இந்தியர்கள் தாய்நாட்டிற்கு அனுப்பும் தொகையில் பலத்த சரிவு!
வருடந்தோறும் வெளிநாட்டில் பணியாற்றும் இந்தியர்கள், தங்கள் வீட்டிற்கு அனுப்பும் ஊதிய தொகையில், கடந்த 2016ம் வருடம் 9 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளதாக உலக வங்கி அறிவித்துள்ளது. 2015ம் ஆண்டின் 6890 கோடி டாலர்களில் இருந்து 2016ம், ஆண்டு 6270 கோடி டாலர்களாக குறைந்துள்ளது. இது கடந்த 30 ஆண்டுகளில் ஏற்பட்ட மோசமான சரிவாகும்.

இந்த நிலையிலும் வெளிநாடுகளில் இருந்து பணம் அனுப்பப்படும் நாடுகளின் பட்டியலில் இந்தியா தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது. இந்தியாவை தொடர்ந்து சீனா, பிலிப்பைன்ஸ், மெக்ஸிகோ மற்றும் பாகிஸ்தான் முதல் 5 இடங்களை பிடித்துள்ளது.

பல இந்தியர்கள் வெளிநாடுகளில் அதிகளவில் பணியாற்றி வருகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் அவர்கள் தங்கள் வீட்டிற்கு அனுப்பும் தொகை இந்திய பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தியர்கள் அதிகம் பணியாற்றும் கிழக்கு ஆசிய நாடுகள் மற்றும் ரஷ்யாவில் ஏற்பட்டுள்ள எண்ணெய் விலை வீழ்ச்சி, நிதி நெருக்கடிகள், வெளிநாட்டினருக்கு குறையும் வேலை வாய்ப்பு போன்ற காரணங்களால், இந்தியர்கள் தாய்நாட்டிற்கு அனுப்பும் தொகையில் சரிவு ஏற்பட்டுள்ளதாக உலக வங்கியின் அறிக்கை தெரிவிக்கிறது.
‘‘உலக அளவில் இதன் சரிவு 2.4 சதவீதமாக உள்ளது. உலக நாணய மதிப்பில் ஏற்பட்ட சரிவும் இதற்கு காரணம். இந்த நிலை 2017ம் ஆண்டும் நீடிக்கும். இந்தியாவில் 2017ம் ஆண்டில் 1.9 சதவீதம் சரிவு ஏற்படும்.’’ என உலக வங்கி தெரிவித்துள்ளது.


