உலக சுற்றுச்சூழல் தினம் 2026: இயற்கையால் ஈர்க்கப்பட்டு நமது எதிர்காலத்தைக் காப்போம்!
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5 ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. “சுற்றமும் சூழலும்” என்றால், நம்மைச் சுற்றியிருக்கும் குடும்பமும், சொந்த பந்தங்களும், நாம் ஆசையாக வாங்கிச் சேர்த்த வீடு, வாகனம், சொத்துக்கள் மட்டும்தான் என்று நம்மில் பலர் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், உண்மையில் இவை அனைத்தும் இயற்கையின் பிரம்மாண்ட அமைப்பில் ஒரு சிறு துளி மட்டுமே. மனிதன் பூமியில் உயிர்வாழ்வதற்கு ஆதாரமாக விளங்கும் மண், மரம், செடி-கொடிகள், காற்று, நீர், ஆகாயம் ஆகிய பஞ்சபூதங்களின் கூட்டுத்தொகைதான் உண்மையான சுற்றுச்சூழல். இதை உணராமல், இந்த பூமிக்கும் நமக்கும் எந்தத் தொடர்பும் இல்லாதது போல நாம் வாழ்ந்து வருகிறோம். வளிமண்டலத்திலிருந்து நம் உடலுக்குள் செல்லும் பிராணவாயுவை (ஆக்ஸிஜன்) வெறும் சில விநாடிகள் நாசித்துவாரத்தை மூடித் தடுத்துப் பார்த்தால் மட்டுமே, இந்த இயற்கையின் மகத்துவம் நமக்குத் புரியவரும்.
ஐந்திணைகளும் சுற்றுச்சூழல் அறிவியலும்: நம் முன்னோர்களின் நெறி
சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது நமக்கு ஏதோ நேற்று வந்த நவீனக் கோட்பாடு அல்ல. நம் தமிழ் முன்னோர்கள் சுற்றுச்சூழல் குறித்த மிக ஆழமான அறிவையும், வாழ்வியல் விழிப்புணர்வையும் கொண்டிருந்தனர் என்பதற்கு நம் சங்க இலக்கியங்கள் மிகச்சிறந்த சான்றுகளாகும்.

நிலத்தை அதன் தன்மைக்கேற்ப குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்து திணைகளாகப் பிரித்தனர். அங்கு வாழும் மக்களுக்கு ஏதுவான தொழில்கள், கலாச்சாரம், வழிபாட்டு முறைகளை வகுத்தனர். மலையும் மலை சார்ந்த இடமுமான குறிஞ்சியில் மலையையே கடவுளாகவும், கடலும் கடல் சார்ந்த இடமுமான நெய்தலில் கடலையே வாழ்வாதாரத் தேவதையாகவும் வழிபட்டனர். நிலத்தையும், நீரையும், காற்றையும் தங்களின் வாழ்க்கையோடு பிணைத்து, உயரிய அங்கமாகக் கருதி வழிபட்டதால், இயற்கையை மாசுபடுத்தக் கூடாது என்ற எண்ணம் அன்றைய மனிதர்களின் மனதில் இயல்பிலேயே ஊறியிருந்தது.
வணிகமயமாதலும் மக்கள் தொகை பெருக்கமும்: பேராபத்தின் தொடக்கம்
இன்றைய நவீன மனிதனோ இயற்கையின் கொடைகளைத் தன் சுயநலத்திற்காக வெறும் வணிகப் பொருளாகப் பார்க்கத் தொடங்கிவிட்டான். நிலமும் நீரும் இன்று முற்றிலும் கார்ப்பரேட் மயமாகிவிட்டன. நாம் சுவாசிக்கும் காற்றும் கூடிய விரைவில் கடைத்தெருக்களில் சிலிண்டர்களில் அடைக்கப்பட்டு விற்பனைக்கு வந்துவிடுமோ என்ற அச்சம் இன்று நிஜமாகிக் கொண்டிருக்கிறது.
இந்த நிலைக்கு மிக முக்கியக் காரணம் ‘மக்கள் தொகை பெருக்கம்’ தான். நம் நாடு சுதந்திரம் பெற்ற போது சுமார் 33 கோடியாக இருந்த மக்கள் தொகை, இன்று மூன்று மடங்கிற்கும் மேலாகப் பெருகிவிட்டது. இதே நிலை நீடித்தால் இன்னும் சில ஆண்டுகளில் நிலம், நீர், காற்று மட்டுமன்றி வாழும் ஆகாயமும் நமக்குக் பற்றாக்குறையாகிவிடும். மக்கள் தொகைக்கு ஏற்ப தொழிற்சாலைகளும், வாகனங்களின் எண்ணிக்கையும் தாறுமாறாக உயர்ந்துவிட்டன. இவற்றிலிருந்து வெளியேறும் நச்சுக் கழிவுகள் வளிமண்டலத்திலும், நிலத்தடி நீரிலும், ஆறுகளிலும் கலந்து ஒட்டுமொத்தச் சூழலையும் நரகமாக்கி வருகின்றன.
கார்பன் கால்தடத்தைக் குறைப்போம்: செய்ய வேண்டியவை என்ன?
இந்தச் சூழல் பேரழிவிலிருந்து நம்மை நாமே காத்துக் கொள்ள, நாம் உடனடியாகச் செய்ய வேண்டிய மற்றும் அன்றாட வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய வழிமுறைகள் இதோ:
1. மரக்கன்றுகளை நடுதல்
ஒவ்வொரு மனிதனும் வளிமண்டலத்தில் குறிப்பிட்ட அளவு கார்பனை உமிழ்கிறான். நாம் விட்டுச் செல்லும் இந்த ‘கார்பன் கால்தடத்தை’ (Carbon Footprint) ஈடுசெய்ய, நாம் ஒவ்வொருவரும் குறைந்தது 5 மரக்கன்றுகளாவது நட்டு வளர்க்க வேண்டும். ஒரு நன்கு வளர்ச்சியடைந்த மரமானது, நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பத்திற்குத் தேவையான 260 பவுண்ட் அளவு ஆக்ஸிஜனை உற்பத்தி செய்கிறது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
2. பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துதல்
இன்று ஆளுக்கொரு மகிழ்வுந்து (கார்), இருசக்கர வாகனம் எனச் சாலைகளில் புகையைக் கக்குகிறோம். 100 பேர் தனித்தனி வாகனங்களில் செல்வதற்குப் பதிலாக, அனைவரும் ஒரே பேருந்திலோ அல்லது பொதுப் போக்குவரத்திலோ பயணம் செய்தால், கூடுதலாக 99 வாகனங்கள் புகை கக்குவதைத் தடுக்க முடியும். குறுகிய தூரப் பயணங்களுக்கு மிதிவண்டிகளைப் பயன்படுத்துவது சுற்றுப்புறச் சூழலுக்கும் நல்லது, நம் உடலுக்கும் ஆரோக்கியம் தரும்.
3. காகிதப் பயன்பாட்டைக் குறைத்தல் மற்றும் மறுசுழற்சி
காடுகள் அழிக்கப்படுவதற்கு காகிதப் பயன்பாடு ஒரு முக்கியக் காரணம். செய்தித்தாள் ஒன்றை 9 முறை மறுசுழற்சி (Recycle) செய்ய முடியும். 1 மீட்டர் உயரத்திற்கு அடுக்கப்பட்டுள்ள பழைய செய்தித்தாள்களை மறுசுழற்சி செய்வதன் மூலம், 7 மீட்டர் உயரமுள்ள ஒரு பெரிய மரம் வெட்டப்படுவதைத் தவிர்க்கலாம். அலுவலகங்களிலும் வீடுகளிலும் காகிதங்களின் இரு பக்கங்களையும் பயன்படுத்துவதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.

4. உலோகங்கள் மற்றும் கண்ணாடிகளைச் சேகரித்தல்
அலுமினியம் எளிதில் மறுசுழற்சி செய்யக்கூடிய ஒரு உலோகம். சிகரெட் பாக்கெட்டுகளில் உள்ள அலுமினியத் தாள்கள், பாட்டில் மூடிகள், மாத்திரை அட்டைகள், பழைய பாத்திரங்களை வீணாக்காமல் சேகரித்து மறுசுழற்சிக்கு அனுப்ப வேண்டும். மண்ணோடு மக்க குறைந்தது 100 ஆண்டுகள் எடுத்துக்கொள்ளும் கண்ணாடிகளையும் முறையாக மறுபயன்பாட்டிற்கு மாற்ற வேண்டும்.
5. இயற்கை விவசாயத்திற்கு மாறுதல்
மண்ணைக் கெடுக்கும் இரசாயன உரங்களைத் தவிர்த்துவிட்டு, கால்நடை எரு, பஞ்சகாவியம் போன்ற இயற்கை ஊக்கிகளைப் பயன்படுத்தி இயற்கை முறையில் பயிர் சாகுபடி செய்ய வேண்டும். இது மண்வளத்தை மீட்டெடுப்பதுடன் மனித ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும்.
நாம் தவிர்க்க வேண்டிய நச்சுப் பழக்கங்கள்
சுற்றுச்சூழலை மேம்படுத்த நாம் சில விஷயங்களை நம் வாழ்விலிருந்து முற்றிலுமாகத் தூக்கியெறிய வேண்டும்:
-
நெகிழி (பிளாஸ்டிக்) பயன்பாடு: பிளாஸ்டிக் என்பது மண்ணில் மக்கவே முடியாத ஒரு சாபம். பொருட்களை வாங்கக் கடைக்குச் செல்லும்போது வீட்டிலிருந்தே துணிப்பைகளை எடுத்துச் செல்வதை வழக்கமாக்க வேண்டும். பிளாஸ்டிக் பொருட்களை அங்கும் இங்கும் தூக்கி வீசுவதைத் தவிர்க்க வேண்டும்.
-
புகைபிடித்தல்: புகைபிடித்தல் என்பது புகைப்பவரின் உடலைத் தொல்லைக்குள்ளாக்குவது மட்டுமல்லாமல், வளிமண்டலக் காற்றையும் நச்சுப்படுத்துகிறது. அமெரிக்காவில் புகைபிடிக்காத சுமார் 4,000 பேர், பிறர் விடும் புகையைச் சுவாசிப்பதால் (Passive Smoking) ஆண்டுதோறும் புற்றுநோய் வந்து இறக்கிறார்கள் என்ற அதிர்ச்சித் தகவல் உள்ளது.
உலக சுற்றுச்சூழல் தினம் 2026 கருப்பொருள் (Theme)
இந்த ஆண்டிற்கான உலக சுற்றுச்சூழல் தினத்தின் அதிகாரப்பூர்வ மையக்கருத்து:
“Inspired by Nature. For Climate. For Our Future.” (இயற்கையால் ஈர்க்கப்பட்டு. காலநிலைக்காக. நமது எதிர்காலத்திற்காக.)
இயற்கையின் விதிகளுக்குக் கீழ்ப்படிந்து, அதன் அமைப்பிலிருந்து நாம் பாடங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும். நம்மை மாற்றிக்கொள்ளும் ஒவ்வொரு சிறு முயற்சியும், இந்த பூமியின் காலநிலையைச் சீராக்கி நம் அடுத்த தலைமுறையின் எதிர்காலத்தைப் பத்திரப்படுத்தும். “பூமி நமக்குச் சொந்தமானதல்ல, நாம் தான் பூமிக்குச் சொந்தமானவர்கள்” என்ற உண்மையை உணர்ந்து இயற்கையைக் காப்போம்.
நிலவளம் ரெங்கராஜன்


