மாமன் – விமர்சனம்!

தமிழ்நாட்டில் எந்த பகுதியில் சுப நிகழ்வு நடைபெற்றாலும் அதில் பெண் வழி தாய்மாமன் உறவு முதன்மை வகிக்கும். இதை வெளிக்காட்டும் வகையில் ஏகப்பட்ட தமிழ் சினிமாக்களில் எக்கச்சக்கமான காட்சிகள் வைக்கப்பட்டுள்ளது.அதிலும் குறிப்பாகக் கிழக்கு சீமையிலே படத்தில் வரும் மானூத்து மந்தையில என்னும் பாடல் இந்த நிகழ்வுகளில் முக்கிய இடம் பிடிக்கும். இதை எல்லாம் கவனத்தில் கொண்டே சின்னத்திரை எனப்படும் டிவிக்களின் தொடர்களில் இத்தகைய உறவு வைத்து முறைகளை வைத்து அன்றாடம் ஆறேழு தொடர்கள் வருகிறது. இச்சூழலில் சொந்த அக்கா மகன் மீது அளவுகடந்த பாசம் வைத்திருக்கும் தாய் மாமன் . அந்த பாசக்கார மாமனை விட்டு ஒரு நொடி கூட பிரியாத மருமகன் லட்டு பையன். இவ்விருவரால் நிகழும் பாசம், மகிழ்ச்சி, நெருடல், கோபம், பகை, ஊடல் என சகல மசாலாக்களையும் தூக்கலாகப் போட்டு பரிமாறி இருக்கும் நான் வெஜ் விருந்துதான் ‘மாமன்’ படம்.
அதாவது ஏகப்பட்ட சொந்த பந்தங்களுடன் வாழும் ஆசாமி நாயகன் இன்பா ( பரோட்டா சூரி). தன் அக்கா கிரிஜா (ஸ்வாசிகா) மீது கொள்ளை பிரியம் வைத்திருக்கும் அவர், அக்காவுக்கு பத்து ஆண்டுகள் கழித்து பிறக்கும் பிள்ளை மீதும் பிரியத்தை கொட்டுகிறார். ஆண்டுகள் உருண்டோடிய காலச் சூழலில் மாமன் – மாப்பிள்ளை பிணைப்பு, அவர்களின் அலப்பறைகள் அதிகரித்துக் கொண்டே போகிறது. அதிலும், லவ் மேரேஜ் செய்து கொண்ட மாமா இன்பா மற்றும் புது அத்தை ரேகாவுக்கு (ஐஸ்வர்ய லக்ஷ்மி) இடையே பெரும் விரிசல் விழுந்து, அதனைத் தொடர்ந்து குடும்பத்துக்குள் வரும் சண்டைகள் என களேபரமாகி விடுகிறது. ஒரு சூழலில் மனைவியா? மருகனுடனான அக்கா குடும்பமா? என்ற இக்கட்டு ஏற்பட பரோட்டா சூரி எடுக்கும் முடிவு என்ன? அது வரை நிகழ்ந்த கோபங்களும் சண்டைகளும் சரியானதா? என்பதை விவரிப்புதான் மாமன் படக் கதை.
பரோட்டா சூரியாகப்பட்டவர் உதயநிதி மகன் நேமான இன்பா என்ற பெயரில் ஸோலோ ஹீரோவாக நடித்து வந்திருக்கும் படம் மாமன். முன்னதாக அவர் முக்கிய பாத்திரங்களில் நடித்த விடுதலை, கருடன் போன்ற படங்களில் விஜய் சேதுபதி, சசிகுமார் போன்ற ஹீரோக்கள் நடித்து அவருக்கு கைகொடுத்திருந்தனர். இந்த படத்தில் விமல் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தாலும் ஒன்றிரண்டு சீன்களில் மட்டுமே நடித்திருப்பதால் மாமன் படம் முழுவதையும் சூரி தன் தோளில் சுமந்திருக்கிறார். கதையையும் சூரியே எழுதி உள்ளார் என்பது தனி செய்தி.ஒரு சண்டைக் காட்சியில் நடித்திருக்கிறார். அதில் கொஞ்சம் ஸ்டைலும் காட்டி ஓகே ஆகிவிடுகிறாராக்கும். ஆனால் உணர்ச்சிவசப்படும் காட்சிகளில் சிவாஜிக்கு பதில் மேஜர் சுந்தரராஜனை நினைத்து நடித்து இருப்பதால் ஒட்டாமல் போய் விடுவதையும் சொல்லியே ஆக வேண்டும். பரோட்டா சூரியின் ஒய்ஃப் ரோலில் நடித்திருக்கும் ஐஸ்வர்யா லட்சுமி, மனைவிகளின் எதிர்பார்ப்பையும், ஏமாற்றத்தையும் தனது நடிப்பில் நேர்த்தியாக வெளிப்படுத்தியிருக்கிறார். குடும்பம் மீது அக்கறை காட்டும் ஆண்கள், மனைவி மீது காட்டவில்லை என்ற பெரும்பாலான பெண்களின் கோபத்தை தனது ஆக்ரோஷமான நடிப்பு மூலம் வெளிப்படுத்தி கைதட்டல் பெறுகிறார்.
முந்தானையை போற்றும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ராஜ்கிரணின் கதாபாத்திரமும், அவரது திரை இருப்பும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. ‘லப்பர் பந்து’ படத்திற்குப் பிறகு மீண்டும் ஒரு அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்து பார்வையாளர்களை கவர்ந்திருக்கிறார் சுவாஷிகா. சூரியின் அக்காவாக நடித்திருக்கும் அவர் கண்கள் மூலமாகவே பல உணர்வுகளை வெளிப்படுத்தி அடடே டொல்ல வைத்து விடுகிறார். பாபா பாஸ்கர், சிறுவன் பிரகீத் சிவன், பால சரவணன், ஜெயப்பிரகாஷ், விஜி சந்திரசேகர், கீதா கைலாசம், சாயா தேவி, நிகிலா சங்கர் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் பலரும் சினிமாவை ட்ராமாவாக்க முயன்றிருப்பது அப்பட்டமாக தெரிகிறது.
மியூசிக் டைரக்டர் ஹேசம் அப்துல் வாகப் இசையில் பாடல்கள் இனிமை. பின்னணி இசை அதிகம் சத்தம் இல்லாமல் அளவாக பயணித்திருக்கிறது. கேமராமேன்
தினேஷ் புருஷோத்தமனின் ஒளிப்பதிவு நேர்த்தி. எடிட்டர் கணேஷ் சிவாவின் படத்தொகுப்பு போதிய அக்கற காட்டாமை மெல்லிதாக புலப்படுகிறது. படம் முழுவதும் சின்னத்திரைசாயலை போக்க தவறி விட்டார்.
டைரக்டர் பிரசாந்த் பாண்டிராஜ் சென்டிமென்ட்டை பிழிய பிழிய கொடுத்து ரசிகனை மட்டை ஆக்கி விட்டாரோ என்று தோன்றினாலும் குடும்ப உறவுகளின் உண்மைகளை வெட்ட வெளிச்சமாக்கி இருப்பதில் ஜெயித்து விட்டார்.இதைப்பார்த்து சிலர் திருத்தவும் செய்யலாம், சிலர் கூட்டு குடும்பத்திலிருந்து பீய்த்துக் கொண்டு ஓடவும் செய்யலாம்.
மொத்தத்தில் மாமன் = மோசமில்லை
மார்க் 2.75/5