யாருக்கும் தெரியாத வகையில் கருக்கலைப்பு செய்யும் இந்தியப் பெண்கள்`!

யாருக்கும் தெரியாத வகையில் கருக்கலைப்பு செய்யும் இந்தியப் பெண்கள்`!

1971ஆம் ஆண்டு மருத்துவ முறையில் கருக்கலைப்புச் சட்டம் இயற்றப்பட்டதில் இருந்து, இந்தியாவில் கருக்கலைப்பு செய்வது என்பது சட்டப்படியான செயலாக்கப்பட்டது. கருக்கலைப்பை பாதுகாப்பான செயலாக மாற்றவும், கருக்கலைப்பு செய்ய விரும்புபவர் மீது குற்றம் சுமத்தப்படாமல் தடுக்கவும், சட்டவிரோதமான கருக்கலைப்பு முறைகளைப் பயன்படுத்துவதால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்காகவும் இந்தச் சட்டம் இயற்றப்பட்டது. அதன்படி நம் இந்தியாவில், கருவின் வயது இருபது வாரம் வரை இருக்கும் போது மட்டுமே சட்டப்படி கருக்கலைப்பு செய்யலாம். அதற்கும் சில நிபந்தனைகள் உள்ளன. கருவின் வயது 12 வாரங்களுக்குக் குறைவாக இருந்தால், ஒரு மருத்துவரே கருக்கலைப்பைப் பற்றி முடிவெடுக்கலாம், கருவின் வயது 12 வாரங்களுக்கும் அதிகமாக, அதே சமயம் 20 வாரங்களுக்குக் குறைவாக இருந்தால் குறைந்தபட்சம் இரண்டு மருத்துவர்கள் கொண்ட குழுவாகவே பின்வரும் முறையில் முடிவு செய்யலாம்: கர்ப்பம் தொடர்ந்தால், அது அந்தப் பெண்ணுக்கு உடல் அல்லது மன ஆரோக்கியத்திற்குக் கேடு விளைவிக்குமா, அல்லது அது அவரது உயிருக்கு ஆபத்தாகுமா என்பது பற்றி யோசிப்பார்கள் (அல்லது) கர்ப்பம் தொடர்ந்தால், அவரது உடல் அல்லது மன பிரச்சனைகளால் அந்தக் குழந்தைக்கு ஏதேனும் பெரிய பாதிப்பு ஏற்படுமா என்பது பற்றி யோசிப்பார்கள் தாயின் உயிரைக் காப்பாற்றுவதற்கு உடனடியாக கருக்கலைப்பு செய்தாக வேண்டும் என்பது போன்ற அவசர சூழ்நிலைகளில், கருவின் வயது 20 வாரத்திற்குள் இருக்கும்பட்சத்தில் ஒரே மருத்துவர் கருக்கலைப்பு செய்ய முடிவெடுக்கலாம். சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில் கருக்கலைப்பு செய்வது பற்றி மருத்துவர்கள் யோசிக்கலாம் என்பதெல்லாம் தனித் தகவல்.

தற்போது வெளியான ஒரு ரிப்போர்ட் படி கடந்த 2015ஆம் ஆண்டில், மருத்துவமனைக்குச் செல்லாமல் வீட்டில் இருந்தபடியே மருந்து, மாத்திரை மூலம் 1 கோடியே 27 லட்சம் பேர் கருக்கலைப்பு செய்துள்ளதாக ஒரு அதிர்ச்சி தகவல் ஆய்வில் தெரியவந்துள்ளதுதான் ஹாட் டாபிக். ஆம்.. டெல்லியில் இயங்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பு கவுன்சில், நியூயார்க்கைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் கட்மாசர் நிறுவனம், கருக்கலைப்பு மாத்திரை நிறுவனம் மற்றும் மேலும் சில தனியார் நிறுவனங்கள் இணைந்து, இந்தியாவில் கர்ப்பிணிகள் குறித்தும், கருக்கலைப்பு குறித்தும் ஆய்வுகளை மேற்கொண்டனர்.

இந்த ஆய்வில் 2015ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி நாட்டில் 1 கோடியே 56 லட்சம் கர்ப்பிணி பெண்கள் கருக்கலைப்பு செய்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. அவர்களில் 22 லட்சம் பேர் மட்டுமே மருத்துவமனைக்குச் சென்று கருக்கலைப்பு செய்துள்ளனர். அதே நேரத்தில் மருத்துவமனைக்குச் செல்லாமல் வீட்டில் இருந்தபடியே மருந்து, மாத்திரை மூலம் 1 கோடியே 27 லட்சம் பேர் கருக்கலைப்பு செய்துள்ளனர். 80 ஆயிரம் பேர் பாதுகாப்பு இல்லாத வகையில் நாட்டு மருத்துவம் மூலம் கருக்கலைப்பில் ஈடுபட்டுள்ளனர் என்று இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

யாருக்கும் தெரியாத வகையில் கருக்கலைப்பு செய்வதையே பல கர்ப்பிணிப் பெண்கள் விரும்புகின்றனர். அதற்கென வீரியம் மிகுந்த மருந்து மாத்திரைகள் அதிக அளவில் விற்பனை செய்யப்படுகின்றன. இதனால் கருக்கலைப்பு அதிக அளவில் நடக்கிறது. மும்பை, சென்னை போன்ற நகரங்களில் அரசு மருத்துவமனைக்குச் சென்று பலர் கருக்கலைப்பு செய்கின்றனர். இந்தியாவைப் பொறுத்தவரை, கருத்தரிக்கும் 1000 பெண்களில் 47 பேர் கருக்கலைப்பு செய்கின்றனர். அதே சமயம் கருக்கலைப்பு பாகிஸ்தானில் 50, நேபாளத்தில் 42, வங்க தேசத்தில் 39 என்பதாக இருக்கிறது என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது குறிப்பிடத்தக்கது..

Related Posts