டெல்லியில் பெண்கள் இரவு பயணம் பாதுகாப்பில்லை- சர்வே ரிசல்ட்!

டெல்லியில் பெண்கள் இரவு பயணம் பாதுகாப்பில்லை- சர்வே ரிசல்ட்!

பெண்களுக்கு பயணம் என்பது பலவிதங்களில் ஏற்படுகிறது. பணி நிமித்தமாகவோ, விடுமுறையை கழிக்கவோ சாலைகளில் பயணம் செய்தாக வேண்டியுள்ளது. இந்த பயணம் பாதுகாப்பானதாக உள்ளதா? என்பது பற்றி வருடா வருடம் சிலர் சர்வே எடுத்து ரிசல்ட் வெளியிடுவது வாடிக்கை. இந்நிலையில் அரசின் இலவச பேருந்து பயணத் திட்டம் மூலம் 100 கோடி ‘பிங்க்’ டிக்கெட்டுகளில் பெண்கள் டெல்லியில் பயணித்துள்ளனர். இருப்பினும், 75 சதவீதத்திற்கும் அதிகமான பெண்கள் இருட்டிய பிறகு டெல்லி பேருந்துகளில் பயணிப்பதை பாதுகாப்பற்றதாக உணர்வதாக ஒரு அறிக்கை தெரிவித்துள்ளது.

சமீபத்தில் கிரீன்பீஸ் இந்தியா என்ற ஒரு அரசு சாரா அமைப்பானது ‘ரைடிங் தி ஜஸ்டிஸ் ரூட்’ என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில், 75 சதவீதம் பெண்கள் ‘பிங்க் டிக்கெட்’ திட்டத்தின் மூலம் குறிப்பிடத்தக்க சேமிப்பைக் கண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த சேமிப்பு நிதியை வீட்டுத் தேவைகள், மருத்துவம் மற்றும் அவசர தேவைகளுக்கு பயன்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளனர்.

25 சதவீதம் பெண்கள் தற்போது பொதுப் பேருந்துகளைப் பயன்படுத்துவதை அதிகரித்துள்ளனர். மேலும், இதற்கு முன்பு பேருந்து பயணத்தை தவிர்த்த பெரும்பாலான பெண்கள் 2019 அக்டோபரில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து பேருந்து பயணத்துக்கு மாறியுள்ளனர் என்றும் அறிக்கை கூறுகிறது. இருப்பினும், 77 சதவீத பெண்கள் இருட்டிய பிறகு பேருந்துகளில் பயணிப்பதை பாதுகாப்பற்றதாக உணர்வதாக தெரிவித்துள்ளனர். மேலும், பல பெண்கள் துன்புறுத்தல் சம்பவங்கள் குறித்தும் புகார் அளித்துள்ளனர். குறிப்பாக நெரிசலான பேருந்துகளில் இது அதிகம் நடப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

‘பிங்க் டிக்கெட்’ திட்டத்தின் கீழ், டெல்லியின் பொதுப் பேருந்துகளில் பயணிக்க பெண்கள் பணம் செலுத்த வேண்டியதில்லை. ஆனால் பெண்கள் விரும்பினால் டிக்கெட்டுகளை வாங்குவதற்கான விருப்பம் உள்ளது.இந்தத் திட்டம் டெல்லியில் பெண்களுக்கான பொதுப் போக்குவரத்தைத் திறந்துள்ளது. இத்திட்டத்தில் பாதுகாப்பை மேம்படுத்த வேண்டும். மேலும் பொதுப் போக்குவரத்தை அனைவரும் அணுகக்கூடிய வகையில் நன்கு இணைக்கப்பட்ட சேவைகளை உறுதி செய்ய வேண்டும்” என்று கிரீன்பீஸ் இந்தியா அமைப்பின் ஆகிஸ் ஃபரூக் கூறினார்.

error: Content is protected !!