ட்ரம்ப் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் – 54 பெண் எம்பிக்கள் போர்க் கொடி!

ட்ரம்ப் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் – 54 பெண் எம்பிக்கள் போர்க் கொடி!

அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப்  கடந்த ஜனவரி மாதம்  பதவியேற்றார். அதே சமயம் அதிபர் தேர்தலில் அவர் போட்டியிட்டபோதே, அவர் மீது பல்வேறு பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனிடையே, அவருக்கு எதிராக 16 பெண்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாலியல் குற்றச்சாட்டுகளை வெளிப்படையாக தெரிவித்தனர். இந்த விவகாரம் அமெரிக்காவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால், எந்த விசாரணை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.

இந்நிலையில், இந்த விவகாரத்தில் வெளிப்படையாக விசாரணை நடத்தக் கோரியும், அதிபர் ட்ரம்ப் பதவி விலகுமாறும் வலியுறுத்தி அந்நாட்டு பெண் எம்பிக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இதுதொடர்பாக அமெரிக்க நாடாளுமன்றத்தின் கண்காணிப்பு மற்றும் அரசு சீர்திருத்தங்கள் குழுத் தலைவருக்கும் அவர்கள் கடிதம் எழுதியுள்ளனர். இந்தக் கடிதத்தில், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த 54 பெண் எம்பிக்கள் கையெழுத்திட்டுள்ள னர்.

இதுகுறித்து ஜனநாயகக் கட்சியின் எம்.பி. கிறிஸ்டன் கில்லிபிரான்ட் கூறியதாவது: பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு பொறுப்பேற்று அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உடனடியாக பதவி விலக வேண்டும். இந்த விவகாரம் குறித்து அமெரிக்க நாடாளுமன்றம் சார்பில் வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றார். மற்றொரு பெண் எம்பியான பிரெண்டா லாரன்ஸ் கூறும்போது, “குற்றம்சாட்டுபவர் அல்லது குற்றம்சாட்டப்பட்டவர் யாராக இருந்தாலும் அவர்கள் தரப்பு நியாயங்கள் கேட்கப்பட வேண்டும். அவர்களுக்கு நீதி கிடைக்கப்பெற வேண்டும்” என்றார்.

அதிபர் மாளிகை விளக்கம்அமெரிக்க அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் சாரா சாண்டர்ஸ், வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

அதிபர் பதவிக்கு ட்ரம்ப் போட்டியிடும் சமயங்களிலேயே ஏராளமான பாலியல் குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டன. மக்கள் அதனை ஏற்கவில்லை. ட்ரம்புக்கு மக்கள் வாக்களித்து வெற்றி பெறச் செய்துள்ளனர். இந்த குற்றச்சாட்டுகளுக்கு மக்கள் மன்றம் மூலம் பதிலளித்துவிட்டோம். தற்போதும், அந்தப் பாதையையே முன்னெடுப்போம் என்று அவர் தெரிவித்தார்.

error: Content is protected !!