50 தொகுதிகளில் படுத்துக் கொண்டே ஜெயிப்பதற்கான வித்தை- ராமதாஸ்!

50 தொகுதிகளில் படுத்துக் கொண்டே ஜெயிப்பதற்கான வித்தை- ராமதாஸ்!

பா.ம.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நிறுவனர் ராமதாஸ் தலைமயில் திண்டிவனம் தைலாபுரம் இல்லத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் 216 நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் வெறும் 15 பேர் மட்டுமே பங்கேற்றனர்.ஆனாலும் பா.ம.க.வில் கோஷ்டி மோதல் இல்லை என்று ராமதாஸ் தெரிவித்தார்

பா.ம.க. சார்பில் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாநில இளைஞரணி தலைவராக தனது பேரன் பரசுராமன் முகுந்தனை ராமதாஸ் அறிவித்தார். இதற்கு அக்கட்சியின் தலைவர் அன்புமணி எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் இருவருக்கும் மேடையிலே மோதல் வெடித்தது.இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் ‘பா.ம.க. தலைவராக நானே செயல்படுவேன். அன்புமணி செயல் தலைவராக செயல்படுவார்’ என அறிவித்தார். இந்த அறிவிப்பு அன்புமணி ஆதரவாளர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் கடந்த 11-ந்தேதி மாமல்லபுரம் அருகே கட்சி சார்பில் சித்திரை முழு நிலவு மாநாடு நடைபெற்றது. இதில் ராமதாஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்களின் செயல்கள் குறித்து கடுமையாக எச்சரித்துப் பேசினார். கட்சிக்கு நேர்மையாகவும், உண்மையாகவும் உழைக்காவிட்டால் யாராக இருந்தாலும் பதவி பறிக்கப்படும். அது எம்.எல்.ஏ.வாக இருந்தாலும் சரி’ என்று கூறினார். மேலும் கட்சியில் எல்லாமே நான் தான். நான் இருக்கும் வரை நான் எடுப்பது தான் முடிவு என்றும் கண்டிப்போடு கூறினார். அவரது இந்த பேச்சு மீண்டும் அன்புமணி ஆதரவாளர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைவர்கள் ஆலோசனை கூட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) தைலாபுரம் தோட்டத்தில் நடைபெறும். இதில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று சமூக வலைதளத்தில் ராமதாஸ் பதிவு செய்தார். அடுத்தாண்டு நடக்க உள்ள சட்டசபை தேர்தலில் கூட்டணி குறித்து முடிவு செய்ய அவர் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்து வருகிறார். இந்நிலையில், தைலாபுரம் தோட்டத்தில் இன்று மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது.

216 பேரில் 15 பேர் மட்டும் பங்கேற்பு

கூட்டத்தில் 216 நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் 15 பேர் மட்டுமே பங்கேற்றனர். இதனால் பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் டாக்டர் ராமதாஸ் ஏற்பாட செய்த இன்றைய கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்ததாக கூறப்படுகிறது. இது கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டாக்டர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொள்ளவில்லை.

இந்நிலையில் நிருபர்கள் சந்திப்பில் ராமதாஸ் கூறியதாவது:

தமிழகத்தில் பாமக ஆளவேண்டும். அப்போதுதான் மக்கள் வறுமையிலிருந்து மீள்வார்கள். சமூகநீதி நிலைத்து நிற்கும். அதற்காகவே மாமல்லபுரத்தில் பிரமாண்ட கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. 50 தொகுதிகளில் நாம் வெற்றி பெற வேண்டும். ஆட்சி அமைக்க வேண்டும் என்று ஆலோசனை கூறினேன். அவர்களின் ஆலோசனையை கேட்டேன். களைப்போடு இருப்பதால் சிலர் கூட்டத்துக்கு வரவில்லை. கூட்டத்தை புறக்கணித்தவர்கள் மீது நடவடிக்கை தேவையில்லை. பா.ம.க.வில் கோஷ்டி மோதல் இல்லை. கூட்டத்தில் பங்கேற்க அன்புமணிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. தனித்து நின்றாலும் 40 தொகுதிகளில் வெற்றி பெற இலக்கு நிர்ணயம் செய்துள்ளோம்.சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும் சீற்றம் குறையாது. 50 தொகுதிகளில் படுத்துக் கொண்டே ஜெயிப்பதற்கான வித்தையை சொல்லிக் கொடுத்திருக்கிறேன். 50 தொகுதிகளில் வெற்றி பெறுவதற்கான யோசனைகளை பரிமாறிக் கொள்வதற்கான கூட்டம் நடந்தது. வரும் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பா.ம.க. கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும்.

இன்றையக் கூட்டத்தில் கெளரவத் தலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ., பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், சேலம் எம்.எல்.ஏ. அருள், வன்னியர் சங்க பொறுப்பாளர் ம.க.ஸ்டாலின், தலைமை நிலையச் செயலர் அன்பழகன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.இதற்கிடையே நாளை (17–ந் தேதி) மகளிர் அணி, மாணவர் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து 7 நாட்களுக்கு அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என தெரிய வந்துள்ளது.

error: Content is protected !!