ஐஐடி மெட்ராஸ் புத்தாக்க மையத்தின் ‘திறந்தவெளி அரங்கு-2025!

ஐஐடி மெட்ராஸ் புத்தாக்க மையத்தின் ‘திறந்தவெளி அரங்கு-2025!

சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழக (ஐஐடி மெட்ராஸ்), புத்தாக்க மையத்தின் திறந்தவெளி அரங்கு-2025 நிகழ்வு இக்கல்வி நிறுவன வளாகத்தில் இன்று (15 மார்ச் 2025) நடைபெற்றது. இதில், 26 குழுக்களைச் சேர்ந்த ஏறத்தாழ 1,000 மாணவ-மாணவிகள் உருவாக்கிய 60 அதிநவீன தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன.

இந்தியாவிலேயே மிகப்பெரிய அளவில் மாணவர்களால் நடத்தப்படும் கண்டுபிடிப்பு ஆய்வகமான, புத்தாக்க மையத்தில் பல்வேறு தொழில்நுட்பக் களங்களை உள்ளடக்கிய 14 கிளப்புகள், தேசிய – சர்வதேச நிகழ்வுகளில் விறுவிறுப்புடன் பங்கேற்கும் போட்டிக்கான 8 அணிகள் உள்ளன. ஆண்டுதோறும் நடத்தப்படும் புத்தாக்க மைய திறந்த வெளி அரங்கு நிகழ்வில், மாணவர்களால் வடிவமைக்கப்பட்டு கட்டமைக்கப்பட்ட தயாரிப்புகள் இடம்பெறுகின்றன. திட்டங்கள் தெரிவுநிலையைப் பெறுவதற்கும் தொழில்துறை நிறுவனங்கள் மற்றும் முன்னாள் மாணவர்களிடம் இருந்து ஆதரவைப் பெறுவதற்கும் தனித்துவமான தளத்தை இந்த நிகழ்வு வழங்குகிறது.

திறந்தவெளி அரங்கு-2025-ல் பல்வேறு தனித்துவமான தயாரிப்புகளில் சில:

ஹரியானா மாநிலம் சோனிபட்டில் உள்ள ஓ.பி.ஜிண்டால் குளோபல் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்தியாவின் முதல் அரசியலமைப்பு அருங் காட்சியகத்தில், பார்வையாளர்களுக்கு உதவுவதற்காக வடிவமைக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவில் இயங்கும் மனித உருவமான ‘S.A.M.V.I.D’

துல்லியமான மயக்க மருந்தின் அளவை உறுதிசெய்யும் ‘சூப்பர் சிரிஞ்ச்’

பொருட்களை எடுத்துச் செல்வதற்காகவும், விநியோகிப்பதற்காகவும் வடிவமைக்கப்பட்ட ஒருங்கிணைந்த டிரோன்களின் வரிசையான ‘டிரோன் ஸ்வர்ம்’ ஆகியவையும் இடம் பெற்றுள்ளன.

இந்த கண்டுபிடிப்புகளை சந்தைக்கு எடுத்துச் செல்ல உதவிடுமாறு தொழில்துறையினருக்கும், முன்னாள் மாணவர்களுக்கும் அழைப்பு விடுத்து ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி கூறுகையில், “ஐஐடிஎம்-மின் புத்தாக்க மையம், கருவியாக்கம் மற்றும் மின்சார சேவைகள் துறையின் மையமாக விளங்குவதுடன் மாணவர் சமூகத்தினரிடையே கட்டமைப்பை வளர்த்துள்ளது. எங்கள் இளநிலை பட்டதாரிகள் மற்றும் இளநிலை பட்டப்படிப்பு மாணவர்களில் பெரும்பாலோர் புத்தாக்க மையம் மற்றும் தொடர்புடைய செயல்பாடுகளில் பங்கேற்றுள்ளனர். தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் புத்தாக்க மைய அணிகள் சிறப்பான செயல்திறனைக் காட்டியுள்ளன. அதுமட்டுமின்றி புதுமையான கண்டுபிடிப்புகளை வெளியிட்டு, அறிவுசார் சொத்துரிமை தளத்தையும் மேம்படுத்தியிருப்பதை மகிழ்ச்சியோடு குறிப்பிட விரும்புகிறேன்” எனக் குறிப்பிட்டார்.

ஐஐடி மெட்ராஸ் டீன் (மாணவர்கள்) பேராசிரியர் சத்தியநாராயண என். கும்மாடி கூறும்போது, “சிஎஃப்ஐ (புத்தாக்க மையம்) என்பது புதுமை, படைப்பாற்றல் ஆகியவற்றின் வழிகாட்டி அமைப்பாக விளங்குகிறது. நடப்பாண்டில் திறந்தவெளி அரங்கு நிகழ்வில் தங்களின் கண்டுபிடிப்புகளை வெளிப்படுத்த 1000 மாணவ-மாணவிகளை உள்ளடக்கிய 60-க்கும் மேற்பட்ட திட்டங்கள் எங்களிடம் இருந்தன. இதில் முக்கிய அம்சம் என்னவெனில், கண்டுபிடிப்புகள் அடிப்படையில் இந்தாண்டு 15 காப்புரிமைகளுக்கு விண்ணப்பித்திருக்கிறோம். இதில் 3 வலுவான ஸ்டார்ட்அப்களும் அடங்கும். அறிவுசார் சொத்துரிமைகளை அதிகளவில் பாதுகாப்பதிலும், சிந்தனைகளை தயாரிப்புகளாக மாற்றுவதிலும் சிஎஃப்ஐ குழுவினர் இந்தாண்டு சரியான பாதையில் செல்கின்றனர். இதன் மூலம் ஐஐடி மெட்ராஸ் விரைவில் ஸ்டார்ட் அப் சதம் இலக்கை எட்டுவது உறுதி” என்றார்.

மாணவர் என்ற முறையில் மிகப் பெரிய நிகழ்வுக்காக பணியாற்றிய அனுபவங்களை சிஃப்ஐ- ஐஐடி மெட்ராஸ் மாணவர் நிர்வாகத் தலைவர் ஆர்.வி.மாதவநம்பி பகிர்ந்து கொண்டார்.

error: Content is protected !!