கல்வியைத் தொடரலாம்.

அவர்களுக்கு மக்கள் பேசும் மொழியும் தெரிந்திருக்கும், ஏனென்றால், உக்ரைனிலும் பெரும்பாலான மக்கள் ரஷ்ய மொழியைத்தான் பேசுவார்கள். ரஷ்யாவுக்கு இந்திய மருத்துவக் கல்வி மாணவர்களை அன்புடன் வரவேற்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்பு, டெல்லியில் உள்ள ரஷ்ய தூதரும், இந்த அறிவிப்பை வெளியிட்டிருந்தார். தங்களது கல்வி பாதிக்காத வகையில், விட்ட இடத்திலிருந்து கல்வியை தொடர வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!