அம்மா நாங்க ட்ராவல் செய்யும் போது பப்ளிக் டாய்லெட் கட்டி நீட்டா யூஸ் பண்ண வழி பண்ணுங்கம்மா!
பொது மருத்துவரும், குழந்தைகள் மருத்துவரும் இணைந்து பார்க்கும் க்ளினிக் ஒன்றில் காலையில் காத்துக் கொண்டிருந்தேன். தொடர்மழை காரணமாக க்ளினிக்கில் நல்ல கூட்டம்… ஐம்பதுக்கும் மேல் குழந்தைகளும், பெற்றோர்களும் உட்கார்ந்திருந்தார் கள். அப்பாயின்மெண்ட் இல்லாமல் டோக்கன் முறையில் காத்து நின்று மருத்துவரை பார்க்க வேண்டும்.. ஒரு சிறுமி, ‘உச்சா வருகிறது’ என சிடுசிடுக்க ஆரம்பித்தாள். அந்த க்ளினிக்கில் டாய்லெட் இல்லை. கொஞ்சம் இடைவெளி விட்டு கிட்டத்தட்ட எல்லா சிறுவர்களும் உச்சா, சுச்சூ என ஆரம்பித்தார்கள். சிறுவர்களை மருத்துவமனையின் வெளிசுவரை ஒட்டியே சிறுநீர் கழிக்க பெற்றோர் சொல்ல, அவர்களும் அதையே செய்தார்கள். சில சிறுமிகளும் அவ்வாறே.

பேருந்துகள் விரைந்து கொண்டிருக்கும் நாகர்கோயிலின் முக்கியமான சாலை அது. பல சிறுமிகள் அப்படி சிறுநீர் போக மறுத்தார்கள். ‘’அம்மா பாப்பாக்க்கு முள்ளணும்’’ என ஒரு குட்டிப் பெண் தொடர்ந்து அழுதாள். சுற்றுமுற்றும் பார்த்த அதன் அம்மா, தொடையில் நறுக்கென கிள்ளினாள். அவள் கத்தி அழ, அவளது அப்பா எதிரில் இருக்கும் மெடிக்கல் ஷாப் அழைத்துச் சென்று டெய்ரி மில்க் வாங்கிக் கொடுத்தார். ஒவ்வொரு குழந்தையும் அங்கே குறைந்தது இரண்டு மணிநேரமாவது காத்திருந்து டாக்டரை பார்த்தாக வேண்டும். அந்தக் குழந்தைகளுக்கு கழிவறை தேவைப்படும் என அந்த மருத்துவருக்கு கூட தெரியாதா?
நான் பொது இடங்களில் அதிகம் சண்டையிட்டதும், மன உளைச்சல் அடைந்ததும் கழிவறை பிரச்னைக்கு தான். கடந்த மாதம் சென்னையில் இருந்து நானும், மின்னுவும் நாகர்கோயிலுக்கு ஒரு தனியார் பேருந்தில் கிளம்பினோம். ரயிலில் முன்பதிவு, தட்கல் இரண்டு சீட்டுகளும் வெயிட்டிங் லிஸ்ட்டிலேயே போய் விட்டதால், பேருந்தை பிடிக்க வேண்டியதாயிற்று. பேருந்து என்றதுமே, ‘’அய்யோ பாத்ரூம் போக என்ன பண்றது?’’ என மின்னு திரும்பத் திரும்ப கேட்டுக்கொண்டே இருந்தாள்.
இடதுபுறம் இருக்கையில் ஒரு அப்பாவும், மகளும் இருந்தார்கள். அந்த சிறுமி இனி இரண்டாம் வகுப்பு போகப் போவதாக சொன்னாள். நான் தண்ணீர் பாட்டில் எடுக்க மறந்து போய் அவர்களிடம் இருந்த இரண்டு பாட்டிலில் ஒன்றை கேட்டுப் பெற்றேன். ‘’வெள்ளம் அதிகம் குடிக்கண்டா, வழியில் பாத்ரூம் காணுல்லா’’ என சிரித்துக் கொண்டே மின்னுவிடம் சொன்னார்.
அந்தப் பேருந்து கோயம்பேட்டில் இருந்து ஏழு மணிக்கு கிளம்பியது… ஒன்பது மணி தாண்டியதுமே, ‘’எப்போ பஸ் நிக்கும்?’’ என மின்னு கேட்க ஆரம்பித்தாள். ‘’இப்ப நிக்கும்’’ என சமாதானம் சொல்லியபடியே இருந்தேன். இடதுபுறத்து அப்பா, அடிக்கடி டிரைவர் சீட்டுக்கும் தன் சீட்டுக்குமாய் நடந்து கொண்டிருந்தார். சாப்பிட்டு விட்டு வைந்திருந்த யூஸ் அண்ட் த்ரோ பாக்ஸை அந்தக் குட்டிப் பெண்ணிடம் கொடுத்து, ‘’மூத்திரம் ஒழிச்சோ மக்களே’’ என்றார்.. அந்தக் குட்டிப் பெண் சீட் மேல் அந்த டப்பாவை வைத்து அதன் மேல் சிறுநீர் கழிக்க, டப்பாவை மூடி கோபத்தில் சீட்டுக்கு கீழே தள்ளினார். ‘’நாயிண்ட மக்கள்’’ என இரண்டு, மூன்று முறை திட்டவும் செய்தார். ‘’அச்சா சீட் நனைஞ்சு, எனிக்கு இரிக்கான் வைய’’ என அந்த சிறுமி அழ, பெட்டியில் இருந்து சின்ன போர்வையை எடுத்து சீட்டில் போட்டு அவளை உட்கார வைத்தார்.
எனக்கு இந்த அனுபவம் புதிதே இல்லை. ஐந்து வயது வரை, டயாபர் அணிவித்து பயணம் செய்ய முடிந்தது. அதன்பின் டயபர் அணிவித்தாலும், அவளால் அதில் சிறுநீர் செல்ல முடிவதில்லை. அசவுகரியமாய் உணர்வாள். ஒருமுறை பதினாகு மணிநேர பயணம். நான்குமணி நேரம் தாண்டியதுமே, சுச்சூ என ஆரம்பித்தாள். அது ஏபிடி பேருந்து.. நான் போய் கதவைத் தட்டிக் கொண்டே இருந்தேன்… என்னைப் போலவே இன்னும் சிலரும்.. அந்தப் பேருந்தில் டிரைவரைத் தவிர யாருமே இல்லை… அடக்க முடியாமல், போர்வையில் உச்சா போய்விட்டாள். அவளுக்கு அது அவமானமாகப் போய்விட்டது.. அழுதுகொண்டே இருந்தாள்… அவளை சமாதானப்படுத்தவே முடியவில்லை. அதன்பிறகு பேருந்து பயணம் என்றால் இன்னும் அலற ஆரம்பித்து விட்டாள்.
திரும்பவும் நாகர்கோயில் பயணத்துக்கே வருகிறேன்… ஏழு மணிக்கு கிளம்பிய பேருந்து பத்தரை மணிக்கு சாப்பிடுவதற்காய் விழுப்புரம் அருகே நின்றது… அங்கே இறங்கினால் மோட்டலுக்கு பின்புறம் கும்மிருட்டு. கரண்ட் இல்லை என சொன்னார்கள். ஆங்காங்கே தீப்பொறிகளை வைத்து ஆட்கள் அங்கே நின்று சிகரெட் பிடிக்கிறார்கள் எனப் புரிந்து கொள்ள முடிந்தது. பேருந்தில் ஏறி உட்கார்ந்தால், காலை ஏழரை மணிக்கு வடசேரி வந்துதான் பேருந்து நின்றது. இடையில் இரண்டு முறை நடுரோட்டில் வண்டியை நிறுத்தி விட்டு, பேருந்து ஊழியர்கள் இறங்கி எறினார்கள், சில ஆண்களும்… கடுங் கோடையில் ஒரு சொட்டு தண்ணீர் கூட குடிக்காமல், பதினைந்து மணி நேரமெல்லாம் பாத்ரூம் போகாமல் இருப்பது கொடுமை தெரியுமா?
எத்தனை முறை பேசியும், எழுதியுமாயிற்று இந்த கழிவறை பிரச்னை பற்றி… இந்த ஃபேஸ்புக்கில் முன்பு ஒருதடவை எழுதியபோது, ஒரு பெண்கள் பத்திரிகை ஆசிரியர் இப்படி பதில் எழுதியிருந்தார். ‘’நிலைமை மாறி விட்டது, பெட்ரோல் பல்க்குகளில் டாய்லெட் இருக்கிறதே’’ என.. அது சொந்த வாகனத்தில் சாலையை கடப்பவர்களுக்கு சரி, பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துபவர்களின் கதி?
மூன்று, நான்கு வருடங்களுக்கு முன்பு குமுதத்தில் வேலை செய்தபோது, அங்கு பெண்கள் கழிவறையில் எதோ பிரச்னை என்று, ஒருவாரத்திற்கு அதைப் பூட்டியே வைத்திருந்தார்கள். வேலை பார்த்த எடிட்டோரியல் பெண்கள் மூன்று மாடி இறங்கி அருகே இருக்கும் அபிராமி மாலில் போய் கழிவறை பயன்படுத்தினோம். இந்தக் காரணத்திற்காக நான்கு நாட்கள் விடுமுறை எடுத்தது நினைவிருக்கிறது… சமூகத்திற்கு என்ன தேவை என்று எடுத்து சொல்ல வேண்டியவர்கள் இருக்கும் லட்சணமே இதுதான்…
திருச்சியில் ஒரு தியேட்டரில் படம் பார்க்க சென்றிருந்தோம். திரையரங்கு மூன்றாவது மாடியில் இருந்தது. இடைவேளையில் கழிவறை தேடிச்சென்றால், பெண்கள் கழிவறையை பூட்டுப் போட்டு பூட்டி வைத்திருந்தார்கள். ’’அது ரிப்பேரு, கீழ ஃபேஸ்மெண்ட்ல இருக்கு, அங்க போங்க’ என அலட்சியமாக பதில் சொன்னார் தியேட்டர் ஊழியர். பிள்ளைகளையும் தூக்கிக் கொண்டு பெண்கள் லொக்கு, லொக்கென்று மூன்று மாடி ஏறி இறங்கினார்கள். ஏபிடி பஸ் பிரச்னையில் இருந்து இந்த தியேட்டர் பிரச்னை வரை ஒவ்வொன்றுக்கும் நிர்வாகத்தில் புகார் தந்திருக்கிறேன்.. ஒரு ஆணியையும் கழட்ட முடிந்ததில்லை.
ஆறு மாதங்கள் இருக்கும்.. தஞ்சை பெரிய கோயில் சென்றிருந்தோம். வெளியே வந்து கழிவறை தேடினால், ஐந்து ரூபாய் வாங்கிக் கொண்டு ஆளுக்கொரு டார்ச் லைட் கொடுத்தார். புரியாமல் லைட் அடித்துக் கொண்டே தேடி சென்றால் இருட்டில் திறந்த வெளியில் சிறுநீர் போக வேண்டுமாம். சோழப் பேரரசின் பெருமையை உலகுக்கே வெளிச்சம் போட்டுக் காட்டுவதெல்லாம் சரி, வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கும் இப்படித்தான் டார்ச் லைட் தருவார்கள் போல…
எத்தனை அனுபவங்களைத் தான் சொல்ல…. ஒரு கண்காட்சியில், பெண்கள் கழிவறை கதவுக்கு கீழே கால்வாசி திறந்தே இருந்தது. ஆண்களைப் போல பெண்களும் நின்றுகொண்டு சிறுநீர் போவார்கள் என கட்டியவர் நினைத்து விட்டார் போல… திருவிழாக்களில், பொதுக் கூட்டங்களில் தற்காலிகமாக அமைக்கப்படும் மொபைல் கழிவறைகளில், யூரினல் மட்டும் என எழுதி விட்டு அடுத்த வரியே ஆண்கள் மட்டும் என எழுதி வைக்கிறார்கள்…
மால்களில் கட்டப்படும் டிரை டாய்லெட்டுகளை குழந்தைகள் பயன்படுத்த முடியாது என யாராவது உணர்வார்களா, அப்பாக்களோடு வரும் சிறுமிகள் ஆண்கள் கழிவறை பேசின்களில் சிறுநீர் கழிக்க முடியாது என்பதை உணர்வதற்கு எல்லாம் எங்குபோய் படிக்க வேண்டும் சாமி… தவிர பெண் காவலர்கள், சாலைப் பணியாளர்கள் என எழுத ஆரம்பித்தால்….திரும்பத் திரும்ப நீளமாக இதையே எழுதுவதற்கு சலிப்பாக இருக்கிறது… நாளை யார் வேண்டுமானாலும் ஆட்சியைப் பிடியுங்கள்.. நாற்காலியில் அமருங்கள்… ஒரே ஒரு அடிப்படை கோரிக்கை… பயணங்களில், பொதுவிடங்களில் கழிவறையை உத்திரவாதப்படுத்துங்கள்… ஒரு குழந்தை சிறுநீர் கழிக்கும் மிக அடிப்படை உரிமைக்காக இரண்டு மணி நேரம் அழ வேண்டியிருப்பதெல்லாம் கொஞ்சமும் மனிதத் தன்மையே இல்லாத செயல்…!


