வருணன் விமர்சனம்!

வருணன் விமர்சனம்!

மிழ்நாட்டில் தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளைவிட, டாஸ்மாக் பிரியர்களை விட கேன் வாட்டர் குடிக்கும் குழந்தைகளும், ஆட்களும் அதிகமாக இருக்கக்கூடும். கடந்த முப்பது ஆண்டுகளில் நாம் கண்ட மிகப்பெரிய சாதனை தண்ணீரைப் பாக்கெட்டிலும் கேனிலும் அடைத்ததுதான்.இந்த கேன் வாட்டர் குறித்து ஒரு கவிஞ்ர், நாம் ‘நமக்கு உரித்தான தண்ணீரை எப்போதோ தீர்த்துவிட்டோம். இப்போது உறிஞ்சிக்கொண்டிருப்பதெல்லாம் எதிர்கால சந்ததியினரின் பங்கு’ என்று சொன்னது நினைவுக்கு வருகிறது. அப்பேர்பட்ட வாட்டர்கேன் பிஸ்னெஸ் சப்ஜெக்டை வைத்து இந்த படத்தை வழங்கி இருக்கிறார்கள்.அதாவது வாட்டர் கேன் கேன் போடும் தொழிலில் இருக்கும் அரசியல் பின்னணியில் ஒரு கேங்ஸ்டர் படமாக உருவாக்கி அதை ரசிக்க வைக்க முயற்சி செய்திருக்கிறார் டைரக்டர் ஜெயவேல்முருகன்

அதாவது 90- களில் வடசென்னை ராயபுரம் பகுதியில் கேன் வாட்டர் சப்ளை செய்யும் தொழில் செய்கின்றனர் ராதாரவி, சரண்ராஜ். தனித்தனியாக பிஸினஸ் செய்தாலும் இந்தக் கோட்டைத்தாண்டி நானும் வர மாட்டேன்/ நீயும் வரக் கூடாது என்று ஜெண்டில்மேன் அக்ரிமெண்ட் போட்டு சண்டை சச்சரவு இல்லாமல் தொழில் செய்து வருகிறார்கள். ஆனால் இவர்களிடம் கேன் வாட்டர் போடும் வேலை செய்யும் துஷ்யந்த் மற்றும் பிரியதர்ஷன் அவ்வப்போது சரண்ராஜ் கேங்குடன் சிறு சிறு மோதலில் ஈடுபடுகின்றனர். அது ஒரு கட்டத்தில் இது இருதரப்புக்கும் பெரிய மோதலாக வெடிக்கிறது. இதன் எதிர்வினையாக கொலை சம்பவங்கள் அரங்கேறுகின்றன. இந்த மோதல் இவர்கள் வாழ்க்கையில் என்ன விளைவைக் கொடுத்தது என்பதே வருணன் படக் கதை.

கேன் வாட்டர் நிறுவனம் நடத்துபவர்களாக நடித்திருக்கும் ராதாரவி மற்றும் சரண்ராஜ் போதிய அளவில் தங்கள் பங்களிப்பை வழங்கி உள்ளார்கள்.நாயகனாக நடித்திருக்கும் துஷ்யந்த் ஜெயப்பிரகாஷ் மற்றும் நாயகியாக நடித்திருக்கும் கேப்ரில்லா கதாபாத்திரத்திற்கு ஏற்ப கச்சிதமாக நடித்திருக்கிறார்கள். மற்றொரு நாயகன், நாயகியாக நடித்திருக்கும் பிரியதர்ஷன் மற்றும் ஹரிபிரியா ஜோடிக்கும் வழக்கமான வேலை தான் என்றாலும் அதை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள். வில்லனாக நடித்திருக்கும் சங்கர்நாக் விஜயன் கவனம் ஈர்க்கும்படி வில்லத்தனத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். ஜீவா ரவி, மகேஸ்வரி, அர்ஜுனா கீர்த்திவாசன், ஹைட் கார்த்தி, கெளசிக், கிரண்மயி என அனைவரும் டைரக்டர் சொன்னதை செய்து திருப்தி பட்டு கொள்வதை உணர முடிகிறது.

கேமராமேன் ஒளிப்பதிவாளர் ஸ்ரீராம் சந்தோஷ், வடசென்னையைக் கண்முன் காட்டியிருக்கிறார்.சண்டைக்காட்சிகளில் குறிப்பாக இறுதிச் சண்டைக் காட்சியில் அவருடைய உழைப்பு அடடே சொல்ல வைத்து விடுகிறார்.

மியூசிக் டைரக்டர்போபோ சசியின் இசையில் பாடல்கள் இரசிக்கும் இரகம்.பின்னணி இசை கொஞ்சம் தூக்கல்.

ரமணா கோபிநாத்தின் வசனங்கள் கவனத்தை ஈர்க்கிறது.

எழுதி இயக்கியிருக்கிறார் ஜெயவேல் முருகன்.குடிநீர் ஒரு தொழிலாக மாறிப்போன அவலத்தைச் சுட்டும் வகையில் அதையே பின்புலமாக வைத்து ஒரு திரைக்கதையை எழுதியிருக்கிறார்.அதை திரைமொழியில் கொடுப்பதில் ஏகப்பட்ட குறைகள் இருப்பது பலவீனம்.குறிப்பாக இரு தரப்புக்கும் இடையே ஏற்படும் மோதல், அதில் நடக்கும் சதி, அதை தொடர்ந்து ஏற்படும் உயிர் பலி என்று அனைத்தும் முன்னரே பார்த்தவைகளாகவே இருப்பதால் படம் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.மேலும் 90களின் பின்னணியில் எடுத்திருப்பதால் எடுபடவில்லை!

மார்க் 1.75/5

error: Content is protected !!