நட்பு வட்டாரம் விரிவடைந்து கொண்டே போவதும் தொடர்வதும் நம் கையில்தான் இருக்கிறது!

நட்பு வட்டாரம் விரிவடைந்து கொண்டே போவதும் தொடர்வதும் நம் கையில்தான் இருக்கிறது!

சின்ன வயதில் தொடங்கி முதுமை வரை அந்தந்த காலகட்டத்தில் புதுப்புது நட்பு அறிமுகமாகிக்கொகொண்டேதான் இருக்கும் . ஆனால் அந்த நட்பு வட்டாரம் விரிவடைந்து கொண்டே போவதும் தொடர்வதும் நம் கையில்தான் இருக்கிறது. இன்று, கல்வி, வேலை, தொழில், தனிப்பட்ட வாழ்க்கை என அனைத்துமே சிறப்பாக அமைய நெட்வொர்க்கிங் எனப்படும் நட்பு வட்டம் அவசியமாகிறது.

frindsship day aug 7

நண்பர்கள் பல வகை….முணுக்கென்றால் கோபப்படும் ஒரு வகை.எல்லாவற்றையுமே ஜாலியாக எடுத்துக்கொண்டு டென்ஷனே ஆகாத இன்னொரு வகை. தூரத்தில் ரெண்டு நண்பர்கள் சிரித்து பேசிக்கொண்டிருந்தாலே அது என்னைப்பற்றித்தான் என நினைத்து டென்சன் ஆகும் ஒரு வகை. எல்லோரோடும் இயல்பாக ஒத்துப்போகக்கூடிய ஒரு வகை .யாரோடும் எதிலுமே ஒத்துப்போகாத இன்னொரு வகை.நண்பர்களுக்காக கணக்குப்பார்க்காமல் செலவு செய்யும் ஒரு வகை.முடிந்தவரை பத்துப்பைசா பாக்கெட்டிலிருந்து எடுக்காமலே காலத்தை ஓட்டும் இன்னொரு வகை.நண்பர்களுடன் சேர்ந்து சாப்பிட்டவுடன் தன பங்குக்கு எவ்வளவு செலவானது என்று கணக்கு கேட்டு பைசா சுத்தமாக திருப்பி கொடுத்து விடும் மூணாவது வகை.

இந்த பலவகை குணாதிசயங்களுக்கு மத்தியில் அட்ஜஸ்ட் பண்ணி போவதில்தான் வாழ்க்கை சுவாரஸ்யமாக அமைகிறது. நம்ம ஊரைப்பொறுத்தவரை நட்பு வட்டாரத்தை அடிக்கடி நேரில் சந்தித்து பராமரிக்கிற சமூக வசதி ஆண்கள் அளவுக்கு பெண்களுக்கு இருக்கிறதா என்று கேட்டால் இல்லை என்பதுதான் பதில்.தினமும் சேர்ந்து வாக்கிங் போவதில் தொடங்கி,சேர்ந்து தண்ணி அடிப்பது வரை ஆண்களின் நட்பு வட்டாரம் அடிக்கடி சந்திக்க சில இயற்கையான வாய்ப்புகளும் பல செயற்கையான வாய்ப்புகளும் உள்ளன.ஆனால் பெண்களுக்கு இது சாத்தியப்படுவதில்லை.அதுவும் திருமணத்திற்குப் பிந்தைய பெண்களின் நட்பு வட்டாரம் சுத்தமாகவே சுருங்கிவிடுகிறது அல்லது சுருக்கப்படுகிறது.

இது ஒருபுறமிருக்க,நட்பு உணர்ச்சி சார்ந்ததா அறிவு சார்ந்ததா என்று கேட்டால் இரண்டும் சார்ந்ததுதான் என்று சொல்ல வேண்டும்.பல நூறு நண்பர்கள் மத்தியில் ஒரு சிலரை மட்டும் நெருங்கிய நண்பர்கள் என்று சொல்கிறோம்.அவர்களிடம் மனம் விட்டு பேசுகிறோம்.எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்கிறோம்.சொல்லப்போனால் குடும்ப அங்கத்தினர்கள் சார்ந்த மனஸ்தாபங்களைக்கூட இவர்களிடம் பகிர்ந்து கொள்கிறோம்.ஆனால் சமயத்தில் திடீரென்று நெருங்கிய நண்பர்களைக் கூட பிரியும் நிலை சிலருக்கு ஏற்பட்டு விடுகிறது. இது எதனால் ஏற்படுகிறது தெரியுமா?ஒருவர் நமக்கு நெருங்கிய நண்பராவதும் பிறகு பிரிவதும் உணர்ச்சியின் அடிப்படையில் நடக்கிறது.ஆனால் அந்த நட்பு ஆழமாக தொடர்வது அறிவின் அடிப்படையில் நடைபெறுகிறது. இது போன்ற சமயங்களில்தான் நாம் உணர்ச்சியைக்கட்டுப்படுத்தி அறிவை மேலோங்கச் செய்ய வேண்டும்.

பெரும்பாலான பிரிவுகள் கருத்து வேறுபாடு காரணமாகவும் பிடிவாதமான கொள்கைகளாலும் ஈகோவாலும்தான் நடக்கின்றன.இதை கொஞ்சம் அனுபவப்பூர்வமாக பார்ப்போம்.என்னை மதிக்கவில்லை,என் மேல் நம்பிக்கை இல்லை,என்னை தப்பா புரிஞ்சிகிட்டே,நான் ஒண்ணும் அப்படிப்பட்ட ஆள் இல்ல,என் கேரக்டரை தப்பா பேசிட்டே,நான் உனக்கு முக்கியம் இல்லையா,நான் யாருக்காகவும் என்னை மாத்திக்க வேண்டிய அவசியம் இல்லை போன்ற வழக்கமான பத்து விஷயங்களுக்குள் பிரிவுக்கான காரணத்தை அடக்கிவிட முடியும்.இது எல்லாமே உணர்ச்சி சார்ந்தது.அந்த சமயத்தில் நாம் அந்த நண்பரை இழந்திருக்கக்கூடாது என்று பல வருடங்கள் கழித்து உணர்ந்து பயன் இல்லை.ஏனென்றால் கொள்கைகளும் பிடிவாதங்களும் காலச்சூழலில் மாறக்கூடியவை.

நாம் இழந்த நல்ல நண்பர்களால் ஏற்பட்டிருக்க வேண்டிய நன்மைகளும் நல்வழிகாட்டல்களும் இல்லாமல் போனதால் பல நல்ல விஷயங்களை வாழ்க்கையில் இழந்திருப்போம்.இழந்த அந்த காலகட்டம் வாழ்க்கையில் மீண்டும் திரும்பாது.அதே போல பள்ளி ,கல்லூரி ,வேலை ,சொந்த பிசினஸ் என அடுத்தடுத்த நிலைக்கு நாம் உயர்ந்து கொண்டு இருக்கும்போது புதுப்புது நட்பு வட்டாரம் கிடைத்துக்கொண்டே இருக்கும் .அதற்காக அடுத்த நிலைக்குப்போகும்போது முந்தைய நட்பு வட்டாரத்தை மறப்பதோ,உதாசீனப்படுத்துவதோ வாழ்க்கையை வளமாக்காது.

எனவே, இன்றைய இயந்திரத்தனமான வாழ்க்கையில் அவரவர் பிரச்சினையை கவனிக்கவே நேரம் இல்லாத சூழலில் நம் மேல் உண்மையான அக்கறை கொண்ட ஒரு நெருங்கிய நண்பர் கிடைப்பதே அரிது எனும் சூழலில் அந்த நட்பை என்ன விலை கொடுத்தாவது காப்பாற்றிக்கொள்ள வேண்டியது நம் பொறுப்பு.பெரிதாக எதுவும் செய்ய வேண்டாம் …நம் பிடிவாதத்தை தளர்த்தி, கொள்கைகளில் கொஞ்சம் இறங்கி வந்து,ஈகோவை தூக்கி எறிந்தால் போதும்.நெருங்கிய நண்பர் வாழ்நாள் முழுக்க நம் உயர்வுக்கும் மகிழ்ச்சிக்கும் பாடுபடுவார். இன்றிலிருந்து மாறுவோம்.நட்பை காப்போம்.

-ரமேஷ் பிரபா

Related Posts