வேளாண் பட்ஜெட் 2025 முழு விபரமும் & விமர்சனமும்!

2025-26 நிதியாண்டுக்கான தமிழ்நாடு அரசின் பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று தாக்கல் செய்திருந்தார். அடுத்த 2 ஆண்டுகளில், 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு கணினி அல்லது மடிக்கணினி வழங்க ரூ.2,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதேபோல, பெற்றோர் இருவரையும் இழந்த 50,000 குழந்தைகளுக்கு 18 வயது வரை மாதந்தோறும் ரூ.2,000 வழங்கப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகின.அதனை தொடர்ந்து தமிழக சட்டப்பேரவையில் இன்று (மார்ச் 15) 2025-26 நிதியாண்டுக்கான வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்ட்டுள்ளது. வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் இன்று காலை 9.30 மணிக்கு பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். திமுக அரசு பொறுப்பேற்ற பின்னர், வேளாண்மைக்கு தனியாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. அந்தவகையில் வேளாண்மைக்கு தனியாக தாக்கல் செய்யப்பட்டுள்ள 5வது பட்ஜெட் இது. இந்த பட்ஜெட்டில், வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள கடன்களுக்கு தள்ளுபடி வழங்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு விவசாயிகள் மத்தியில் உள்ளது. தேர்தல் வாக்குறுதியின் போது அளித்த நகைக்கடன் தள்ளுபடி முழுமையாக நிறைவேற்றப்படவில்லை என விவசாயிகள் குற்றம்சாட்டும் நிலையில், கடன் தள்ளுபடி முழுமையாக வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில் பல தரப்பினருக்கும் ஏமாற்றமாகி விட்டது.
தமிழக வேளாண் பட்ஜெட்டை, சட்டப்பேரவையில் உழவர் நலன் மற்றும் வேளாண்மை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தபின்னர் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவைக்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: இன்றைய தினம் வேளாண் பட்ஜெட் 5-வது முறையாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 4 ஆண்டுகளாக தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கைப் போலவே, அதையே தொடர்ந்து இந்தாண்டும் தாக்கல் செய்துள்ளனர்.திமுக-வினர் விவசாயிகளை ஏமாற்றுவதில் வல்லவர்கள் என்பதற்கு பொருத்தமான, உதாரணமான விவசாய பட்ஜெட் இது. விவசாயத்துக்கு தனி பட்ஜெட் என்றுகூறி, ஏதோ தனி பட்ஜெட் போட்டால், விவசாயிகள் வளர்ந்து, செழித்து வளமாக வாழ்வோம் என விவசாயிகள் கனவு கண்டனர். ஆனால், அது ஒரு போலித் தோற்றம் என்பது இப்போது நிரூபணமாகியுள்ளது.
விவசாய பட்ஜெட் என்ற பெயரில் கிட்டத்தட்ட 1.45 மணி நேரம் விவசாய பட்ஜெட்டை வாசித்து சாதனை படைத்திருக்கிறார்கள். அதுதான் தமிழக வேளாண் பட்ஜெட்டின் சாதனை. இந்த விவசாய பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு நன்மை எதுவும் இல்லை. ஏமாற்றம்தான் கிடைத்துள்ளது. வேளாண்துறையைச் சாரந்த ஊரக வளர்ச்சித் துறை, பட்டு வளர்ச்சித் துறை, கால்நடைத்துறை, பால்வளத்துறை, கூட்டுறவுத்துறை, மீன்வளத்துறை, வருவாய்த்துறை, தொழில்துறை, மின்சாரத்துறை, நீர்வளத்துறை அனைத்தையும் கலந்து ஒரு அவியல் போல வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு பயனளிக்கக்கூடிய திட்டமோ, நன்மையோ இல்லை. அதிமுக ஆட்சியில், உணவு பதப்படுத்தும் பூங்கா, உழவர் உற்பத்திக் குழு போன்றத் திட்டங்களை திமுக அரசு கைவிட்டுவிட்டது. இந்த வருடத்தில் ஏதோ ஒரு சில இடங்களில் அறிவித்துள்ளனர். கடந்த 4 ஆண்டு பட்ஜெட்களில் அவை இடம்பெறவில்லை. இந்த பட்ஜெட்டில் முளைக்காத விதை, உபயோகமற்ற உயிர் உரங்கள், என முறைகேடு செய்வதற்கான வசதியான திட்டங்களைத் தவிர, விவசாயிகளுக்கு பயன்படும் எந்தவிதமான திட்டமும் இல்லை.
ஆர்கானிக் ஃபார்மிங் என ஒரு துறைக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு என அறிவிக்கப்பட்டது எல்லாம் நின்றுவிட்டது. கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் என ஒரு திட்டத்தை அறிவித்தார். இதில் ஏற்கெனவே அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள், செயல்படுத்தப்பட்ட திட்டங்கள்தான் உள்ளன. இதனால், விவசாயிகளுக்கு எவ்வித கூடுதல் பலனும் இல்லை.
தமிழகத்தில் கூடுதலாக 11.75 லட்சம் ஹெக்டேர் பயிர் செய்வதாகவும், ஏற்கெனவே இருந்த சாகுபடி பரப்பை 60 சதவீதத்தில் இருந்து 75 சதவீதமாக விரிவாக்கம் செய்யப்படும் என்று அறிவித்திருந்தார்கள். ஆனால், அவ்வாறு சாகுபடி பரப்பு உயர்த்தபடவில்லை. 2021-22 ஆம் ஆண்டு மொத்த சாகுபடி பரப்பு 63.48 லட்சம் ஹெக்டேர், அதாவது 48.7%. ஆனால் சாகுபடி செய்த பரப்பு 49.08 லட்சம் ஹெக்டேர், அதாவது 37.7% அளவில் தான் சாகுபடி செய்துள்ளனர். 2023-24-ல் கிட்டத்தட்ட சாகுபடி பரப்பு 1.2% குறைந்துள்ளது. ஆண்டுதோறும் திமுக ஆட்சியில் சாகுபடி பரப்பு குறைந்து வருகிறது.
10 லட்சம் ஹெக்டேர் அளவுள்ள இருபோக சாகுபடி நிலங்களை பத்தாண்டுகளில் இருமடங்காக மாற்றுவோம் என்று கூறினார்கள், அதுவும் நடக்கவில்லை. 2021-22ல் ஒருமுறைக்கு மேல் சாகுபடி செய்த பரப்பு சுமார் 14.39 லட்சம் ஹெக்டேர். அதே 2023-24-ல், 13.6 லட்சமாக குறைந்துள்ளது. எனவே தமிழகத்தில் இருபோக சாகுபடி பரப்பு உயரவில்லை, அதை உயர்த்த இவர்களிடம் எந்த திட்டமும் இல்லை. இதுதான் யதார்த்தமான உண்மை.
தேங்காய், பருத்தி, சூரியகாந்தி ஆகிய பணப்பயிர்களுக்கு வேளாண் ஆக்கத்திறனில் தமிழகத்தை முதல் மூன்று இடத்தில் கொண்டுவருவோம் என்று கூறினார்கள். இந்த பயிர்களின் உற்பத்தி திறன் ஆண்டுதோறும் குறைந்துகொண்டே வருகிறது. நெல் உற்பத்தி திறன் ஹெக்டேருக்கு 2021-22ல் 3,566 கிலோவாக இருந்தது. 2023-24ல், 3,354 கிலோவாக குறைந்துவிட்டது. பஞ்சு உற்பத்தித் திறன் ஒரு ஹெக்டேருக்கு 2019-20ல் 419 கிலோவாக இருந்தது, 2023-24ல் அது 312 கிலோவாக குறைந்துள்ளது. கரும்பு உற்பத்தி திறன், ஹெக்டேருக்கு 108 டன்னாக இருந்தது, 2023-24ல் அது 105 டன்னாக குறைந்துவிட்டது.
மொத்த நெல் உற்பத்தி 79.06 லட்சம் டன்னாக இருந்தது, 2023-24ல் அது 70.48 லட்சம் டன் ஆக குறைந்துவிட்டது. பயிர் வகைகள் உற்பத்தி 4.98 லட்சம் டன்னாக இருந்தது, 2023-24ல் 3.86 லட்சம் டன்னாக குறைந்துவிட்டது. இந்த தகவல்கள் அனைத்தும் தமிழ்நாடு புள்ளிவிவரத் துறையில் இருந்து எடுக்கப்பட்டது. இந்த அரசு விவசாயிகளுக்கு பயன்படும் எந்த திட்டத்தையும் நிறைவேற்றவில்லை. விவசாயிகள் உற்பத்திக்கு இடுபொருட்கள் கிடைப்பதில்லை. தரமான விதைகள் கிடைப்பதும் இல்லை, அரசு கொடுப்பதும் இல்லை.பயிர் பாதிப்புகளைக் கட்டுப்படுத்த அரசு முன்வருவதில்லை. பயிர் இழப்பீடுகள் கிடைப்பதில்லை. குறுவை சாகுபடிக்கு தொடர்ந்து 3 ஆண்டுகளாக பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்கப்படவில்லை” என்று அவர் கூறினார்.
முன்னதாக தமிழக வேளாண் பட்ஜெட் உரையில் இடம்பெற்றுள்ள அறிவிப்புகளின் முக்கிய அம்சங்கள்…
🌳 வேளாண்மையில் புதிய கண்டுபிடிப்புகளுக்கான “டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிதி” உருவாக்கப்படும்.
🌳 ரூ.1.35 கோடியில், காலநிலை மாற்றத்தினால் விவசாயம் மற்றும் சுற்றுசூழலில் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள திறனுடைய கிராமங்கள் உருவாக்கப்படும்.
🌳 ரூ.68 கோடியில் 51 நீர்வடிப்பகுதிகளில் 30,190 ஹெக்டேர் பரப்பில் தருமபுரி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, ராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களில் நீர்வடிப்புப்பகுதி மேம்பாட்டுத் திட்டம் உருவாக்கப்படும்.
🌳 சென்னை, கோயம்புத்தூர், தூத்துக்குடி, மதுரையில் உயிர்ம வேளாண் விளைபொருட்களுக்கு தர நிர்ணய ஆய்வகங்கள் ரூ.6.16 கோடியில் அமைக்கப்படும்
🌳 விவசாய உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு (FPO) ரூ.10 லட்சம் வரை பொருளீட்டு கடன் வழங்கப்படும்.
🌳 வட்டாரங்கள் தோறும் தேர்வு செய்யப்பட்ட பொது சேகரிப்பு மையங்களில் வேளாண் விளைபொருட்கள் வர்த்தகம் செய்யப்படும்.
🌳 உழவர் சந்தை காய்கறிகளை நுகர்வோர் வீட்டுக்கு எடுத்துச் சென்று வழங்கிட உள்ளூர் இணைய வர்த்தகத்துடன் இணைக்கப்படும்.
🌳 ரூ.8 கோடியில் தமிழ்நாட்டில் அதிக வரத்துள்ள 50 உழவர் சந்தைகளில் கூடுதல் வசதிகள் ஏற்படுத்தப்படும்.
🌳மின்னணு தேசிய வேளாண் சந்தையுடன் (eNAM) 56 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் ரூ.39.20 லட்சம் ஒதுக்கீட்டில் ஒருங்கிணைக்கப்படும்.
🌳 ரூ.20 கோடியில் 9 ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் தலா 1000 மெ.டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிடங்குகள் அமைக்கப்படும்.
🌳 நல்லூர் வரகு (கடலூர்), வேதாரண்யம் முல்லை (நாகப்பட்டினம்), நத்தம் புளி (திண்டுக்கல்), ஆயக்குடி கொய்யா (திண்டுக்கல்), கப்பல்பட்டி கரும்பு முருங்கை (திண்டுக்கல்) ஆகிய 5 வேளாண் பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற ரூ.15 லட்சம் ஒதுக்கீடு.
🌳 ரூ.50 கோடியே 79 லட்சத்தில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும்.
🌳 ரூ.50 கோடியில் வேளாண் விளைபொருட்களுக்கான 100 மதிப்புக்கூட்டு மையங்கள் அமைக்கப்படும்.
🌳 ரூ.1.84 கோடியில் 300 கிராமப்புற இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் வழங்கப்படும்.
🌳 ரூ.2.50 கோடியில் திறந்தவெளி பாசன கிணறுகள் புனரமைக்கப்படும்.
🌳 ரூ.2.75 கோடியில், வேளாண்மைப் பொறியியல் துறை இயந்திரங்களைப் பயன்படுத்தி, 500 நீர் சேகரிப்பு கட்டமைப்புகளை தூர் வாருதல் மற்றும் 100 புதிய மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்புகள் உருவாக்கப்படும்.
🌳 புதிய மின்மோட்டார் பம்புசெட்டுகள் வாங்கிட, பழைய மின்மோட்டார் பம்புசெட்டுகளை மாற்றிட 1000 விவசாயிகளுக்கு மானியம் வழங்கிட ரூ.1.50 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
🌳 63,000 ஆயிரம் மலைவாழ் விவசாயிகள் பயன் பெரும் வகையில் 22 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு மலை வாழ் உழவர் முன்னேற்ற திட்டம் செயல்படுத்தப்படும்.
🌳 வேளாண்மை உழவர் நலத்துறை மூலம் மாதம் 2 முறை தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களில் முகாம் நடத்தப்படும்.
🌳 மின்சார இணைப்பு இல்லாத 1000 விவசாயிகளுக்கு தனித்துச் சூரியசக்தியால் இயங்கக்கூடிய பம்புசெட்டுகள் வழங்க ரூ.24 கோடி ஒதுக்கீடு
🌳 காவேரி, வெண்ணாறு, வெள்ளாறு வடிநிலப்பகுதிகளிலும், கல்லணை கால்வாய்ப் பாசானப் பகுதிகளிலும் உள்ள ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு வாய்க்கால்களில் ரூ.13.80 கோடியில் தூர்வாரும் பணிகள் நடத்தப்படும்.
🌳 ரூ.17.37 கோடியில் இ-வாடகை செயலி மூலம் வேளாண் இயந்திரங்களை வாடகைக்கு வழங்குவது வலுப்படுத்ப்படும்.
🌳 சிறு, குறு விவசாயிகளின் பயனுக்காக 130 வேளாண் இயந்திர வாடகை மையங்கள் ரூ.10.50 கோடியில் உருவாக்கப்படும்.
🌳 17,000 விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள், கருவிகள் மானியத்தில் வழங்கப்படும். இத்திட்டத்துக்காக ரூ.215 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
🌳 ஊட்டச்சத்துள்ள வெண்ணைப்பழ சாகுபடியை தென்காசி, திண்டுக்கல், தேனி, கள்ளக்குறிச்சி, நீலகிரி, சேலம் மாவட்டங்களில் 500 ஏக்கரில் ஊக்குவிக்க ரூ.69 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும்.
🌳 ரூ. 5 கோடியில், புதிய பலா ரகங்களை பரவலாக்கவும், பலாவில் ஊடுபயிர் சாகுபடியை மேற்கொள்ளவும், பலா மதிப்புக் கூட்டுதலுக்கான பயிற்சி வழங்கப்படும்.
🌳 பனை மரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், பனை சார்ந்த தொழில்களை ஊக்குவிக்க ரூ.1.65 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
🌳 முந்திரியின் பரப்பு, உற்பத்தியை அதிகரிக்கவும், முந்திரி சார்ந்த தொழில் நிறுவனங்களுக்கு ஊக்கமளிக்கவும், முந்திரி தொழில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் நலனைப் பாதுகாக்கவும் தமிழ்நாடு முந்திரி வாரியம் ரூ.10 கோடியில் அமைக்கப்படும்.
🌳 சுவைதாளிதப் பயிர்களின் சாகுபடியை ஊக்குவிக்க ராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர், சிவகங்களை மாவட்டங்களில் 2,500 ஏக்கரில் சீமைக்கருவேலை மரங்களை அகற்றி மிளகாய் சாகுபடியை மேற்கொள்ள ரூ.11.74 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்
🌳 ரூ.1 கோடியில் உதிரிவகை ரோஜா மலர்களின் சாகுபடி 500 ஏக்கரில் மேற்கொள்ள நறுனண ரோஜாவுக்கான சிறப்புத் திட்டம் உருவாக்கப்படும்.
🌳 ரூ.1.60 கோடியில் பாரம்பரிய மல்லிகை சாகுடியை அதிகரிக்க மல்லிகைக்கான சிறப்புத் திட்டம் உருவாக்கப்படும்.
🌳 விவசாயிகளின் நிலையான வருமானம் ஈட்டும் வகையில் மலர்கள் சாகுபடியை ஊக்குவிக்க ரூ.8.51 கோடி ஒதுக்கீடு
🌳 வெங்காயத்தின் விளைச்சல் குறையும் காலங்களில் சந்தைக்கு நிலையான வரத்தினை உறுதிப்படுத்திடும் பொருட்டு வெங்காய சேமிப்புக்கூடங்கள் ரூ.18 கோடியில் அமைக்கப்படும்.
🌳 ரூ.2.4 கோடியில் பாரம்பரிய காய்கறி ரகங்களின் சாகுபடியை 2,500 ஏக்கரில் மேற்கொள்ளப்படும்.
🌳 ரூ.1,168 கோடியில் நீர் ஆதாரத்தை திறம்பட பயன்படுத்துவதற்காக, மூன்று லட்சம் ஏக்கர் பரப்பில் நுன்னீர்ப் பாசனம் திட்டம் செயல்படுத்தப்படும்
🌳 கோடைகாலங்களில் சாகுபடிக் குறைவால் ஏற்படும் காய்கறிகளின் விலை உயர்வைக் கட்டுப்படுத்திடவும், விவசாயிகளுக்கு உரிய விலை கிடைத்திடவும் முக்கிய காய்கறிகளை ஏப்ரல், மே மாதங்களில் சாகுபடி செய்திட ரூ.10.50 கோடி ஒதுக்கீடு
🌳 தென்னை பரப்பு விரிவாக்கம், ஊடுபயிர் சாகுபடி, மறுநடவு மற்றும் புத்தாக்கம், செயல்விளக்கத்திடல், ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளுக்காக ரூ.35.26 கோடி ஒதுக்கீடு
🌳 மக்களின் ஊட்டச்சத்து தேவையை உறுதி செய்வதுடன் விவசாயிகளின் வருமானத்தை உயர்த்திட ரூ.125 கோடி ஒதுக்கீட்டில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கங்கள் உருவாக்கப்படும்
🌳 தமிழ்நாட்டில் உள்ள 2338 கிராம ஊராட்சிகளில் “கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம்” ரூ.269.50 கோடி ஒதுக்கீடு
🌳 உயிர்ம வேளாண்மையில் சிறந்து விளங்கும் 3 விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருது வழங்கப்படும்
🌳 பட்டியல், பழங்குடியின வகுப்பைச் சார்ந்த சிறு, குறு விவசாயிகளின் பொருளாதாரத் சுமையினைக் குறைக்கும் திட்டத்துக்கு ரூ.21 கோடி ஒதுக்கீடு.
🌳 இயற்கை வேளாண்மையைப் பரவலாக்கம் செய்திட இயற்கை வேளாண்மைத் திட்டங்கள் உருவாக்கப்டும்.
🌳 உயிர்ம விவசாயிகளுக்கு இலவச உயிர்ம வாய்ப்புச் சான்றிதழ் வழங்கப்படும்.
🌳 உயிர்ம விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும்
🌳 உயிர்ம விளைபொருட்களில் எஞ்சிய நச்சு மதிப்பீடு பரிசோதனைக் கட்டணத்துக்கு விவசாயிகளுக்கு முழு மானியம் வழங்கப்படும்.
🌳 ரூ.52.44 கோடியில் சிறுதானியப் பயிர்களின் பரப்பு, உற்பத்தி, உற்பத்தித் திறனை அதிகரிக்க தமிழ்நாடு சிறுதானிய இயக்கம் தொடங்கப்படும்.
🌳 ரூ.108.6 கோடி ஒதுக்கீட்டில் உணவு எண்ணெய்த் தேவையில் தன்னிறைவு அடைய எண்ணெய் வித்துகள் இயக்கம் தொடங்கப்படும்.
🌳 ரூ.40.27 கோடியில் மக்காச்சோள சாகுபடிப் பரப்பு, உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறனை அதிகாிக்க “மக்காச்சோள உற்பத்தி மேம்பாட்டுத் திட்டம்” தொடங்கப்படும்.
🌳 கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்க ரூ.297 கோடி ஒதுக்கீடு
🌳>தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மூலம் விதைகள், பிற இடுபொருட்கள் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்படும்.
🌳 100 முன்னோடி விவசாயிகளை நெல் உற்பத்தித்திறனில் சாதனை அடைந்துள்ள ஜப்பான், சீனா, வியட்நாம் ஆகிய நாடுகளுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்.
🌳 இயற்கை சீற்றங்களால் ஏற்படும் வருவாய் இழப்புக்கு ரூ.841 கோடியில் பயிர் காப்பீட்டுக்கு ஒதுக்கப்படும்.
🌳 பருத்தியின் உற்பத்தியை அதிகரித்திட “பருத்தி உற்பத்திப் பெருக்குத் திட்டம்” உருவாக்கப்படும்.
🌳 விவசாய உற்பத்தியாளர் நிறுவனங்கள் மூலம் 3,000 மெட்ரிக் டன் விதைகள் சுத்திகரிக்கப்பட்டுக் கொள்முதல் செய்யப்படும்.
🌳 ரூ.42 கோடி கோடியில் 1,000 உழவர் நல சேவை மையங்கள் அமைக்கப்படும்.
🌳 பசுமைத் தமிழ்நாட்டை உருவாக்க “தமிழ்நாடு வேளாண்காடுகள் கொள்கை” உருவாக்கப்படும்.
🌳 டெல்டா அல்லாத 29 மாவட்டங்களில் நெல் சாகுபடி அதிகரிக்க சிறப்பு தொகுப்பு திட்டம் உருவாக்கப்படும்
🌳 மானாவாரி நிலங்களில் 3 லட்சம் ஹெக்டேரில் கோடை உழவு செய்ய ஹெக்டேருக்கு ரூ.2,000 மானியம் வழங்கப்படும்.
🌳 மலைப்பகுதி விவசாயிகள் முன்னேற்றத்துக்காக சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும்.
🌳 நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கு விபத்து மரண இழப்பீடு, இறுதிச் சடங்கு செலவு தொகைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.
🌳 2023-24ல் 147 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
🌳 தமிழ்நாட்டில் சாகுபடி பரப்பு 151 லட்சம் ஹெக்டேராக உயர்ந்துள்ளது.
🌳 57,000 விவசாயிகளுக்கு ரூ.510 கோடியில் மானிய விலையில் வேளாண் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
🌳 கடந்த நிதியாண்டில் 172 ஒழுங்குமுறை கூடங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன.
🌳 விவசாயிகளுக்கு 1.81 லட்சம் பாசன மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
🌳 தமிழ்நாட்டில் 16.3 லட்சம் ஹெக்டேரில் தோட்டக்கலை பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன.
நிலவளம் ரெங்கராஜன்